Show all

மந்திரம். தொடர்கட்டுரை: 13.உங்கள் வாழ்க்கையை வளமையாக்கிக் கொள்ள முன்னெடுக்க வேண்டிய ஒன்பது மந்திரங்கள்

மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். மந்திரம் மாயக்கலை அல்ல. மந்திரம் என்பது மாயக்கலை போல வேறு மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது, மலைப்போடு தமிழிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பே.
 
15,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: மந்திரம் என்பது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது கலை. மற்ற இரண்டு கலைகள் ஒன்று சோதிடம் சாதகம் உள்ளடங்கிய நிமித்தகம், இரண்டு கணியக்கலை ஆகும். 

உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும் நீங்கள் முன்னெடுக்கும் நினைப்பில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில் மீட்டப்படும். அதை நீங்கள் நிறைவேற்றிதரும் வகைக்கு உங்களுக்கான வெற்றி சாத்தியமாகும்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
எனும் திருக்குறள் கல்வி என்னும் அதிகாரத்தில் எண்ணையும் எழுத்தையும் கண்போல கொண்டாட வேண்டும் என்பதற்கான செய்தியை சொல்ல வருகிற குறள்.

எழுத்து என்று வருகிற போது அதில் சொல்லப்பட வேண்டிய செய்திகள் எல்லை இல்லாமல் விரிந்து கொண்டே போகும். ஆனால் எண் என்று வருகிற போது, எவ்வளவு பெரிய எண்ணுக்கும் அடிப்படையான எண்கள் ஒன்பது மற்றும் சுழியம் மட்டுமே.

எழுத்தடிப்படையில் எல்லையில்லாத செய்திகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும். அதைத்தாம் உலக மதங்கள் செய்து கொண்டிருக்கின்றன. 

உலகினருக்கு தனி மனிதச் சான்றோர் முன்னெடுத்;த மதங்கள் உண்டு. கூட்டுச்சிந்தனையில் உருவாக்கிக் கொள்ளப்படுகிற காப்பியம் கிடையாது. 

தமிழர்கள்- கூட்டுச்சிந்தனையில் உருவாக்கிக் கொள்ளப்படுகிற காப்பியம் கொண்டிருக்கிற நிலையில், தமிழர்களுக்கு மதம் தேவைப்படவில்லை.

உங்கள் வாழ்க்கையை வளமையாக்கிக் கொள்ள எண்அடிப்படையில், அடிப்படை எண்கள் கொண்டிருக்கிற ஒன்பது இயல்புகளுக்கு ஒன்பது மந்திரங்கள் போதுமானது.

அந்த ஒன்பது மந்திரங்களின் தலைப்புகள் குறித்து மட்டும் இந்தக் கட்டுரையில் காண்போம். விரிவாக தனித் தனித் கட்டுரைகளாகத் தொடர்வோம். 

முதல் இரண்டு மந்திரங்கள் நம்முடைய தாய் நமக்கு வழங்கியுள்ள முதல் உடைமைகளுக்கானது. அந்த முதல் உடைமைகள் ஒன்று தமிழ். இரண்டாவது நமது உடம்பு. 

நமது தாய் நமக்குத் தந்த முதல் உடைமையான தமிழுக்கு அன்றாடம் வாழ்த்து தெரிவிப்பதும் நன்றி பாராட்டுவதும் முதலாவது மந்திரம் ஆகும்.

நமது தாய் நமக்குத் தந்த முதல் உடைமையான நம் உடம்பிற்கு அன்றாடம் வாழ்த்து தெரிவிப்பதும் நன்றி பாராட்டுவதும் இரண்டாவது மந்திரம் ஆகும்.

நமக்கு தலைவனாகவோ தலைவியாக அதிகாரம் வழங்குகிற அமைப்பான, உலகினருக்கு தமிழர் கொடையான, நமது குடும்பத்திற்கு அன்றாடம் வாழ்த்து தெரிவிப்பதும் நன்றி பாராட்டுவதும் மூன்றாவது மந்திரம் ஆகும். 

நான்காவதாக அமைவது பயணம். நமது வாழ்க்கையை வளமையாக்கிக் கொள்ளும் முன்னெடுப்பில் பயணம் முதன்மைத்துவமானதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் வெறுமனே நடையாக மட்டுமல்லாமல், நாம் உருவாக்கிக் கொண்ட அதிவேக கருவிகளில் அமர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. 

அந்தப் பயணம் பாதுகாப்பாக அமைய, கட்டாயம் அந்த பயணப் பாதுகாப்பிற்கு ஒரு மந்திரம் கட்டி ஓதிடத் தேவையுள்ளது. 

அடுத்ததாக உங்கள் கலைத்திறன். உங்கள் கலைத்திறனால் தாம் நீங்கள் நிமிர்ந்து நிற்க முடியும். மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்க முடியும். உங்கள் கலைத்திறனை கொண்டாடும் கூட்டத்தை உருவாக்க முடியும். 

உங்கள் கலைத்திறம் என்பது தோற்றம், உடலசைவு, நடிப்பு, பேச்சு, பாட்டு, எழுத்து, தனித்திறன் என்று எல்லாத் துறைகளிலும் தேவைப்படுவதானது. 

ஆகவே உங்கள் கலைத்திறனுக்கு ஒரு மந்திரம் கட்டி அன்றாடம் ஓதிடத் தேவையுள்ளது.

ஆறாவது: தொழில், வணிகம், உழவு, நிருவாகக் கூலியாகவோ, உடலுழைப்புக் கூலியாகவோ நீங்கள் செய்யும் வேலை. இவற்றுள் நீங்கள் ஈடுபட்டுள்ள வகைக்கும் ஒரு மந்திரம் கட்டி அன்றாடம் ஓதிடத் தேவையுள்ளது.

ஏழாவது: பொருளாதாரம், செல்வம், சொத்து, வசதிகள், கருவிகள், நகைகள், வண்டிகள். இவைகள் எல்லாம் உங்களுக்குச் சிறப்பாக அமைய  ஒரு மந்திரம் கட்டி அன்றாடம் ஓதிடத் தேவையுள்ளது.

எட்டாவது: உங்கள் சமுதாயம், இனம், என்று கூட்டம் சார்ந்தது. உங்களுக்கு அந்தக் கூட்டம், அந்தக் கூட்டத்தில் நீங்கள் என்ற வகைமைக்கு ஒரு மந்திரம் கட்டி அன்றாடம் ஓதிடத் தேவையுள்ளது.

ஒன்பதாவது: உங்கள் வழித்தடத்தில் காணப்படுகிற போட்டி, பொறாமை, வசவுகள், ஆகிய பதிவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கண்ணூறு நீக்கல்; அல்லது கண்ணூறு கழித்தல் என்கிற மந்திரம் பேரளவாக தமிழர் நடைமுறையில் இருந்து கொண்டுதாம் இருக்கிறது. 

அந்த நடைமுறையை பெரும்பதிவாக கொண்டுவிடாமலும், புறக்கணிக்காமலும் இருக்க வேண்டும் என்பதே நீங்கள் ஒன்பதாவதாக முன்னெடுக்க வேண்டியதும், இதற்காக மந்திரம் கட்டி, அவ்வப்போது மாலை பொழுதுகளில் ஓத வேண்டியதும் ஆன கட்டாயம் ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,202.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.