தமிழர் முன்னேற்றத்திற்கு, ஒளவைப் பெருமாட்டியின் பதின்மூன்று கட்டளைகளை- அறம் செய்வதில் தொடங்கி ஒப்புரவு ஒழுகுதல் வரையிலும், அவைகளுக்கும் அடுத்து பார்க்க இருக்கிற இரண்டு கட்டளைகளின் அடிப்படையில் நமது தேவைகள் எதுவாக இருந்தாலும் கடவுளிடம் நேரடியாக கேட்பதே ஓதுவது ஆகும். 29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: 'ஓதுவதை ஒழிய வேண்டாம்; தொடர்ந்து ஓது' என்று ஒளவையார், தமிழ்மக்களுக்குப் பணிக்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது என்பதை வரலாற்று அடிப்படையில் பார்த்தால் இன்றைக்கு நாம் நமது தேவைகள் எதுவாக இருந்தாலும் கடவுளிடம் நேரடியாக கேட்பது என்கிற ஓதுவதை கைவிட்டு, கடவுள் நம்மைக் கைவிடக் காரணமாகிவிட்டோம் என்பதை உணர முடியும். ஓதுவது என்பது நம்முடைய தலைஎழுத்தை நாமே எழுதிக் கொள்வதற்கு கடவுளிடம் நேரடியாக பேசுவது ஆகும். அணை கட்டுதல், திருமணம், கப்பல்கட்டுதல் என்று உலகின் பலவற்றுக்கு முதன்மைச் சொந்தக்காரன் ஆன தமிழன்- கோயில் கட்டுவதிலும் முதன்மையானவனாக உலகின் முதல்கோயிலுக்குச் சொந்தக்காரன் தமிழன் என்றால் அது மிகையில்லை. கடவுள் என்கிற ஆற்றல் மூலத்திடம் நேரடியாகப் பேசிக் கேட்டால் நாம் கேட்டது அனைத்தும் கிடைக்கும் என்கிற அடிப்படையை மந்திரம் என்ற மூன்றாவது முன்னேற்றக்கலையாக முன்னெடுத்தவன் தமிழன். மற்ற இரண்டில் ஒன்று சோதிடம், சாதகம் உள்ளிட்ட நிமித்தகம். இரண்டாவது கணியம் ஆகும். கணியத்தில் இருந்து மேம்பட்டதுதான் இந்த மந்திரக்கலை. மந்திரக்கலை என்பது கடவுளிடம் நாம் நேரடியாக பேசுவது ஆகும். கடவுளோடு நாம் நேரடியாகப் பேச ஓர் அமைதியான இடமாக தமிழன் கட்டுமானம் செய்ததுதான் கோயில். அந்தக் கோயில் தொடர்பாக இன்றும் தொடருகிற சொற்களில் இருந்துதான் தமிழர் கோயில் தொடர்பில் தமிழன்- தொடக்கத்தில் முன்னெடுத்திருந்த நடைமுறைகளைக் கட்டமைக்க முடியும். கோயில் அயலவர் கைகளுக்கு மாறிய, பிறகு நிறைய புதிய நடைமுறைகளும் அவற்றுக்கான சமஸ்கிருதச் சொற்களும் முன்னெடுக்கப்பட்டு இன்றும் நடைமுறையில் தொடர்கின்றன. அவற்றை முற்றாக புறக்கணித்தால் மட்டுமே நமது கோயில் வரலாற்றை மீட்க முடியும். கோயில் தொடர்பான தமிழ்ச்சொற்கள் என்னென்ன? கோயில், கோபுரம், நடுகல், கருவறை, பீடம், பூவனம், மடப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, அம்பலம், அம்பலவாணன், பூசை, பூசாரி, சங்கோதி, மணியாட்டி, அகல்விளக்கு இப்படி நிறைய சொற்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான தமிழர் முன்னேற முடியாதிருக்கும் வகைக்கு- கடவுளிடம் நாம் கேட்டு கிடைக்காமல் போனது ஏன்? என்கிற வினாவிற்கு