சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து விளையாடியதாக தொன்னூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக நான்காவதாக ஆம்பல் மலர் குறித்து அமைகிறது இந்தக் கட்டுரை. சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. ஆம்பல் இரவில் மலர்ந்து காலையில் குவியும். ஆனால் தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். தாமரை என்றவுடன் பாஜக நினைவுக்கு வந்தால், அது வடக்கில் மலர்ந்திருந்தாலும் தெற்கில் குவிந்திருக்கும். அல்லி வையையில் மிதந்து வந்தது என்றும், மகளிர் உள்ளங்கை மலர்ந்த அல்லி போன்றது என்றும், நெற்றியில் பொட்டணி- நெஞ்சில் அல்லிச்சாந்து- தோளில் தொய்யில்- காலடியில் பஞ்சிக் குழம்பு- ஆகியவற்றைத் தலைவன் தலைவிக்கு இட்டு நலம் பாராட்டுவான் என்றும், அல்லிப்பூ மாலை தொடுக்க உதவும் என்றும், மணிமேகலை ‘அல்லியங்கோதை’ என்று அன்மொழித் தொகையாகக் குறிப்பிடப்படுகிறாள். என்றும் சங்க இலக்கியங்கள் அல்லியைக் கொண்டாடியுள்ளன.
02,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியில் பூக்கும் மலர் ஆகும். ஆம்பல் மலர்க் கொடியை குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம்.