03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்முன்னோர், நமது மூன்றாவது தமிழான இயற்றமிழில்- இவ்வாறுதான் நடக்கும் என்கிற இயற்கையின் கோட்பாடு, நடைமுறைகளை இயல்அறிவு என்றனர். இயல் என்பது இயம் என்கிற கோட்பாட்டையும், இயக்கம் என்கிற நடைமுறையையும் உள்ளடக்கியது ஆகும். கோட்பாடும் நடைமுறையும் ஆன இயல் உடைய அனைத்தையும் இயற்கை என்றனர் தமிழ்முன்னோர். தமிழ்முன்னோர் மூன்றாவது தமிழான இயற்றமிழில்- கடவுளில் (விசும்பு) நமக்கு நாமே எழுதிக் கொள்கிற தலையெழுத்தால், கடவுள் இவ்வாறு நடத்திக் கொடுக்கலாம் என்கிற எதிர்பார்ப்பை இயல்கணக்கு என்றனர். இயல்அறிவை தொழில்நுட்பக்கல்வி என்ற வகையிலும், இயல்கணக்கை முன்னேற்றக் கலை என்ற வகையிலும், வளர்த்து வந்திருந்தனர். இயல்அறிவு கட்டுமானம், சிற்பம், கருவியாக்கம், என்று வளர்ந்தது. இயல்கணக்கு சோதிடம், சாதகம் என்கிற நிமித்தகக் கலை, கணியக்கலை, மந்திரக்கலை என்று மூன்று கலைகள் ஒன்றன் பின் ஒன்றாகவும், மேம்பாடு மிக்கதாகவும் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்முன்னோர் முதலாவது முன்னேற்றக் கலையாக முன்னெடுத்திருந்த சோதிடம், சாதகம் என்கிற நிமித்தகக் கலைக்கு அடிப்படையானது நிமித்தம் என்கிற பொருள் பொதிந்த தமிழ்ச்சொல் ஆகும். பிற்காலத்தில் அது சகுனம் என்கிற சமஸ்கிருத மொழிபெயர்ப்போடு, மூடநம்பிக்கை என்கிற சாடலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறது. நிமித்தம் என்பது வாழ்வில் பின்நிகழவிருக்கும் நன்மை தீமைகளைச் சில நிகழ்ச்சியின் வாயிலாக நமது இயல்பூக்கமான மந்திர ஆற்றலால் விசும்பு (கடவுள்) நமக்கு முன்னதாக உணர்த்துகிற ஒரு பாடு ஆகும். நிமித்தங்கள் எதிர்கால நிகழ்ச்சிகளை முன் கூட்டியே விசும்பு (கடவுள்) அறிவிக்கும் அறிகுறியாக பழந்தமிழ் மக்களால் தொன்றுதெட்டு புரிந்து கொள்ளப்பட்டு வந்திருந்தது. நிமித்தம் என்ற சொல்- தொல்காப்பியத்தில் காரணம், நிமித்தம், கூட்டம் ஆகிய பொருட்களில் பயின்று வந்துள்ளது. சங்க இலக்கியங்களில் புள் என்ற சொல் நிமித்தம் என்ற பொருளில் பலவிடங்களில் இடம் பெற்றிருக்கின்றது. இதற்கேற்பவே பறவை புள் நிமித்தமாக தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ளது (தொல் பொருள் 88:16-17) இலக்கியங்களில் பெரும்பாலும் கனவுகளில் இயற்கைக்கு முரண்பாடான அச்சந்தரக்கூடிய செயல்நிகழ்வுகளிலும் இயற்கைத் தன்மைக்கு மாறுபட்ட நிகழ்ச்சி சூழ்நிலை வயப்பட்ட பொருட்களின் செயல்களிலும் நிமித்தங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பண்டைத் தமிழக மக்களிடையே நிமித்தங்கள் தெளிவான புரிதலோடு முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றைப் பழந்தமிழ் இலக்கியங்களின் மூலம் அறியலாம். அயலவர் வரவுக்குப் பிந்தைய