Show all

பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் வரிசையில்- பொருள்குறித்த!

 

நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பார்ப்பனியம், ஐரோப்பியம், மார்க்சியம், வெவ்வேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில் மலைப்புகளில், தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைக் கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு சொல்லாக வரையறை மீட்பதற்கானது இந்தக் கட்டுரை 

26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: அறிவியல்பூர்வமாக, விஞ்ஞானப்பூர்வமாக, விஞ்ஞான அடிப்படையில், அறிவியல் அடிப்படையில் என்கிற சொல்லாக்கங்கள் எல்லாம் சயின்டிபிக்கலி என்கிற ஆங்கில சொல்லின் மொழிபெயர்ப்பாகவும், ஆங்கில அல்லது ஐரோப்பிய இயல் அடிப்படையாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. 

சயின்ஸ் என்பதை நேரான தன்மொழிச் சொல்லாக நிலைநிறுத்த முயலாமல், அறிவியல் என்று பொருளற்ற இடுகுறியாக மொழிபெயர்த்துக் கொள்வது மொழிபெயர்த்துக் கொள்கிற மொழிக்கு இழுக்கான நடவடிக்கையாகும்.

சயின்ஸ் என்பதற்கு நேரான தமிழ்ச்சொல் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழில் புழக்கத்தில் இருந்து வருகிறது. அந்தச் சொல் 'இயல்' என்பது ஆகும். இயல் குறித்த முழு முற்றான துறை இயற்றமிழ் என்று வழங்கப்பட்டது. 

இன்றைக்கு நாம் படித்துக் கொண்டிருக்கிற ஐரோப்பிய சயின்சை இயற்றமிழ் என்ற தலைப்பில் கொண்டுவர இயலாது. எனவே சயின்சை இயல்அறிவு என்று சொல்ல வேண்டியுள்ளது. மாறாக சயின்சை அறிவியல் என்று மொழிபெயர்த்து அறிவைப்பற்றிய சயின்ஸ் என்கிற மயக்கப் பொருளில் அறிவியல் என்பதை ஒரு இடுகுறிச் சொல்லாக பயன்படுத்தி வருகிறோம். 

சயின்டிபிக்கலி என்கிற ஆங்கில சொல்லுக்கு மொழிபெயர்த்துக்கொள்ளப்பட்ட அறிவியல்பூர்வமாக, விஞ்ஞானப்பூர்வமாக, விஞ்ஞான அடிப்படையில், அறிவியல் அடிப்படையில் என்கிற சொல்லாக்கங்கள் எல்லாம் இடுகுறிகளானவைகளே.

சயின்டிபிக்கலி என்பதற்கு நேரான தமிழ்ச்சொல் 'பொருள்குறித்த' என்பதே ஆகும். தமிழில் உள்ள 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்கிறார் தொல்காப்பியர். 

இந்தக் கருத்தியல் மட்டும் அல்ல, தொல்காப்பியத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள எந்தக் கருத்தியலும் அவரின் சொந்த முடிவு அன்று.  

இதை அவரே தெளிவு படுத்தும் வகைக்கானவைகள் தாம் என்ப, மொழிப என்று தொல்காப்பியம் முழுமையும் அவர் தெரிவித்திருக்கின்ற முறைமை.

என்ப, மொழிப என்னும் முறைமை தொல்காப்பியம் முழுதும் ஏறத்தாழ 147 இடங்களில் வந்துள்ளது. 
என்மனார் புலவர் என்பது சுமார் 68 இடங்களில் வந்துள்ளது. வரையார் என்பது 15 இடங்களில் வந்துள்ளது. 
பிற சிறப்புடன் வந்துள்ள தொடர்கள் ஏறத்தாழ முப்பதாகும். 

பின்வரும் பத்தொன்பது எடுத்துக்காட்டுகளில் தான் தெரிவிக்கும் எந்த கருத்தியலும் தமிழ்முன்னோர் தொடர்ந்து எடுத்தாண்டு வந்தது என்று தொல்காப்பியர் தெரிவிப்பதை நாம் உய்த்துணர முடியும்.
1. நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே 
2. ஒத்த தென்ப உணரு மோரே 
3. செவ்வி தென்ப சிறந்தி சினோரே 
4. புகரின்று என்மனார் புலமை யோரே 
5. உளவென மொழிப உணர்ந்திசினோரே 
6. வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே 
7. விளியொடு கொள்ப தெளியு மோரே 
8. ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே 
9. இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே 
10.புலன் நன் குணர்ந்த புலமை யோரே 
11. கொள்ளும் என்ப குறியறிந் தோரே 
12. நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே 
13. இடையும் வரையார் தொடையுணர்ந் தோரே 
14. வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர் 
15. யாப்பென மொழிப யாப்பறி புலவர் 
16. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர் 
17. பொழிப்பென மொழிதல் புலவர் ஆறே 
18. ஒன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே 
19. தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும் 

சரி எதற்கு இவ்வளவு பீடிகை?
தமிழ் மொழியில், எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று நம் தமிழ்முன்னோர் தெரிவித்திருப்பதிலிருந்து. தமிழின் ஒவ்வொரு சொல்லும் பல்வேறு பொருட்களைத் தோண்டி எடுப்பதற்கான பொன்னான சுரங்கம் என்பதை ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் உணரவேண்டும் என்பதே எனது பீடிகைக்கான நோக்கம்.

'அருவி' என்கிற சொல் தமிழில் இருக்கும் போது நீர்வீழ்ச்சி என்று மொழி பெயர்ப்பது, 'பொருள் குறித்த' என்ற சொல் இருக்கும் போது அறிவியல்பூர்வமாக, விஞ்ஞானப்பூர்வமாக, விஞ்ஞான அடிப்படையில், அறிவியல் அடிப்படையில் என்கிற சொல்லாக்கங்களுக்கு எல்லாம் முயல்வது, 'இயல்' என்கிற சொல் தமிழில் இருக்கும் போது அறிவியல் என்று மொழிபெயர்ப்பது கடவுள், இறை, தெய்வம், ஐந்திரம், இயற்கை, என்கிற ஆயிரக்கணக்கான பொருள் குறித்த சொற்களை எல்லாம் மற்றமொழிகளின் இடுகுறிச் சொற்களுக்கு வீணடித்துவிடுவது என்கிற நடைமுறைகள்- நமக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக இயலே இருந்திருக்கவில்லை என்று அயல்களுக்கு பட்டயம் எழுதித்தருகிற அவல முயற்சியேயாகும்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,183.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.