28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ‘அறிவு சுழியம்’ என்பதாக அறிவை அளவுகோலாக வைத்து தாழ்த்துவதற்கான சொற்கள் தமிழில் கிடைக்காது. ஏனென்றால் தமிழர்கள் அன்றும் இன்றும் என்றும் அறிவை கொண்டாடுகிற இனமாகும். அறிவைக் கொண்டாடுவதில் தமிழர் வினைத்தொகையினரே. (முக்காலம் உணர்த்துவது வினைத்தொகை) ஆகவே அறிவுக்குறைபாடு என்பதை தமிழன் ஒப்புக்கொள்ள மாட்டான். ஆயிரம் பட்டங்கள் எல்லாம் வாங்கிய எந்த ஒருவனை விட தான்அறிவாளி என்றுதான், ஒவ்வொரு தமிழனும் நினைப்பான். அது தமிழனுக்கே உரிய இயல்பு. முட்டாள் என்றோ, மடையன் என்று திட்டினால் கூட தமிழன் கோபித்துக் கொள்வான். ஆனால் அந்தச் சொற்களும் அறிவுக் குறைபாடு குறித்த சொற்கள் அல்ல. அறிவில் இதுமட்டுமே எனக்கானது என்று முடிவு செய்து கொண்டவர் என்பதையே குறிக்கும் சொற்கள் ஆகும். முட்டுமரம், முட்டுக்கட்டை என்பன போன்ற சொல்தான் முட்டு+ஆள்=முட்டாள். முட்டு மரம் என்பது கட்டிடம் போன்ற இடங்களில் தங்கிப் பிடிப்பதற்காக கொடுக்கப் படுகிற மரம். முட்டுக்கட்டை என்பது மிகப்பளுவான தேரை இழுக்கும் போது அதை நிறுத்துவதற்காக கொடுக்கிற முக்கோண வடிவில் செதுக்கப்பட்ட மரமாகும். அதுபோலத்தான் தாங்களாக சிந்திப்பதை நிறுத்திவிட்டு குறிப்பட்ட கொள்கையை தாங்கிப் பிடிக்கிறவர்களை முட்டாள் என்கிறது தமிழ்மரபு. மடை என்பது வாய்காலில் நீர் வெளியேற்ற அமைக்கப்பட்ட மதகின் கதவு ஆகும். ஆக மடையன் என்பவனும் முட்டாள் என்ற சொல்லைப் போலவே குறிப்பட்ட கொள்கையை தாங்கிப் பிடிக்கிறவனுக்கான சொல் ஆகும். சமுதாயத்திற்குச் சிந்திக்கிறவர்கள் தேவை. கல்வி மேம்பாட்டிற்கும் தொழில் முன்னேற்றத்திற்கும் சிந்திக்கிறவர்கள் தேவை. நிறுவனங்கள் தமக்கான கூலிகளிடம் சிந்திக்கிற ஆற்றலை விரும்புவதில்லை. தலைவர்கள் தமக்கான தொண்டர்களிடம் சிந்திக்கிற ஆற்றலை விரும்புவதில்லை. ஒவ்வொரு மதமும் பின்பற்றாளர்களிடம் சிந்திக்கிற ஆற்றலை விரும்புவதில்லை. தமிழ்மரபு சிந்திக்கிறவர்களை முன்னெடுத்ததால்- தமிழர்களுக்கு மதம் தேவையாக இருக்கவில்லை. தமிழர்களுக்கென தனித்தலைவர் தேவையாக இருக்கவில்லை. தமிழர்களுக்கு தொல்கதைகள் தேவையாக இருக்கவில்லை. தமிழர்களுக்கென மார்க்சியம் போன்ற கோட்பாடுகள் தேவையாக இருக்கவில்லை. எல்லையில்லாத அறிவு பெட்டகமாக தொடர்ந்து வளரும் தாய்மொழியாம் தமிழே தேவையாக இருக்கிறது. தமிழே அடையாளமாக இருக்கிறது. அதனால்தாம்- தமிழரை முட்டாளாக்க, தமிழரை மடையனாக்க நினைப்பவர்கள் தமிழை தமிழனிடம் இருந்து பிடுங்க முயல்கின்றனர்.