நமது தலைஎழுத்தை அல்லது நமது விதியை, நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதுதான் மந்திரக்கலையின் அடிப்படையாக தமிழ்முன்னோர் ஆய்ந்து கண்டுள்ளனர். அதை எப்படி எழுதுவது என்பது முழுக்க முழுக்க நடைமுறை சார்ந்த நுட்பமாகும். 23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: அன்பின் இனிய தமிழ் உறவுகளே! நிமித்தகம், கணியம், மந்திரம். இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட முன்னேற்றக் கலைகள். நிமித்தகம் என்பது: 1.நீங்கள் இந்த நாளில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த ஓரையில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த நாள்மீனில் பிறந்து விட்டீர்கள். 2.நீங்கள் இந்த திசையில் பிறந்துள்ளீர்கள் 3.நீங்கள் பிறந்த போது கோள்கள் இந்த இந்த ஓரைகளில் இருந்துள்ளது என்று மூன்று வகையான கணிப்புகளை வைத்து உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று பலன் சொல்லுவது. உங்களுக்கு அமையப் போகிற வாழ்க்கையை மேலே குறிப்பிட்ட மூன்று கணிப்புகள் மூலம், அன்றாடம் பலன் தெரிவித்து, அதை உங்களை ஏற்றுக்கொண்டு அந்தக் கணிப்புகளின் போக்கில் உங்களை முன்னெடுக்கிற கலை நிமித்தகமாகும். கணியக்கலை, நிமித்தகத்தின் மேம்படுத்தப் பட்ட கலை. கணியக்கலை என்பது: உங்கள் பெற்றோர் உங்களுக்கு இட்ட பெயரால்- உங்களுக்கு வாய்க்கப் பெற்ற இயல்பை புரிந்து கொண்டு, அல்லது உங்களுக்கு பிடித்த இயல்புக்காய் உங்கள் பெயரை அமைத்துக் கொண்டு, உங்களுக்கு பிடித்த இயல்புக்கான கல்வி, தொழில், என அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான கலை ஆகும். இது நிமித்தகத்தைத் தோற்கடிக்கிற கலை ஆகும். உங்கள் பெற்றோர் தீர்மானித்த இயல்பு உங்களுக்கு விருப்பமில்லை யெனில் அதுகுறித்தும் கவலைப்பட வேண்டாம். எது உங்களுக்கு விருப்பமான இயல்பு, எது உங்களுக்கு விருப்பமான கல்வி, எது உங்களுக்கு விருப்பமான தொழில் அவற்றை முன்னெடுப்பதற்கானதுதான் கணியக்கலை. அடுத்து மந்திரம் என்பது கணியத்தின் மேம்படுத்தப்பட்ட கலை. இந்தக் கலையில்- நிமித்தகத்தைப் பற்றியோ கணிக்கலை பற்றியோ கவலைப்படவே வேண்டாம். உங்கள் வாழ்க்கையின் போக்கை உங்கள் அறிவு வளர்ச்சிக்குத் தக்கபடி அவ்வப்போது கட்டமைத்துக் கொள்ள முடியும். உங்கள் தலையெழுத்தை நீங்களே எழுதிக் கொள்ள முடியும். உண்மையில் தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருள் ஆகும். உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம். இந்தச் செய்திகள் அனைத்தையும் நம்முப்பாட்டன் திருவள்ளுவர் ஒற்றை அடியின் மூன்று சீரில் தெரிவித்து விடுகிறார். இந்த மந்திரக் கலை கோட்பட்டை கணியன் பூங்குன்றனார் வேறு வகையாத் தெரிவிக்கிறார். செய்தி ஒன்றதான். அது திண்ணியராதல் என்கிற நடைமுறையைக் கற்க கலந்துரையாடல் சிறந்த வகையாக அமையும். நீங்கள்- உங்கள் பெற்றோர் உற்றாரோடு விவாதித்துப் பாருங்கள்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்ற திருக்குறளில்
எண்ணிய எண்ணயாங்கு எய்துப என்கிற மூன்று சீரில். அப்படி மந்திரக்கலையின் கோட்பாட்டைத் தெரிந்து கொண்டவர்- அதாவது எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் என்கிற நீண்ட நெடிய நடைமுறையை பின்பற்றி சாதிக்க வேண்டும் என்பது அந்த திண்ணியர் என்ற சொல்லின் அழுத்தமே நமக்கு உணர்த்துவதாகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
என்கிற புறநானூற்றுப் பாடலில் இரண்டாவது அடியில்-
தீதும் நன்றும் பிறர்தர வாரா
என்று நான்கு சீரில்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,093.