விடைகளையும் தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். முதலாவது கமுக்கம் உடைத்தல் ஆகும். இரண்டாவது காலம் நிர்பந்தித்தல் ஆகும். மூன்றாவது முறையிடுவதும் புலம்புவதும் ஆகும். உலகில் தமிழனுக்கு மட்டும் எதுகேட்டாலும் கிடைக்கமாட்டேன் என்கிறது என்பதற்கு என்ன காரணம் என்பதை இந்த மூன்றையும் மட்டுமே நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை இன்றைக்கு நாம் கோயில்களில் முன்னெடுத்துவரும் இன்றைய நடைமுறைகளைப் பொருத்திப் பார்த்தாலே தெள்ளத்தெளிவாக புரிந்து விடும். முதலாவதாக- நாம் நேரடியாக கடவுளிடம் பேசாமல் அர்ச்சகரிடம் சொல்லி கடவுளிடம் விண்ணப்பிக்கும் முறையால், கடவுளுக்கும் நமக்குமான கமுக்கத்தை உடைத்தெறிந்து விட்டோம் என்பது புரிகிறது இல்லையா? அர்ச்சகர் தமிழ்ச்சொல் அல்ல; அதன் தொடர்பான நடைமுறையும்- கோயில் அயலவர் கைகளுக்கு மாறியதை பறைசாற்றும். இரண்டாவதாக- நாம் கேட்பது எல்லாமே கால நிர்பந்தத்திற்கானதாகவேதான் இருக்கிறது. நாம் பல பல கோயில்களுக்கு சென்று வந்து, இந்தக் கோயில் வேண்டுதலிலாவது இந்தக் காலத்திற்குள் கிடைத்துவிட்டால், இனி இந்தக் கோயிலையே தொடரலாம் என்கிற நம்பிக்கையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். கடவுள் குறித்த புரிதலை தமிழர்கள் முற்றாகத் தொலைத்துவிட்டு வழிகாட்டிகளையே நம்பியும், அடிக்கடி மாற்றியும் இயங்கிக் கொண்டிருக்கிறோம். மூன்றாவதாக- நாம்தாம் கருவறைக்குள்ளேயே செல்வதில்லையே. அப்புறம் எப்படி நாம் பேசுவது கடவுளிடம் நேரடியாகக் கேட்பதாக இருக்க முடியும். இன்றைய தமிழர் மாய்ந்து மாய்ந்து எத்தனையோ கோயிலுக்குச் சென்றாலும் அத்தனையிலும் வழிகாட்டிகளால் வரிசையில் நிறுத்தப்பட்டு கடவுளுக்கு நமது புலம்பலும், முறையீடும் மட்டுந்தானே சென்று சேருகிறது. ஆக தமிழ் மக்களின் சிறு சிறு வெற்றிகள் எல்லாம் அவர்கள் கோயில் தவிர்த்து மற்ற மற்ற இடங்களில் இது வேண்டும் என்று கடவுளிடம் உறுதியாக கேட்டிருந்தது மட்டுமே கிடைத்து வருகிறது. தமிழன் கட்டிய அத்தனை கோயிலும் தமிழனுக்கு அன்னியமாகவே பாடாற்றி வருகின்றன. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று, தமிழன் எல்லா ஊர்களிலும் கோயில் கட்டியது, எந்த கோயில் பெரியது என்று போட்டி நடத்துவற்கு ஆனது அல்ல. ஓதுவது ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு அடிப்படை என்கிற காரணம்பற்றி- அவன் கோயில் தேடி எங்கும் அலைய வேண்டாம் என்பதற்கான காரணம்பற்றி. ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு வாழ்நாள் முழுவதும் ஒரே கோயில் போதும். எல்லா ஊருக்கும் கோயில் என்பது எல்லோருக்கும் கோயில் என்பதற்காகவே. நெருக்கடியைத் தவிர்ப்பதற்காகவே. புறக்கணிப்பை அகற்றுவதற்காகவே. கடவுள்- கடந்தும் உள்ளும் இருப்பது என்கிற அடிப்படையாக, பகுதி புதைந்து பகுதி வெளியில் அமையும் நடுகல்லை கோயிலின் உள்ளடையாளம் ஆக்கினர் தமிழ்முன்னோர். கோபுரத்தை அதே வகைக்கு வெளி அடையாளம் ஆக்கினர் தமிழ்முன்னோர். நடுகல்லுக்குப் பூசாற்றுவது பூசை ஆகும். நடுகல்லுக்கு ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சென்று பூசைசெய்து கடவுளிடம் நமது தேவைகளை நேரடியாக கேட்டு வரலாம். பூசாரி அவருக்காக மட்டுமே கருவறைக்குள் சென்று நடுகல்லுக்குப் பூசை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு அவர் தானாவதி அல்லர். பூசாரி பூவுக்கான நிருவாகி ஆவார். அவரின் பணி- பூவனத்தில் இருந்து பூவை சேமித்து வைப்பதும் கருவறையில் குவியும் பூக்களை எருக்குழியில் சேர்ப்பது மட்டுமே ஆகும். நடுகல் நாட்டப்பட்ட கருவறை கடவுளுக்கும் ஒருவருக்குமான கமுக்கம் பேணும் வகைக்கானது ஆகும். உள்ளே வெளிச்சம் இருந்தால், பீடத்தில் அகல்விளக்கு இல்லாமல் இருந்தால் கருவறைக்குள் ஒருவர் இருக்கிறார் என்று பொருள். ஒவ்வொருவரும் நடுகல்லை பூசித்து ஒதச் செல்லும்போது பீடத்தில் இருக்கிற அகல்விளக்கை எடுத்துக் கொண்டு கருவறைக்குள் செல்ல வேண்டும். வெளியில் வந்ததும் அந்த விளக்கை பீடத்தில் வைத்து விட வேண்டும். கூட்டத்தின் அளவு அடிப்படையில் ஒவ்வொருவரும் ஓதலுக்கு நேரம் எடுத்துக் கொள்ளலாம். கூடுதல் நேரம் எடுக்கும்போது மணியாட்டி மணியை ஒலிக்க செய்வார். சங்கோதி சங்கத்தை முழக்குவார். கூடுதலானவர்கள் காத்திருந்தால் அம்பலத்தில் அவர்கள் அமர்த்தப்பட்டு கலைநிகழ்வுகள் முன்னெடுக்கப்படும். அம்பலவாணன் இதை நிருவகிப்பார். கூட்டம் அடுத்த வேளையைத் தாண்டியும் குறையாது என்று கருதினால் மடைபள்ளி திறக்கப்படும்; உணவு சமைத்துப் பரிமாறப்படும். இதையெல்லாம் அந்தக் கோயிலின் அம்பலவாணன் நிருவகிப்பார். மடைப்பள்ளியும், தமிழ்ப்பள்ளியும் கோயிலின் அங்கம் ஆகும். இந்தக் காலக்கட்டத்தில் ஆரியர் கோயிலில் நுழைக்கப்பட முன்னெடுக்கப்பட்ட மாற்றத்தில் அர்ச்சகர், ஆராதனை, அபிஷேகம், பிரஸாதம் ஆகிய சமஸ்கிருத சொல்லாக்கங்கள் எல்லாம் தேவைப்பட்டன. தமிழர் கோயிலுக்கு இன்று வரை அன்னயமாகித் தொடர்கின்றனர். அன்றைக்கு ஒளவையார் ஓதுவது ஒழியேல் என்று தெரிவித்தும் கூட தமிழரில் யாரும் விழிப்படையவில்லை. மந்திரத்தை அயலவர்களுக்குத் தொலைத்தார்கள். தங்கள் தலையெழுத்தை அயலவர் எழுதித்தர ஒப்புதல் தந்தார்கள். இன்றைக்கு நமது விதி அயலவர்களால் எழுதப்பட்டு நாம் வெற்றுப்பிழைப்பு