Show all

மின்சாரம்! கட்டுரை-3

நாம் தமிழ்நாடு மின்வாரியத்தில் இருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். தமிழ்நாடு மின்வாரியம் குறிப்பிட்ட அளவு இலவச மின்சாரம் என்றும், அதற்கு மேற்படி மின் நுகர்வுக்கு அவ்வப்போது குறிப்;பிட்ட விலைக்கும் விற்கிறது. மின்சாரத்தை வீடுகளுக்கு, நிறுவனங்களுக்கு, வணிகத்திற்கு என்று பல்வேறு விலை வேறுபாடுகளை வைத்திருக்கிறது. நம்முடைய கட்டுரை இந்த விலைகளைப் பற்றியதானதல்ல. மின்வாரியம் எந்த அளவுகோலில் நமக்கு மின்சாரத்தை அளந்து வழங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்வதுதாம் நமது கட்டுரையின் நோக்கம். 

மின்சாரத்தை அளக்கும் வகைக்கு பயன்படும் அளவைகள் குறித்து இங்கு பார்ப்போம். 1.மின்அழுத்தம். இது வோல்ட் என்ற அளவில் குறிக்கப்படுகிறது. 2.மின்னோட்டம். இது ஆம்பியர் என்ற அளவில் குறிக்கப்படுகிறது. 3.மின்திறன் இது வாட் என்ற அளவில்  குறிக்கப்படுகிறது. 4.மின்ஆற்றல் இது கிலோ-வாட்-மணி என்ற அளவில்  குறிக்கப்படுகிறது. இதை மின்வாரியம் ஓர்அலகு என்று குறித்து, நாம் எத்தனை அலகு (யூனிட்) மின்சாரம் பயன்படுத்தினோம் என்று கட்டணப்பட்டியல் அனுப்புகிறது.

1.மின்அழுத்தம். (வோல்டேஜ்)
நமது வீட்டிற்கு மின் இணைப்பு செய்யப்பட்டுள்ள செப்புக் கம்பியில் ஒரு அணுவுக்கு 29 நேர்கள் (எலக்ட்ரான்) என கோடி கோடியான நேர்கள் அந்த செப்புக் கம்பியில் இருக்கும். நீங்கள் ஓடுவது போல, தண்ணீர் ஓடுவது போல, உங்கள் வீட்டில் மின் இணைப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள செப்புக் கம்பியில் உள்ள நேர்கள் (எலக்ட்ரான்) ஒரு அணுவில் இருந்து, அடுத்திருக்கும் அணுவுக்கு ஓடினால் அது மின்சாரம். அந்த ஓட்ட ஆற்றல்தான் மின்சாரம். என்பதை கடந்த கட்டுரையின் மூலம் நாம் அறிந்திருப்போம். 

அந்த ஓட்ட ஆற்றல் செப்புக் கம்பிச் சுருளில், காந்தத்தின் மூலம், தூண்டப்படும் போது,  செப்புக் கம்பிச்சுருள் மற்றும் காந்தத்தின் வடிவம் மற்றும் அளவைப் பொறுத்து, ஓடத்தயாராக நிற்கிற நேர்களின் அழுத்தசக்தி அளவைதான், மின்அழுத்தம் என்கிறோம். இதை ஆங்கிலத்தில் எலக்ட்ரோ மோட்டிவ் போர்ஸ் என்றும், சுருக்கமாக இஎம்எப் என்றும் சொல்லுவார்கள். 

உங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில் இருந்து ஒரு நெகிழிக் குழாய் மூலம் உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். முதலில் என்ன செய்வீர்கள். அதற்காக அமைக்கப்பட்டுள்ள டேப்பைத் திறப்பீர்கள். அந்த நெகிழிக் குழாயின் மூலம் வெளியேறும் நீரின் வேகம் அந்த நெகிழிக் குழாயின் சுற்றளவு, தண்ணீர் தொட்டியின் கொள்ளளவு, அந்தத் தண்ணீர் தொட்டியில் உள்ள நீரின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தது. இதற்கு தண்ணீரின் அழுத்தம் என்று சொல்லலாம் அல்லவா. 

தண்ணீர் டேப்பை திறக்காத நிலையிலும் அந்த முனையில் குறிப்பிட்ட அழுத்தத்தில் தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அல்லவா? அதுபோலவேதான் மின்நிலையங்களில்,  மின்உற்பத்தி கருவிகளின் அமைப்பைப் பொறுத்தது மின் அழுத்தம். ஆனாலும் இந்தியாவில் உள்ள அனைத்து மின்சார உற்பத்தி நிலையங்களும் 11000 வோல்ட்; உற்பத்தி செய்யும் வகையாகவே மின்நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
மின் சேதாரத்தைக் குறைக்கும் வகைக்காக, அதை 22000, 33000, 110000 வோல்ட் என்றெல்லாம், அழுத்தமாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) என்ற கருவிகள் மூலம், அழுத்தத்தை உயர்த்தி நெடுந்தூரப் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். மீண்டும் துணை மின் நிலையங்களை அமைத்து அந்த உயர் மின்அழுத்தத்தை 440வோல்டாகக் குறைத்து நான்கு கம்பிகள் மூலம் மும்முனை இணைப்பாகவும், இரண்டு கம்பிகள் மூலம் 220வோல்ட், ஒரு முனை மின்சாரமும் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.

அந்த நான்கு கம்பியில் மூன்று கம்பிகளில் மட்டுமே மின்அழுத்தம் இருக்கும். சமன் (நியுட்ரல்) நான்காவது கம்பி எல்லா மின் நிலையங்களிலும் புவியில் இணைத்து தரையிடப்படும். வீடுகளிலும் அந்த நான்காவது கம்பி தரையிடப்படும். இந்தப் புவித்தரை நான்காவது கம்பியாக இணைத்துக் கொள்ளப்பட்டு ஒரு கம்பியை அங்காங்கே எடுத்துச் செல்லுகிற வேலை மிச்சப்படுத்தப் படுகிறது. மேலும் இந்தத் தரையிடல் மூலந்தான் அனைத்து மின் உபகரணங்களுக்கும், மின்துறை பணியாளர்களுக்கும், மின்நுகர்வோர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் ஒரு வகைக்கும் பயன்படுத்தப் படுகிறது. ஒருமுனை இணைப்பில் ஒரு கம்பியில்தான் மின்அழுத்தம் இருக்கும். மாற்றொரு கம்பி சமன் (நியுட்ரல்) என்கிற தரை இணைப்பாகும். வணக்கம்! அடுத்த கட்டுரையில் சந்திக்கலாம்.

முந்தைய கட்டுரையைப் படிக்க: http://www.news.mowval.in/Editorial/katturai/Electricity-2-104.html

அடுத்த கட்டுரையைப் படிக்க: http://www.news.mowval.in/Editorial/katturai/Electricity-4-107.html

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.