மின்சாரம் குறித்தான இந்த ஏழாவது கட்டுரையில், மனிதர்கள் தொட்டால் கடுமையாக தாக்கும் மின்சாரம்- தன்மீது ஒய்யாரமாக அமரும் பறவைகளை, (நெடுஞ்சாலைகளில் அமைந்த மின்கம்பங்களில் தொடரும்) மின்கம்பிகள் தாலாட்டுவது ஏன்? என்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கிற ஐயத்தை தெளிவு படுத்தும் வகைக்கான தகவல்கள் இடம்பெறுகின்றன. 02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பறவைகளைப் போலவே நாமும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு ஒற்றை மின் கம்பியைத் தொட்டால் நம்மையும் பாராபட்சம் இல்லாமல் மின்கம்பிகள் தாலாட்டவே செய்யும். எப்போதும் நாம் இரண்டாவது கம்பியான புவியின் மீது நின்று கொண்டு மின்கம்பிகளைத் தொடுகிறோம். அந்தக் கம்பியில் ஓடும் மின்சாரம் நம் வழியாக புவிக்கம்பியோடு தொடர்பு கொள்வதால் நாம் தாக்கப்டுகிறோம். அதென்ன புவி இரண்டாவது கம்பியா? என்றால், ஆம் புவி இரண்டாவது கம்பிதான். உங்கள் வீட்டிற்கு மின் இணைப்புக் கொடுக்க- தெருவில் நடப்பட்டுள்ள மின் கம்பத்தைப் பாருங்கள். அந்தக் கம்பத்திற்கு நான்கு அலுமனியக் கம்பிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணைமின் நிலையத்திலிருந்து பல்வேறு மின்கம்பங்கள் வழியாக கொண்டுவந்து இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த நான்கு கம்பிகளில் முன்று கம்பிகளில் மின்அழுத்தம் இருக்கும் நான்காவது கம்பியில் மின் அழுத்தம் இருக்காது. அதனால் நான்காவது கம்பியை சமன் என்றும் ஆங்கிலத்தில் நியுட்ரல் என்றும் சொல்லுவோம். மின்அழுத்தம் உள்ள கம்பிகளை மின்முனை என்றும் ஆங்கிலத்தில் பேஸ் என்றும் சொல்லுவோம். அந்தக் மூன்று மின்முனைக் கம்பிகளை சிவப்பு, மஞ்சள், நீலம் என்று நிறங்களின் பெயரை வைத்து அழைப்போம். சமன் கம்பி கருப்பு நிறத்தால் அடையாளப்படுத்தப்படும். ஒவ்வொரு மின்முனையையும், சமனையும் மின்அழுத்தமானியி;ல் இணைத்து மின்அழுத்தத்தை அளந்தால் 220 வோல்ட் கூட குறைய காட்டும். ஆனால் சிவப்பு, மஞ்சள், நீலம் மின்முனைகளில் எந்த இரண்டையும் மின்அழுத்தமானியி;ல் இணைத்து மின்அழுத்தத்தை அளந்தால் 440 வோல்ட் கூட குறைய காட்டும். இந்த நான்கு கம்பிகள் மூலமாக உங்கள் வீட்டுக்கு மின்சாரம் பெற்றால் அதற்கு மும்முனை இணைப்பு என்று பெயர். நீங்கள் ஒரு முனை இணைப்பு உங்கள் வீட்டிற்குக் கேட்டால்- தமிழ்நாடு மின்வாரியம் உங்களுக்கு சிவப்பு மஞ்சள் நீலக்கட்டத்தில் ஒருகம்பி, சமனில் ஒரு கம்பி இணைப்பின் மூலம்- ஒருமுனை இணைப்பைக் கொடுக்கும். சமன் கம்பி இணைப்புமுனையாக கருதப்படமாட்டாது. இருமுனை இணைப்பில் பயன்படும் கருவிகளோ, மும்முனை இணைப்பில் பயன்படும் கருவிகளோ, வீடுகளில் பயன்படுத்துவதில்லை. வேளாண் இணைப்பில் மும்முனை மின்சுழட்டிநீரேற்றி (மோட்டார் பம்ப்) பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளில் இரு முனை மற்றும் மும்முனை என்று இரண்டு இணைப்புகளில் இயங்கும் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கிலத்தில் டெஸ்டர் என்று சொல்லப்படுகிற மின்சோதனைக் கருவியைக் கொண்டு சிவப்பு மஞ்சள் நீல மின்முனைக் கம்பிகளைத் தொட்டால் மின்சோதனைக் கருவியில் விளக்கு எரியும். ஆனால் சமன் கம்பியைத் தொட்டால் விளக்கு எரியாது. உங்கள் வீட்டில் ஒரு முனை இணைப்பு இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு அறையிலும் ஒரு குழல் விளக்கு, ஒரு மின்விசிறி, இரவு விளக்கு, செல்பேசி மின்னேற்றிக்கு, மின்அம்மிக்கு, ஆட்டுரலுக்கு