பல நூற்றாண்டுகளாக பிறமொழி ஆதிக்கத்தில் தொய்வுற்றிருந்த தமிழ்மொழியை மீட்டெடுத்து தமிழர்களைப் பெருமையுறச் செய்த தமிழறிஞர்களில் இவரும் ஒருவர். தேகம். இது மகள் நீலாம்பிகை இசைத்த வள்ளலார் பாடலில் இருந்த ஒரு சொல். மறைமலை அடிகளுக்கு இதற்குப் பதிலாக “யாக்கை” என்ற தமழ்ச் சொல் இருந்திருக்கலாமே என்று தோன்றியது. இது நடந்தது 1916ல். இந்த சம்பவத்தின் விளைவாகத் தோன்றியதே ‘தனித் தமிழ் இயக்கம்’. தமிழில் பிற மொழிக் கலப்பை பெரிய அளவில் நீக்கி தூய தமிழ் ஒளிரச் செய்த மாபெரும் இயக்கம். வேதாசலம் என்பதே மறைமலை அடிகளின் இயற்பெயர். 1876 ஜூலை 15இல் திருக்கழுக்குன்றத்தில் ஒரு மருத்துவரின் மகனாகப் பிறந்தார். தமிழ்ப் புலவர் நாராயணசாமி பிள்ளையிடம் தமிழும், சோம சுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தமும் பயின்றார். கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய மறைமலை அடிகள் சமஸ்கிருதமும், ஆங்கிலமும் நன்கு கற்றவராக இருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழுக்குப் பங்காற்றினார்.