மனிதனின் எண்ணிக்கைஇயல்புக்கு உரிய காலக்கெடு என்கிற வாழாண்டு நூற்றி இருபது ஆண்டுகள் என்பதை இயல்கணக்கு அடிப்படையில் நிறுவும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. 30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126: 'எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு காரணம்' என்பது- தமிழ்முன்னோர் முன்னெடுத்த, முத்தமிழில் மூன்றாவது தமிழான இயற்றமிழில், இரண்டில் ஒன்றான இயல்கணக்கில். (மற்றொன்று இயல்அறிவு), இரண்டாவது முன்னேற்றக்கலையான கணியத்தின் அடிப்படை ஆகும். மனிதனின் எண்ணிக்கைஇயல்புக்கு உரிய காலக்கெடு என்கிற வாழாண்டு நூற்றி இருபது ஆண்டுகள் என்பதை இயல்கணக்கு அடிப்படையில் நிறுவ முடியும். தமிழ்முன்னோரின் காலக்கணக்கில் அறுபது என்கிற எண்ணிக்கை சிறப்பிடம் பெறுகிறது. ஒரு நாளுக்கு அறுபது நாழிகை தமிழின் அடிப்படை எண்களான ஒன்பது எண்களிலும் அந்த எண்களின் அடிப்படை சார்ந்து நுட்பமான பொருளை அந்தந்த எண்களுக்கான சொற்களில் பொதித்துள்ளனர் தமிழ்முன்னோர். அறுபது என்கிற சொல்லிலேயே அறுவது, அறுந்து விடுவது என்பதாக காலக்கெடு முடிவது என்கிற பொருளைத் தமிழ்முன்னோர் பொதித்துள்ளனர். 'ஒரு நாளுக்கு அறுபது நாழிகை' என்பதில் நாளின் காலக்கெடுவான வாழ்நாழிகை அறுபது எனக் குறிக்கப்படுகிறது. முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவி இயற்கை இரண்டின் அடிப்படையானது என்றும் தெளிவு படுத்தியுள்ளனர் தமிழ்முன்னோர். ஆக மெய் (உடல்) உயிர் இரண்டுமான உயிர்மெய்யே மனிதன் என்கிற நிலையில் அவனுடைய வாழாண்டு உடலுக்கு அறுபது ஆண்டுகள் உயிருக்கு அறுபது ஆண்டுகள் எனக் கணக்கிட்டு மனிதனின் வாழாண்டு நூற்றி இருபது ஆண்டுகள் என்று நிறுவலாம். உடலுக்கான அறுபது ஆண்டுகளில் மனிதன் உடலுக்கு முதன்மை கொடுத்து வாழவேண்டும். அடுத்த அறுபது ஆண்டுகளுக்கு அவன் உயிர் வாழ்வதற்கு முந்தைய, உடல்முதன்மை வாழ்க்கை ஊக்கமாக அமையும். என்பதை நாம் புரிந்து கொண்டு நாம் நூற்றி இருபது ஆண்டுகள் உறுதியாக வாழ்ந்திருப்பதற்கு நம்மை அணியப்படுத்தலாம். மனிதனின் முதல்பத்து ஆண்டுகள் குடும்பக் காப்பு மந்திரத்தில் வரையறுத்துள்ளபடி குறிஞ்சித்திணையின் மாட்சிக்கு உரியது ஆகும். மனிதனின் முதல் பத்து ஆண்டுகளை முழுக்க முழுக்க உடல்நலத்திற்கே ஒப்படைத்திருக்க வேண்டும். உடல் நலம் என்று பார்க்கிற போது விளையாட்டையும், ஆடல் பாடலையும், உணவுப்பழக்கத்தையும் இயற்கை சூழலையும் சிறப்பாக கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. குறிஞ்சித்திணை கடவுள்கூறு தெய்வம் சேயோனின் மாட்சிக்குரிய தலைப்பே உடல்நலம். குறிஞ்சித்திணை, சேயோன் போன்றவைகளின் தொடர்புடையவைகள் அனைத்தும் மனிதனின் முதலாவது பத்தாண்டு வாழ்க்கையில் கொண்டாடத்தக்கவை என்று துணியலாம். மனிதனின் இரண்டாவது பத்து ஆண்டுகள் குடும்பக் காப்பு மந்திரத்தில் வரையறுத்துள்ளபடி முல்லைத்திணையின் மாட்சிக்கு