நடத்திவருகிறோம். இன்றைக்கு நாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும், தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என்றும், ஆராதனை, அபிஷேகம், பிரஸாதம் போன்ற சொற்களைத் தமிழ்ப்படுத்தியும் வெற்று மடைமாற்றத்தை முன்னெடுத்து வருகிறோம். தமிழன் கடவுளை நேரடியாக பூசித்து ஓதுவது மட்டுமே தமிழர் தலையெழுத்தை தமிழரே எழுதிக் கொள்ளும் வகைக்கு கடவுளை இயக்கும் வகைக்கான நிரந்தரத் தீர்வு ஆக முடியும். இந்த வகைக்கு தமிழ்அமைப்புகளோ, தனிமனிதர்களோ சொந்த இடத்தில் கோயில் கட்டி அதற்குள் தமிழ்வழிப்பள்ளிகளையும் முன்னெடுக்க முனைந்தால் அது தமிழர்க்கு பெருவெற்றியாக அமையும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். பங்களிக்கவும் காத்திருக்கிறேன். ஒளவைப் பெருமாட்டியின் பதின்மூன்று கட்டளைகள்:- எது கேட்டாலும் உங்களுக்கு கிடைக்கும். கேட்காமல் இருப்பது நீங்கள்தான் என்று நம்முடைய தலைஎழுத்தை வெற்றிக்கோ தோல்விக்கோ அமைத்துக்கொள்வது நாம்தாம் என்று தெரிவிக்கிறார். அதில் நமக்குத் தேவையான பொருட்களை (விசும்பில்) கேட்டுப்பெற, நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாக திண்ணியராகுக என்கிறார். திருவள்ளுவர் தெரிவிக்கிற அந்த திண்ணியராதலுக்கான நடைமுறை என்ன என்பதை ஒளவைப் பெருமாட்டி தனது பனிரெண்டு உயிரெழுத்துத்துத் தொடர்களிலும் ஒரு ஆய்த எழுத்துத் தொடரிலும் அமைத்து, திண்ணியராதலுக்கு நமக்கான பதின்மூன்று கட்டளைகளைத் தருகிறார். 1. அறம் செய விரும்பு 2. ஆறுவது சினம் 3. இயல்வது கரவேல் 4. ஈவது விலக்கேல் 5. உடையது விளம்பேல் 6. ஊக்கமது கைவிடேல் 7. எண் எழுத்து இகழேல் 8. ஏற்பது இகழ்ச்சி 9. ஐயம் இட்டு உண் 10. ஒப்புரவு ஒழுகு 11. ஓதுவது ஒழியேல் 12. ஒளவியம் பேசேல் 13. அஃகஞ் சுருக்கேல்
திருவள்ளுவப் பெருந்தகை, நமக்கான தலைஎழுத்தை நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதாக,
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்
என்ற குறளில், தெரிவிக்கிறார்.
உங்கள் தலை எழுத்தை நீங்களே எழுதிக் கொள்கின்றீர் என்பதே தமிழ்முன்னோரின் தெளிந்த முடிவு. அதனால் உங்களுக்கான அறத்தை நீங்களே செய்ய விரும்புங்கள்.
உங்களுக்கு யார்யாரோ கெடுதி செய்வதாக, நீங்கள் கொள்ளுகிற சினத்தால், எதையும் உங்களால் மாற்றிவிட முடியாது. சினமும் ஆறிவிடும். ஆனால் உங்கள் புலம்பல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த புலம்பலே உங்களுக்கான விதியாக, நீங்கள் விரும்புதாக விசும்பு நினைத்துக் கொண்டு, உங்களை புலம்பலிலேயே இருத்திவிடும். சினம் கொள்வதை நிறுத்துங்கள் என்பதே இதன் விளக்கம் ஆகும்.
