Show all

என்பேத்தி உருவாக்கிய ஒருபுதிய விளையாட்டு

என்னிடம் விளையாடும் போதுமட்டும், என் பேத்தி புது புது விளையாட்டாகக் கேட்பாள். நேற்று அப்படி என்னிடம் கேட்கும்போது, ஒருபுதிய விளையாட்டை உருவாக்கத் தொடங்கியதுதான் நான். ஆனால் அந்தப் புதிய விளையாட்டின் பெரும்பகுதிகளை அவளே முடித்துக் கொடுத்தாள்.

09,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: என் பேத்தி உருவாக்கிய ஒரு புதிய விளையாட்டிற்கு- அவள் காசு போலவும், பயணச்சீட்டு போலவும், சுங்கச் சீட்டு போலவும், சான்றிதழ் போலவும், அடிக்கடி பயன்படுத்தி விளையாடும,; அந்த நூறு பழைய சந்திப்பு அட்டைகள் (விசிட்டிங்கார்டு) எடுத்துக் கொள்ளப்பட்டன. 

அந்தச் சந்திப்பு அட்டைகளில், எழுதாத பின் பகுதியில், அவள் பெயர், அவள் தங்கையின் பெயர், அவள் அம்மாவின் பெயர், அவள் அப்பாவின் பெயர், அவள் அப்புச்சியின் பெயர், அவள் தாத்தாவான எனது பெயர் ஆகியவற்றை ஐந்து ஐந்து அட்டைகளில் எழுதிக் கொண்டாள்.

மதிப்பெண் குறிப்பதற்கு அவளின் கதம்ப ஏட்டில் (ரப்நோட்) ஆறு பேர்களுக்கும் பக்கம் ஒதுக்கி பெயர் எழுதிக் கொண்டாள். 

அந்த நூறு சந்திப்பு அட்டைகளையும் நன்றாகக் கலக்கி வைத்துக் கொண்டு, முதலாவது ஆட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையைக் கொடுத்தாள். அனைவருக்கும் கொடுத்து முடித்தவுடன், யாருக்கெல்லாம் அவரவர்கள் பெயர் வந்திருக்கிறது என்று கேட்டாள். அவளின் அம்மா எனக்கு வந்திருக்கிறது என்று காட்டினாள். கதம்ப ஏட்டில் அவர்களுக்கு ஆயிரம் மதிப்பெண் என்று வாரி வழங்கினாள்.

நானும், அப்புச்சியும், தங்கையும் எங்களுக்கு அடுத்தவர்கள் பெயர் வந்திருக்கிறது என்ன மதிப்பெண் என்று கேட்டால், உங்களுக்கு எல்லாம் சுழியம் என்று சொல்லிவிட்டாள். நாங்கள் மூவரும் அவளைச் செல்லமாகத் திட்டத் தொடங்க, எனக்கும் சுழியம்தான்என்று, தனக்கு அடுத்தவர்கள் பெயர் வந்திருப்பதைக்காட்ட, எல்லோரும் சிரியோசிரி என்று சிரிக்கத் தொடங்கி விட்டோம். 

இந்த நிலையில்தான் அவளுடைய அப்பா எனக்கு யாருடைய பெயரும் வரவில்லையே எனக்கு எத்தனை மதிப்பெண் என்று தன் சந்திப்பு அட்டையைக் காட்ட- உங்களுக்கு இரண்டு சுழியம் என்றால் பாருங்கள்! யாராலும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. 

சிரிப்பை மேலும் கூட்ட, அப்பா! உங்களுக்குத்தானே முட்டை மிகமிக பிடிக்கும் அதுதான் உங்களுக்கு இரண்டு முட்டை என்றாள் பாருங்கள். எல்லோராலும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை அவளின் அம்மா, அவளின் முதுகைத்தட்டி சிரிக்க, நமக்கு மூளை மிக அதிகம்தானே என்று மேலும் அசத்தினாள். 

இப்படி நூறு அட்டைகளும் தீரும்வரை சிரிப்போடு ஆட்டம் தொடர்ந்தது. உங்கள் குழந்தைகளோடு நீங்களும் விளையாடலாம், அதே சமயம் இந்த விளையாட்டை அவர்கள் விருப்பத்திற்கு மாற்றவும் அனுமதியுங்கள். அந்தக் குழந்தைகளும் தங்களுக்கு மூளை அதிகம் என்று கெத்துகாட்டி மகிழும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,383.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.