நீங்கள் திராவிடத்தின் மீதான நம்பிக்கையை எப்பொழுது இழந்தீர்கள்? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 01,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: பள்ளி படிப்பில், பள்ளி இறுதி வகுப்பு (11) படிக்கும் வரையிலும்கூட, நான் தமிழ் வரலாறு குறித்து எதுவும் அறிந்து கொள்ள, பாடங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. கல்லூரி புகுமுக வகுப்பில் சிறப்புத் தமிழ் எடுத்துப் படிக்கும் போதுதான் திராவிடம் என்கிற சொல் தமிழுக்கு ஆரியர்கள் சுட்டிய பெயர் என்று புரிந்தது. அப்புறம் ஏன் நாம் திரவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று நமக்கான கட்சிகளுக்கு பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும் என்கிற கேள்வி எழுந்தது. அதற்கான விடையாக சப்பையான காரணங்களே இன்று வரை முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திராவிடத்திற்கு மாற்றாக ஏதாவது கட்சி முளைக்கும் என்று பார்த்தால், தினந்தந்தியின் நிறுவனர் ஆதித்தனார், நாம் தமிழர் கட்சி என்று ஒரு அமைப்பைத் தொடங்கிய போதும், அதை பேரளவாக வளர்க்க அவர் முனையவில்லை. அவர் திமுகவில் கரைந்து போனார். திமுகவிலிருந்து பிரிந்து கட்சி தொடங்கிய எம்ஜியார் அவர்களும் திராவிடத்தை விடவில்லை. திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் என்று கட்சி தொடங்கியது நல்ல வரவு என்று பார்த்தால் அவரும் திராவிடங்களின் பின்னால்தான் நின்று கொண்டிருக்கிறார். அதற்குப் பின்னால் வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தியது- மக்களை பேரளவாக ஈர்த்தது. அவர்களும் கட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு கவனம் ஈர்த்து வருகின்றார்களே அன்றி தமிழுக்கான, தமிழியலுக்கான வலுவான ஆதரவாளர்களாக இல்லை. விஜய்காந்த் தொடங்கிய கட்சியும் திராவிடத்தை விடவில்லை. தமிழ் குறித்தும் தமிழியல் குறித்தும் கூட்டங்களில் சிறப்பாக முழங்கி வந்த வைகோவும் திராவடத்திற்கே மறுமலர்ச்சி தந்தார். தற்போது சீமான் ஆதித்தனாரின் நாம்தமிழர் கட்சியை தமதாக்கிக் கொண்டு திராவிடத்தைத் தோலுரிப்பதில் பேரார்வம் காட்டி வருகின்றார். தமிழியலை மீட்பதற்கு முனைவாரா? கட்சத்தீவையெல்லாம் மீட்டு தமிழ்மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வு எல்லாம் வழங்குவாரா என்றெல்லாம் எதிர்பார்ப்பு தமிழ்மக்களிடையே நிலவி வருகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதாக பிழையான தலைப்பில் களமிறங்கிய திராவிட இயக்கங்கள், இந்திய விடுதலை பெற்ற கடந்த எழுபத்தி ஐந்து ஆண்டுகளில் இழந்த உரிமைகளே அதிகம். இன்றைக்கு வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்மண்ணில் அடாவடி காட்டுவது வரை மறக்குதிரை என்று நாம் தாவியேறிய திராவிடம் மண்குதிரையாக பார்ப்பனியத்தில் கரைந்து கொண்டிருக்கிறது. ஓ! இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று, நான் திராவிடத்தின் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டது, நடப்பு நிலையில் நிலவி வருகிற, வடமாநிலத் தொழிலாளர் ஆக்கிரமிப்புக்கு ஆதராவாக, பீகார் மாநில அரசு தமிழ்நாட்டிற்கு குழு அனுப்பியதில்தான். பிரித்தானியத்திலிருந்து ஆளப்பட்ட ஆட்சியில் இருந்து விடுபட்டுவிட்டோம் என்று எழுபத்தி ஐந்து ஆண்டுகளாகப் பீற்றிக் கொண்டிருக்கிற நிலையில், பீகாரிலிருந்து கூட நாம் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிற திராவிட மாடல் ஆட்சி நமக்கானது இல்லவே இல்லை என்பது முற்றாகப் புரிந்து விட்டது.
பாவாணர் கூட உலகத்தமிழ்க் கழகம் என்று தொடங்கினார் அது பாமர மக்களை நோக்கிச் செல்லவேயில்லை. பாவலரேறு பெருஞ்சித்திரனார் உலகத்தமிழின முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அதில் இணைந்த தமிழ் அறிஞர்கள் பணத்தின் மீதான தீண்டாமையை முன்னெடுத்த காரணம் பற்றி பாமர மக்களை நோக்கி அந்தக் கட்சியும் பயணிக்கவில்லை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,553.