மின்சாரம் குறித்தான இந்த எட்டாவது கட்டுரை, நாம் பயன் படுத்தும் கருவிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப் பயன்பட்டு வரும் இரண்டு வகையான மின்வழிகள் குறித்து விளக்கும் வகைக்கானது. 04,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: நாம் பயன் படுத்தும் கருவிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப் பயன்பட்டு வருவன இரண்டு வகையான மின்வழிகள் (சர்க்யூட்டுகள்) ஆகும். அவை தொடர் இணைப்பு (சீரியஸ்) மற்றும் பக்க இணைப்பு (பேரல்லல்) மின்வழிகள் என்று அழைக்கப்படுகின்றன. தொடர் இணைப்பு மின்வழிகள்: திருவிழாக்களில் ஒப்பனைக்கான சீரியல் செட் அமைத்தல் என்று சொல்லப்படுகிற மின்விளக்கு தோரணங்களில் இந்த வகையான தொடர் இணைப்பு மின்வழியே பின்பற்றப் படுகிறது. பக்க இணைப்பு மின்வழிகள்: வீடுகளில் அனைத்து கருவிகளுக்கும் பக்க இணைப்பு மின்வழிதான் பின்பற்றப்பட வேண்டும். ஏனென்றால் பக்க இணைப்பு மின்வழியில்தாம் ஒவ்வொரு கருவிக்கும் தனித்தனியாக 220 வோல்ட் மின் அழுத்தம் பகிர முடியும். ஆனால் தொடர் இணைப்பு மின் வழியில் சமஅளவு மின்தடை கொண்ட எத்தனை கருவிகள் இணைக்கிறோமோ அத்தனைக் கருவிகளும் 220 வோல்ட் மின்அழுத்ததை சமமாகப் பகிர்ந்து கொள்ளும். இந்தத் தொடர் இணைப்பு மின்வழி தனித்தனி கருவிகள் இயங்குவற்கு தோதுப்படாது. வீடுகளில் அனைத்து கருவிகளுக்கும் பக்க இணைப்பு மின்வழிதான் பின்பற்றப்படும் போது அனைத்துக் கருவிகளின் வால் முனையை மட்டுமே ஒன்றாக இணைத்து சமன் இணைப்பில் இணைக்க வேண்டும். ஒவ்வொரு கருவியின் தலை முனைகளை தனித்தனி மடை அல்லது மதகு (ஸ்விட்ச்) வழியாக மின்முனை (பேஸ்) இணைப்பில் இணைக்க வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,102.
மின்விளக்கு, தேய்ப்பு பெட்டி, மின்விசிறி இப்படி ஒவ்வொரு மின்சாரத்தில் இயங்கும் கருவிகளுக்கும் மின் இணைப்பு கொடுப்பதற்கு இரண்டு முனைகள் உண்டு. ஒரு முனையைத் தலை அல்லது தொடக்கம் என்றும், மறுமுனையை வால் அல்லது முடிவு என்றும் கூறுவர். இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட கருவிகளை தொடர்ச்சியாக இணைக்க வேண்டுமாயின் முதலுறுப்பின் வாலை இரண்டாம் உறுப்பின் தலையுடனும், இரண்டாம் உறுப்பின் வாலை மூன்றாம் உறுப்பின் தலையுடனும் இணைத்தல் வேண்டும். இப்போது இம்மூன்று உறுப்புகளும் ஒரு தலையும் ஒரு வாலும் கொண்ட ஒரே உறுப்பு போலவே தோன்றும். இத்தொடர் இணைப்பின் தலை முனையை மின்சார இணைப்பின் மின்முனை இணைப்புடனும் (பேஸ்) இத்தொடர் இணைப்பின் வால் முனையை மின்சார இணைப்பின் சமன் இணைப்புடனும் இணைத்து விடுவோமாயின் ஒரு தொடர் இணைப்பு மின்வழி கிடைக்கும்.
இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட குளிரூட்டி, குழல் விளக்கு, மின்விசிறி போன்ற கருவிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டுமாயின், எல்லாத் தடைகளின் தலைகளும் ஒன்றாகவும், எல்லா தடைகளின் வால்களும் ஒன்றாகவும் இணைக்கப்பட வேண்டும். எல்லா மின்தடைகளும் ஒரே தலையும் ஒரே வாலும் கொண்ட ஒரு மின்தடை போலவே தோன்றும். இப்பக்க இணைப்பின் தலை முனையை மின்இணைப்பின் மின்முனை இணைப்பில் இணைக்க வேண்டும். இப்பக்க இணைப்பின் வால் முனையை மின்இணைப்பின் சமன் இணைப்பில் இணைக்க வேண்டும். இப்படி இணைப்பது பக்க இணைப்பு மின்வழி ஆகும்.
முந்தைய கட்டுரையைப் படிக்க: http://www.news.mowval.in/Editorial/katturai/Minsaram-266.html