உலகினர் பேரளவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நல்லது கெட்டது என்கிறவைகளோ, அவை தொடர்பான பாவம் புண்ணியம் என்பவைகளோ, உண்மைகளோ, கடவுள் தொடர்புடையவைகளோ அல்ல என்று இயல்கணக்கு அடிப்படையில் விளக்குவதற்காக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126: பசுவிடம் இருந்து கறந்தபால் நல்லது. ஒரு ஆறு மணிநேரம் கழித்து அந்தப்பாலை நல்லபால் என்று சொல்ல முடியாது. அதைக் காய்ச்சி வைத்திருந்தால் ஆறுமணி நேரத்திற்குப் பின்பும் அது நல்ல பாலாக இருக்கும். இன்னும் ஆறு மணி நேரம் கழித்து அது நல்ல பாலாக இருக்காது. அதைக் குளிரூட்டிப் பெட்டியில் வைத்து இன்னும் கொஞ்ச காலத்திற்கு நல்லபாலாக வைத்திருக்கலாம். கெட்டதற்கும் இதே கதைதான். கெட்டுப்போன பழச்சாற்றில் இருந்து சாராயம் தயாரிக்கலாம். அந்தச் சாராயத்தை மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தலாம். விலங்கு மற்றும் மனிதக் கழிவுகளை வேளாண்மையில் உரமாகப் பயன்படுத்துகிறோம். நாம் ஒருவருக்குக் கொடுப்பதை அது நல்லதா கெட்டதா என்று ஒருபோதும் நம்மால் தீர்மானிக்க முடியாது. அதை பெற்றவருக்கு அது புரிந்த தன்மையால்தான் அது நல்லதா கெட்டதா என்று நிறுவ முடியும். நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த நான் இரும்பு வேலைப்பாட்டுத் தொழிலில் ஈடுபட்டு இருந்த காலத்தில், என்னிடம் வேலை செய்பவர்களின் மனமகிழ்ச்சி கெட்டுவிடக் கூடாது என்பதில் நான் நூறு விழுக்காடு சரியாக இருப்பதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அடிக்கடி என் தொழிற்சாலையில் கூடுதல்நேரப்பணியை செய்ய வேண்டியிருக்கும். அப்போது, பொதுமுறைப்பணியான காலை 8.00 முதல் 5.00 வரைக்குப் பின்னரும் இரவு 9.00 வரை தொழிலாளர்களிடம் வேலை வாங்குவேன். அதற்குத் தனியாக சம்பளம் உண்டு. அவர்கள் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக தேநீர் மற்றும் சிறப்பு உணவுகளை என் மனைவி என் வீட்டிலேயே சமைத்து வழங்குவார். பல நாட்கள் பல மாதங்களுக்குப் பிறகுதான், தொழிலாளர் இருவர் பேசிக்கொண்டிருந்த பேச்சில் இருந்து, அவர்களுக்கு வீட்டில் உணவு சமைத்துக் கொடுப்பதை, அவர்கள் மீது செலுத்தும் ஆதிக்கமாக கருதுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்கு அப்புறம், சமைத்த உணவிற்கு மாற்றாக, தேநீர் மற்றும் சாப்பாட்டுக் காசு என்று ஒரு தொகையைக் கொடுக்கத் தொடங்கினேன். பலரின் சிறப்புநாட்களில், அவர்களால், ஆதரவற்றோர் இல்லங்களுக்குக் கொடுக்கப்படுகிற உணவுகள் பலநேரங்களில் நஞ்சாகி விடுவது உண்டு. நல்லவனான எனக்கு, ஏன், கெட்டதே கிடைக்கிறது? என்பது பலரின் புலம்பலாக இருக்கிறது. நல்லது கெட்டது என்பது ஒருபோதும் தங்கள் தீர்மானிப்பது அல்ல என்பதை யாரும் புரிந்து கொள்வது இல்லை. இதற்கு தீர்வாக மதங்கள் முன்னெடுக்கும், கர்மா என்கிற தலைப்பு அவர்களை மேலும் முட்டாள் ஆக்கும் வகைமையில் பேரளவாக உலா வந்து கொண்டு இருக்கிறது. ஒட்டுமொத்த உலகினரும் இதையே ஏற்கின்றனர். ஆமாம்! நீங்கள் இந்தப் பிறவியில் நல்லவர்தான். ஆனால் போன பிறவியில் நீங்கள் கெட்டவராக இருந்ததற்கான கர்மா உங்களைத் துரத்தி வருகிறது. அதற்கு இதுவெல்லாம் பரிகாரங்கள் என்று