Show all

ஒருவன் முட்டாளாக இருக்கிறான் என்பதைக் குறிக்கும் விடையங்கள் என்னென்ன?

ஒருவன் முட்டாளாக இருக்கிறான் என்பதைக் குறிக்கும் விடையங்கள் என்னென்ன? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.

26,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: முட்டாள் என்பதை அறிவில்லாதவன் என்று புரிந்து கொண்டு நீங்கள் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தால் அது தவறு. 

அறிவு என்பதை ஒரு எட்டாக்கனி போல காட்டுவதற்கு நுழைவுத் தேர்வு, நீட் என்றெல்லாம் சில மேலாதிக்க இனங்கள் கதைபண்ணிக் கொண்டிருக்கின்றன.

அறிவு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டே இருப்பது என்பதைத் திருவள்ளுவரும், யாரும் முற்றாக முழுதான அறிவாளர் அல்லர் என்று ஓளவையாரும் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளனர்.
திருவள்ளுவர் 
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
என்கிறார். ஆற்றங்கரை யோரத்து மணலில் வெறுமனே நான்கு விரல்களில் தோண்டுகிற கிணற்றை அறிவுக்கு உவமையாக்குகிறார் வள்ளுவர்.

அதே வேளை யாரும் முற்றாக முழுதான அறிவாளர் அல்லர் என்று சொல்வதற்கு 
கற்றது கைமண் அளவு கல்லாதது கடலளவு என்கிறார் ஒளவையார். 

ஆக தமிழ்- அறிவை- எப்படித் தெளிவு படுத்துகிறது பாருங்கள். நீட் வைக்கிறேன், நுழைவுத் தேர்வு வைக்கிறேன் என்கிற அளவிற்கு எவனும் அறிவில் கரை கண்டவனும் இல்லை. அறிவே இல்லாதவன் என்றும் யாரும் இல்லை என்பதாக.

'அறிவு சுழியம்' என்பதாக அறிவை அளவுகோலாக வைத்து தாழ்த்துவதற்கான சொற்கள் தமிழில் கிடைக்காது. ஏனென்றால் தமிழர்கள் அன்றும் இன்றும் என்றும் அறிவை கொண்டாடுகிற இனமாகும். அறிவைக் கொண்டாடுவதில் தமிழர் வினைத்தொகையினரே. (முக்காலம் உணர்த்துவது வினைத்தொகை) 

ஆகவே அறிவுக்குறைபாடு என்பதை தமிழன் ஒப்புக்கொள்ள மாட்டான். ஆயிரம் பட்டங்கள் எல்லாம் வாங்கிய எந்த ஒருவனை விட தான்அறிவாளி என்றுதான், ஒவ்வொரு தமிழனும் நினைப்பான். அது தமிழனுக்கே உரிய இயல்பு.

முட்டாள் என்றோ, மடையன் என்று திட்டினால் கூட தமிழன் கோபித்துக் கொள்வான். ஆனால் அந்தச் சொற்களும் அறிவுக் குறைபாடு குறித்த சொற்கள் அல்ல. அறிவில் இதுமட்டுமே எனக்கானது என்று முடிவு செய்து கொண்டவர் என்பதையே குறிக்கும் சொற்கள் ஆகும். 

முட்டுமரம், முட்டுக்கட்டை என்பன போன்ற சொற்கள் அடிப்படையில் தாம், முட்டாள் என்கிற சொல்லும் உருவாக்கப்பட்டுள்ளது. முட்டு+ஆள்=முட்டாள்.

முட்டு மரம் என்பது கட்டிடம் போன்ற இடங்களில் தங்கிப் பிடிப்பதற்காக கொடுக்கப் படுகிற மரம். முட்டுக்கட்டை என்பது மிகப்பளுவான தேரை இழுக்கும் போது அதை நிறுத்துவதற்காக கொடுக்கிற முக்கோண வடிவில் செதுக்கப்பட்ட மரமாகும். அதுபோலத்தான் தாங்களாக சிந்திப்பதை நிறுத்திவிட்டு குறிப்பட்ட கொள்கையை தாங்கிப் பிடிக்கிறவர்களை முட்டாள் என்கிறது தமிழ்மரபு. 

மடை என்பது வாய்காலில் நீர் வெளியேற்ற அமைக்கப்பட்ட மதகின் கதவு ஆகும். ஆக மடையன் என்பவனும் முட்டாள் என்ற சொல்லைப் போலவே குறிப்பட்ட கொள்கையை தாங்கிப் பிடிக்கிறவனுக்கான சொல் ஆகும்.

சமுதாயத்திற்குச் சிந்திக்கிறவர்கள் தேவை. கல்வி மேம்பாட்டிற்கும் தொழில் முன்னேற்றத்திற்கும் சிந்திக்கிறவர்கள் தேவை. நிறுவனங்கள் தமக்கான கூலிகளிடம் சிந்திக்கிற ஆற்றலை விரும்புவதில்லை. தலைவர்கள் தமக்கான தொண்டர்களிடம் சிந்திக்கிற ஆற்றலை விரும்புவதில்லை. ஒவ்வொரு மதமும் பின்பற்றாளர்களிடம் சிந்திக்கிற ஆற்றலை விரும்புவதில்லை. 

தமிழ்மரபு சிந்திக்கிறவர்களை முன்னெடுத்ததால்- தமிழர்களுக்கு மதம் தேவையாக இருக்கவில்லை. தமிழர்களுக்கென தனித்தலைவர் தேவையாக இருக்கவில்லை. தமிழர்களுக்கு தொல்கதைகள் தேவையாக இருக்கவில்லை. தமிழர்களுக்கென மார்க்சியம் போன்ற கோட்பாடுகள் தேவையாக இருக்கவில்லை. எல்லையில்லாத அறிவு பெட்டகமாக தொடர்ந்து வளரும் தாய்மொழியாம் தமிழே தேவையாக இருக்கிறது. தமிழே அடையாளமாக இருக்கிறது. அதனால்தாம்- தமிழரை முட்டாளாக்க, தமிழரை மடையனாக்க நினைப்பவர்கள் தமிழை தமிழனிடம் இருந்து பிடுங்க முயல்கின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,243.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.