என்று மடையோடு கூடிய பொருத்தியை (சுவிட்ச் அண்ட் பிளக்) அமைத்;திருப்பார்கள். அந்தப் பொருத்தியின் ஒரு துளையில் மின்முனை (பேஸ்) இணைப்பு மடை (சுவிட்ச்) மூலமாக கொடுக்கப்பட்டிருக்கும். இன்னொரு துளைக்கு சமன் (நியுட்ரல்) இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். மடையை திறப்பு செய்து விட்டு, மின்முனை (பேஸ்) இணைப்புத் துளையில் மின்சோதனைக் கருவியை நுழைத்தால் மின்சோதனைக் கருவியின் விளக்கு எரியும். மின்சோதனைக் கருவிக்கு சமன் (நியுட்ரல்) புவியில் நிற்கிற உங்கள் மூலமாக கிடைக்கும். உங்கள் மூலமாக சமன் புவியில் இருந்து கிடைத்தாலும் மின்சோதனைக் கருவியில் மின்தடை (ரெசிஸ்டன்ஸ்) பொருத்தப்பட்டிருப்பதால் உங்கள் மூலமாக கிடைக்கும் சமனில் பாயும் மின்சாரத்தின் அளவு மிக மிக நுட்பமானது என்பாதால் மின்சாரம் உங்களைத் தாக்காது. குழல் விளக்குக்கு, குமிழ் விளக்குக்கு, மின்விசிறிக்கு, இரவு விளக்குக்கு, செல்பேசி மின்னேற்றிக்கு, மின்அம்மிக்கு, ஆட்டுரலுக்கு என்று மின்சாரத்தில் இயங்கும் எல்லா கருவிகளுக்கும் ஒரு மின்முனை (பேஸ்) இணைப்பும், ஒரு சமன் (நியுட்ரல்) இணைப்பும் கொடுத்தால் மட்டுமே இயங்கும். எப்போதும் நாம் இரண்டாவது கம்பியான புவியின் மீது நின்று கொண்டு மின்கம்பிகளைத் தொடுகிறோம். அந்தக் கம்பியில் ஓடும் மின்சாரம் நம் வழியாக புவிக்கம்பியோடு தொடர்பு கொள்வதால் நாம் தாக்கப்டுகிறோம். அதென்ன புவி இரண்டாவது கம்பியா? என்றால், ஆம் புவி இரண்டாவது கம்பிதான். என்று முன்பு தெரிவித்திருந்தோம் அல்லவா அந்த இடத்திற்கு மீண்டும் வருவோம். ஒரு மின்சாரப்பணியாளரைத் துணைக்கு வைத்துக் கொண்டு அவர் மூலமாக இந்தச் சோதனையைச் செய்து காட்டச் சொல்லுங்கள். கட்டாயமாக- உறுதியாக- எக்காரணம் பற்றியும் நீங்களாக இந்த சோதனையை முன்னெடுக்கக் கூடாது. எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! உங்கள் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பொருத்தியில் உள்ள மின்முனைத் (பேஸ்) துளையில்- பற்றியில் (ஹோல்டரில்) பொருத்தப்பட்ட குமிழ்விளக்கின் ஒரு கம்பியை பொருத்தி விட்டு மற்றொரு கம்பியை புவியில் அடிக்கப்பட்ட ஒரு நீண்ட கம்பியில் பொருத்தி மடையைத் (சுவிட்ச்) திறந்தால் அந்தக் குமிழ்விளக்கு எரியும். இப்படித்தான் நீங்கள் மின்அழுத்தம் உள்ள கம்பியை புவியில் நின்று கொண்டு தொட்டால் உங்கள் மூலமாக புவிக்கு மின்சாரம் பாய்வதால் நீங்கள் மின் தாக்குதலுக்கு உள்ளாகின்றீர். உங்கள் உடல் மூலமாக பேரளவான மின்சாரம் பாயும். காரணம்: உங்கள் உடலின் மின்தடை மிக மிகக் குறைவு. எப்படி புவி ஒரு சமனாகச் செயல்படுகிறது என்றால்? விடை: நாம்தான் புவியை சமனாகச் செயல்பட வைக்கிறோம். நான்காவது கம்பியான சமனை (நியுட்ரல்) எல்லா மின் நிலையங்களிலும் புவியில் இணைத்து தரையிடப்படும். வீடுகளிலும் அந்த நான்காவது கம்பி தரையிடப்படும். இந்தப் புவித்தரை நான்காவது கம்பியாக இணைத்துக் கொள்ளப்பட்டு ஒரு கம்பியை அங்காங்கே எடுத்துச் செல்லுகிற வேலை மிச்சப்படுத்தப் படுகிறது. மேலும் இந்தத் தரையிடல்தாம் அனைத்து மின் கருவிகளுக்கும், மின்துறை பணியாளர்களுக்கும், மின்நுகர்வோர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகைக்கு பயன்படுத்தப் படுகிற பெரும்பேறு ஆகும். முந்தைய கட்டுரை படிக்க: http://www.news.mowval.in/Editorial/katturai/Electricity-241.html
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,100.