உரியது ஆகும். மனிதனின் இரண்டாவது பத்து ஆண்டுகளை முழுக்க முழுக்க மனமகிழ்ச்சிக்கே ஒப்படைத்திருக்க வேண்டும். மனமகிழ்ச்சி என்று பார்க்கிற போது கல்வி (நிருவாகம் அல்ல) மிக அடிப்படையானது. உணவுப்பழக்கத்தையும் இயற்கை சூழலையும் உடன் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. முல்லைத்திணை கடவுள்கூறு தெய்வம் மாயோனின் மாட்சிக்குரிய மனமகிழ்ச்சி. முல்லைத்திணை, மாயோன் போன்றவைகளின் தொடர்புடையவைகள் அனைத்தும் மனிதனின் இரண்டாவது பத்தாண்டு வாழ்க்கையில் கொண்டாடத்தக்கவை என்று துணியலாம். மனிதனின் மூன்றாவது பத்து ஆண்டுகள் குடும்பக் காப்பு மந்திரத்தில் வரையறுத்துள்ளபடி மருதத்திணையின் மாட்சிக்கு உரியது ஆகும். மனிதனின் மூன்றாவது பத்து ஆண்டுகளை முழுக்க முழுக்க பொருளாதார முன்னேற்றத்திற்கே ஒப்படைத்திருக்க வேண்டும். பொருளாதார முன்னேற்றம் என்று பார்க்கிற போது தனித்திறன், தொழில், வேளாண்மை, வணிகம் ஆகியவற்றில் விருப்பமான ஒன்றில் முழுமையைக் கொணர்வது அடிப்படையாகும். உணவுப்பழக்கத்தையும் இயற்கை சூழலையும் உடன் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மருதத்திணை கடவுள்கூறு தெய்வம் மன்னனின் மாட்சிக்குரிய தலைப்பே பொருளாதார முன்னேற்றம். மருதத்திணை, மன்னன் போன்றவைகளின் தொடர்புடையவைகள் அனைத்தும் மனிதனின் மூன்றாவது பத்தாண்டு வாழ்க்கையில் கொண்டாடத்தக்கவை என்று துணியலாம். மனிதனின் நான்காவது பத்து ஆண்டுகள் குடும்பக் காப்பு மந்திரத்தில் வரையறுத்துள்ளபடி பாலைத்திணையின் மாட்சிக்கு உரியது ஆகும். மனிதனின் நான்காவது பத்து ஆண்டுகளை முழுக்க முழுக்க பயணத்திற்கே ஒப்படைத்திருக்க வேண்டும். பயணம் என்று பார்க்கிற போது தனித்திறன், தொழில், வேளாண்மை, வணிகம் ஆகியவற்றில் விருப்பமான ஒன்றில் கொணர்ந்த முழுமைக்காக தொடர்ந்து பயணிப்பது அடிப்படையாகும். உணவுப்பழக்கத்தையும் இயற்கை சூழலையும் உடன் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பாலைத்திணை கடவுள்கூறு தெய்வம் கொற்றவையின் மாட்சிக்குரிய தலைப்பே பயணம். பாலைத்திணை, கொற்றவை போன்றவைகளின் தொடர்புடையவைகள் அனைத்தும் மனிதனின் நான்காவது பத்தாண்டு வாழ்க்கையில் கொண்டாடத்தக்கவை என்று துணியலாம். மனிதனின் ஐந்தாவது பத்து ஆண்டுகள் குடும்பக் காப்பு மந்திரத்தில் வரையறுத்துள்ளபடி நெய்தல் திணையின் மாட்சிக்கு உரியது ஆகும். மனிதனின் ஐந்தாவது பத்து ஆண்டுகளை முழுக்க முழுக்க தொடர்புகளின் ஒத்துழைப்பிற்கே ஒப்படைத்திருக்க வேண்டும். தொடர்புகளின்; ஒத்துழைப்பு என்று பார்க்கிற போது குடும்ப உறவுகள், நட்புகள், செல்பேசி, கணினி, வலைதளங்கள், சொந்த இணையத்தளம் ஆகியவற்றைக் கொண்டாடுவதோடு, தனித்திறன், தொழில், வேளாண்மை, வணிகம் ஆகியவற்றில் விருப்பமான ஒன்றில் நீங்கள் கொணர்ந்த முழுமையில் அமைந்த தொடர்புகளில் இயங்குவதோடு உணவுப்பழக்கத்தையும் இயற்கை சூழலையும் உடன் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நெய்தல்திணை