தனித்தனிக் கூட்டங்கள் தனித்தனியாக ஆயிரம் புனைவுக் கதைப்புகளை முன்னெடுக்கின்றன. கடவுள் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே! அந்தக் கடவுள் என்கிற தமிழ்ச்சொல்லை, அந்தக் கர்மாவிற்கும் அந்தப் பரிகாரங்களுக்கும், இந்தவகைத் தமிழ்க் கதையாடல்களிலும் பயன்படுத்துவது அறியாமையின் உச்சம் ஆகும். இதுவரை நமக்குக் கிடைத்தது அனைத்தும் கடவுளிடம் நாம் கேட்டது மட்டுமே என்று கடவுள் என்கிற தலைப்பில் தமிழ்முன்னோர் நமக்குத் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். நல்லவன் என்று உங்களை நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதற்காக கடவுள் எதையும் கொடுக்க முடியாது. கெட்டவன் என்று கருதி நீங்கள் யாரையாவது சுட்டிக்காட்டுவதற்காக அவருக்கும் கடவுள் எதையும் கொடுக்க முடியாது. ஏனெனில் அவைகள் இரண்டும் உண்மைகள் அல்லாத நிலையில் அவைகள் கடவுளில் எப்படிப் பதிவாக முடியும். கடவுளில் பதிவானால்தானே அந்த வகைக்கு கடவுள் நம்மை முயக்க முடியும். நல்லது கெட்டது என்கிற தலைப்புகள் உண்மை இல்லாத காரணம் பற்றி அந்த வகைகளுக்கு கடவுளால் எதுவும் கொடுக்க முடியாது. கடவுளிடம் நாம் கேட்பது கிடைக்கும். கடவுளிடம் நம்மைப்போல் இயங்குகிறவர்களுக்கு நாம் கொடுப்பதும், நமக்கு வேறு சிலரிடம் இருந்து கிடைக்கும். நம்மைப் போல் இயங்குகிறவர்கள் கடவுளில் கேட்டதை கடவுள் நம் மூலம் நிறைவேற்றித் தருகிறது. கடவுளின் அந்த ஒருங்கிணைப்பிற்கு பயன்பட்ட நமக்கு ஒன்றுக்குப் பத்தாக கடவுள் நமக்கு ஒருங்கிணைத்துத் தருகிறது. இந்தக் கொடுப்பதும் கேட்பதும்- உழைப்பு, அறிவு, பணம், பயணம், தொடர்புகள் என்பதாகவே கடவுளால் ஒருங்கிணைக்கவும் பரிமாறவும் படும். குடும்பக் காப்பு மந்திரம் கட்டுரையை விளங்கிக் கொண்டால் இதைப் புரிந்து கொள்ள முடியும். நல்லது கெட்டது உண்மையல்ல நிழல் என்கிற நிலையில் அவைகளால் தரப்படுவதாக சொல்லப்படுகிற பாவம் புண்ணியமும் உண்மைகள் அல்ல. நல்லது கெட்டது கடவுளில் பதிவாக முடியாது என்பது போல, பாவம் புண்ணியமும் கடவுளில் பதிவாகி அந்த நிழல்களுக்காக நமக்கு எந்த உண்மைகளையும் கடவுளால் கொடுக்க முடியாது. கடவுளிடம் நாம் கேட்பது கிடைக்கும். கடவுளிடம் நம்மைப்போல் இயங்குகிறவர்களுக்கு நாம் கொடுப்பதும், நமக்கு வேறு சிலரிடம் இருந்து கிடைக்கும். என்பதைப் புரிந்து கொண்டு கடவுளிடம் நிறைய நிறைய கேட்போம். நம்மிடம் உதவி கேட்டு வருகிறவர்களுக்கு இயன்றவரை கொடுப்போம். ஒவ்வொரு தற்பரை நேரமும் நாம் வளர்ந்துகொண்டே இருக்க, நமது நேரடியான இந்த நடவடிக்கைகள் போதும். நம் வளர்ச்சிக்கு எந்த வழிகாட்டிகளோடும் அலைந்து திரிய வேண்டாம். பாவம், புண்ணியம் நல்லது கெட்டது என்று நம்மை குற்றப்படுத்திக் கொள்ள வேண்டாம். நம்மைக் குற்றப்படுத்திக் கொள்வதில் நாம் ஒருபோதும் வளரவே முடியாது. அதை நமக்குக் கருத்துப்பரப்புதல் செய்கிற பணியில் இருப்பவர்களுக்கே வளர்ச்சியாக அமையும்.
தன்மையான் ஆளப் படும்.
என்று பேசும் இயல்கணக்கு கொண்டாடும் திருக்குறள்.
கடவுள் என்கிற சொல்லில் தமிழ்முன்னோர் பொதித்திருக்கிற பொருளில் உலகில் எந்த மொழியும் எந்தச் சொல்லையும் கொண்டிருக்கவில்லை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,041.