உங்களால் முடியும் என்கிற உங்கள் திறமைகளை மறைக்காதீர்கள்ள் மறக்காதீர்கள். முடிந்ததை மறைக்கக் கூடாது என்பதையே இயல்வது கரவேல் என்கிறார் ஒளவை பெருமகள்.
எக்காரணம் பற்றியும் கொடுப்பதை விலக்கவேண்டாம். நீங்கள் ஒருவருக்கு உதவும் போது, அதில் உள்ள ஈவது என்கிற தலைப்பு உங்களின் ஈதல் ஒன்றுக்குப் பத்தாக படர்க்கையில் கிடைக்கச் செய்யும்.
உங்களுக்குள்ள வலிமைச் சிறப்புகளைப் பலரும் அறியும்படி பெருமையாகப் பேசாதே.
உங்களுக்குள்ள மெல்லியல்பாடு எதையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.
நீங்கள் செய்த அறத்தின் விளைவுக்கான காலத்தை ஒருபோதும் தீர்மானிக்க முடியாது. காலம் கருதியிருந்து, பயன் தள்ளிப்போகும் நிலையில், ஊக்கத்தைக் கைவிட வேண்டாம்.
நீங்கள் உங்களுக்காக செய்யும் அறத்திற்கு (விதி) எண்ணமும் மொழியும் அடிப்படையாகும். அயல்களை மலைத்து உன்மொழியை ஒருபோதும் இகழவேண்டாம். மொழிப்பற்றை ஒருபோதும் விடாதே.
உனக்கான உணவு, உனக்கான மொழி, உனக்கான பண்பாடு எதையும் பிச்சையாக ஏற்பது உனக்கான இழிவு ஆகும்.
இந்தப் (நமது விளைவிப்பு) பொருளை ஏன் உண்ணவேண்டும்? இந்தப் பொருளின் பின்னால் இருக்கிற ஆதாயம் என்ன? அந்தப் (அயல் விளைவிப்பு) பொருளை ஏன் உண்ணக்கூடாது? அதில் இருக்கிற உண்ணவைப்பு அரசியல் என்ன? என்றெல்லாம் ஐயத்தை முன்னிறுத்தி தெளிவு பெற்று உண்பது உடல் நலத்திற்கானதும், இன நலத்திற்கானதும் ஆகும்.
ஒப்புரவு என்பது- பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்கிற சமூகநீதி ஆகும். அதில் விட்டுக் கொடுத்தல் இல்லாமல் ஒழுக வேண்டும்.
அறம் செய்வதில் தொடங்கி ஒப்புரவு ஒழுகுதல் வரையிலும், அடுத்து பார்க்க இருக்கிற இரண்டு கட்டளைகளின் அடிப்படையில் நமது தேவைகள் எதுவாக இருந்தாலும் கடவுளிடம் நேரடியாக கேட்பதே ஓதுவது ஆகும்.
ஒருவரிடமும் பொறாமை கொண்டு விடாதே. உங்கள் பொறாமையை அவர்கள் புறக்கணிக்கும் போது, சிறப்பாகச் சொன்னால் பொறுத்தருளும் போது உங்கள் பொறாமை உங்களை நோக்கித் திரும்பிவிடும்.
உயிர் எழுத்துக்களில் சொல்லபபட்ட இந்த பனிரெண்டு கட்டளைகளும் அறிவு அல்லது அறம் அல்லது உயிர் சார்ந்தது. உயிர்வாழ கட்டாயம் மெய்யும் தேவை. உங்கள் உடம்பை காக்க உரிய நேரத்தில் கட்டாயம் உணவு உண்ண வேண்டும். எக்காரணம் பற்றியும் வயிற்றை காயப்போடாதே.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,371.