கடவுள்கூறு தெய்வம் வருணனின் மாட்சிக்குரிய தலைப்பே தொடர்புகளின் ஒத்துழைப்பு. நெய்தல்திணை, வருணன் போன்றவைகளின் தொடர்புடையவைகள் அனைத்தும் மனிதனின் ஐந்தாவது பத்தாண்டு வாழ்க்கையில் கொண்டாடத்தக்கவை என்று துணியலாம். மனிதனின் ஆறாவது பத்து ஆண்டுகள் கணியக்கலை அடிப்படையில் தொழில்நுட்பம் என்கிற இயல்புக்கு உரியது ஆகும். உங்கள் பணிகள் அனைத்தையும் மிடுக்காக (ஸ்மார்ட்) முன்னெடுப்பது என்கிற நிலைக்கு படிப்படியாக மாறிவர வேண்டும். மனிதனின் ஆறாவது பத்து ஆண்டுகளை முழுக்க முழுக்க தொழில் நுட்பத்திற்கே ஒப்படைத்திருக்க வேண்டும். தொழில்நுட்பம் என்று பார்க்கிற போது கருவிகளைப் பேரளவாகப் பயன்படுத்துதல், கருவிகளைப் படைத்தல் என்று இயங்க வேண்டும். தனித்திறன், தொழில், வேளாண்மை, வணிகம் ஆகியவற்றில் விருப்பமான ஒன்றில் நீங்கள் கொணர்ந்த முழுமையில் நேரடிப்பார்வையில் நடந்த அனைத்தையும் கடந்த பத்தாண்டுகளில் கட்டிய தொடர்புகளுக்கு மாற்றிக் கொடுத்துவிட வேண்டும். உடல் வாழ்க்கையில் இருந்து உயிர் வாழ்க்கையை இந்தப் பத்தாண்டில் தொடங்கிவிட்ட நிலையில், உணவுப்பழக்கமும் இயற்கை சூழலும் இயல்பூக்கமான உங்களுக்குப் பொருந்தி வரும். மனிதனின் ஏழாவது பத்து ஆண்டுகள் கணியக்கலை அடிப்படையில் கமுக்கம் என்கிற இயல்புக்கு உரியது ஆகும். உஙகள் பணிகள் அனைத்தையும் கமுக்கமாக முன்னெடுப்பது என்கிற நிலைக்கு படிப்படியாக மாறிவர வேண்டும். மனிதனின் ஏழாவது பத்து ஆண்டுகளை முழுக்க முழுக்க கமுக்கத்திற்கே ஒப்படைத்திருக்க வேண்டும். கமுக்கம் என்று பார்க்கிற போது இதுவரை நீங்கள் அடைந்த வெற்றிகளை அலசுவது ஆகும். நீங்கள் அடைந்த வெற்றிகளின் பலனை, கடந்த இருபதாண்டுகளில் கட்டிய தொடர்புகளுக்கு பகிர்ந்தளிக்க பரிசுகள் எல்லாம் அறிவிக்கலாம். உடல் வாழ்க்கையில் இருந்து உயிர் வாழ்க்கையில் களமாடுகிற நிலையில், உணவுப்பழக்கமும் இயற்கை சூழலும் இயல்பூக்கமான உங்களுக்குப் பொருந்தி வரும். மனிதனின் எட்டாவது பத்து ஆண்டுகள் கணியக்கலை அடிப்படையில் புகழ் என்கிற இயல்புக்கு உரியது ஆகும். உங்கள் பணிகள் அனைத்தையும் வெளிப்படையாக முன்னெடுப்பது என்கிற நிலைக்கு படிப்படியாக மாறிவர வேண்டும். மனிதனின் எட்டாவது பத்து ஆண்டுகளை முழுக்க முழுக்க புகழில் களமாடுவதற்கே ஒப்படைத்திருக்க வேண்டும். புகழ் என்று பார்க்கிற போது இதுவரை நீங்கள் ஈட்டிய தொடர்புகளை நிருவகிப்பது மட்டுமே ஆகும். நீங்கள் கட்டிய தொடர்புகள் உங்களை சிறப்பாக முன்னெடுப்பார்கள். உடல் வாழ்க்கையில் இருந்து உயிர் வாழ்க்கையில் களமாடுகிற நிலையில், உணவுப்பழக்கமும் இயற்கை சூழலும் இயல்பூக்கமான உங்களுக்குப் பொருந்தி வரும். மீதமுள்ள நாற்பது ஆண்டுகளை உங்கள் தொடர்புகளின் அரவணைப்பில் வாழ்ந்து முடிக்கலாம்.
ஒரு நாழிகைக்கு அறுபது விநாழிகை
ஒரு விநாழிகைக்கு அறுபது தற்பரை
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,040.