28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்முடைய குழந்தைகள் எப்படி விளையாட வேண்டும் என்பதை சீனாதான் முடிவு செய்கிறது. ஏனென்றால் நம்முடைய குழந்தைகள் விளையாட்டுப் பொருள்களில் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது விழுக்காடு சினாவில் தயாரிக்கப் பட்டவை. வெற்று உணர்ச்சிகளாக அன்னிய வெறுப்பை காட்டும் நம்மால் அன்னிய அடிமைத்தனங்களில் இருந்து விடுபட எந்த முயற்சியும் இல்லை. தமிழக விமானி அபிநந்தன், தன்னுடைய மிக் 21 வகை விமானத்தின் மூலம் பாகிஸ்தானின் எஃப்-16 வகை விமானத்தை சுட்டு வீழ்த்தினார். பாகிஸ்தானின் அமெரிக்க விமானத்தை வீழ்த்தி விட்டோம் என்று பெருமை கொள்கிற வேளையில், அதற்கு நாம் பயன் படுத்திய விமானம் சோவித் ரஷ்யாவின் விமானம். இந்த சோவித் ரஷ்ய வகை விமானங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளன. இந்த வகை போர்விமானம், பயிற்சியின் போது சிலசமயம் விபத்துக்குள்ளாகி விடுகிறது. இதன் காரணமாக மிக் விமானத்தை சேனையினர் 'பறக்கும் சவப்பெட்டி' எனவும், 'விதவை தயாரிப்பாளர்' என்றும் பெயரிட்டு அழைப்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் நாம் வெற்று உணர்ச்சிகளுக்காக அன்னிய எதிர்ப்பை வெளிப்படுத்தும் வீராதி வீரர்களாக இருக்கிற அதே வேளையில் அன்னியப் பொருள்களில் இருந்து விடுபடுவதற்கு கொஞ்சமும் முயலுவதில்லை. நம் குழந்தைகள் பயன்படுத்துகிற விளையாட்டுப் பொருள்களிலிருந்தே நம் குழந்தைகளை அடிமைச் சிந்தனைக்கு பழக்கப் படுத்தத் தொடங்கி விடுகிறோம். அப்புறம் படிக்கும் போது நடுவண் பாடத்திட்டம், ஆங்கில வழிக்கல்வி என்று அன்னியத்திற்கு வாலாட்டும் நாய்க்குட்டிகளாகவே நமது குழந்தைகளை நடத்துகிறோம். ஏ பீ சி டி, வாட் பார்ட்ஸ் ஆப் பாடி, ரெயின் ரெயின் கோ எவே, அன்னியநாட்டு பழங்கள், அன்னியநாட்டு விலங்குகள், இப்படியான விளையாட்டுப் பொருட்கள் நமது குழந்தைகளின் தற்சிந்தனையை எப்படி வளர்க்க முடியும்? தமிழ் ஆர்வங்களை அரசியலாக மட்டும் பார்க்காமல்- கல்வி, தொழில், படைப்புகள் அனைத்திலும் முன்னெடுத்தாலே அன்னிய நாட்டு விமானத்தைத் தாக்கும் நடிவடிக்கையில் கூட என்னாட்டு விமானம் இது என்கிற பெருமைக்கு சொந்தக்காரர்கள் ஆக முடியும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,089.