பிற்கால நாட்டுப்புற இலக்கியத்தில் எதனையும் உயர்வுபடுத்திக் காட்டும் தன்மையினால், தீ நிமித்தக் குறியீடுகளாகச் சில நிகழ்ச்சிகள் மிகைப்படுத்தி சொல்லப்பட்டுள்ளன. ஆனால் நாட்டுப்புற இலக்கியங்களில் கனவுகளில் மட்டுமின்றி இயற்கையை ஒட்டி நடைபெறும் நிகழ்ச்சிகள் மூலமாகவும் தெரிவிக்கப்படுகின்றன. நாட்டுப்புற கதைப்பாடல்களில் உணர்த்தப்படும் நிமித்தங்கள் பின்வரும் நான்கு விதமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. நல்லதங்காள் கதைப்பாடலிலும் நல்லதங்காள் கணவன் சொல்லைக் கேளாமல் தாய் வீட்டுக்குச் செல்லுகையில் அவளுக்கு எதிர்ப்பட்ட நிகழ்ச்சிகள் தீ நிமித்தக்குறிகளாக கீழ்க்கண்ட வரிகளின் வாயிலாக உரைக்கப்பட்டுள்ளன. நிமித்தக் குறியீடுகள், மக்களின் வாழ்க்கையில் நல்ல பலன்களையோ அல்லது தீய பலன்களையோ உறுதியாக ஏற்படுத்தியுள்ளமையால், அவைகள் மக்களின் வாழ்வியலோடு ஒன்றி விட்ட நிலையினை இன்றும் நம்மால் காண முடிகிறது. நிமித்தம் என்பது அவரவர்களுக்குத் தோன்றுகிற முன் அறிவிப்புகளே. நிமித்தம் என்பது இப்படியெல்லாமானது என்றும் இவற்றுக்கு இன்ன இன்ன பலன் என்கிற அயல் வரவினர் கட்டமைத்த செய்திகளில் முடங்க வேண்டியதில்லை. நிமித்தம் முழுக்க முழுக்க கொஞ்ச நேரத் தாமதிப்புக்கானது மட்டுமே என்பதை நமது பட்டறிவே நமக்கு உணர்த்த முடியும். ஆனாலும் நிமித்தம் தட்டிக்கழிப்பதற்கானது என்ற புறந்தள்ளுவது பிழையாகும். பயணத்தில் விபத்தை சந்தித்தவர்களில் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது பேர்கள், தங்களுக்கு நிமித்தமாக வந்த (விசும்பின்) முன்னறிவித்தலை புறந்தள்ளிதாக புலம்புவதைக் கேட்க முடியும். நாம் ஒவ்வொரு தற்பரை நேரமும்- செயலாலும், எண்ணத்தாலும், தமிழாலும் (எண்ணமொழி) விசும்போடு தொடர்பில் இருக்கிறோம். இந்தத் தொடர்பு நம்முடைய தலையெழுத்தை நாமே எழுதிக் கொள்கிற தொடர்பு ஆகும். இந்தத் தொடர்பால் விசும்பு நம்மிடம் இருந்து இயக்கம் பெற்று, நம்மிடம் இருந்து இயக்கம் பெற்ற வகைக்கு நம்மை இயக்குகிறது என்பதே தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலை மந்திரம் தெரிவிக்கும் செய்தியாகும். அந்த வகையில் விசும்பு உங்களை பாதுகாப்பிற்கு ஆற்றுப்படுத்தும் முன்னெடுப்பே நிமித்தம் ஆகும். நிமித்தத்தை ஒருபோதும் மூடநம்பிக்கை என்று புறந்தள்ள வேண்டியதில்லை. நீங்கள் வெளியே கிளம்பும் போது உங்கள் பிள்ளை எங்கே போகின்றீர்கள் அப்பா என்று கேட்பது உங்கள் பயணத்தில் ஒரு பாதுகாப்பை நிறுவுதற்கான நிமித்தமே ஆகும். போகும் போது எங்கே போகின்றீர்கள் என்று கேட்பது பிழையென்று உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்த முனைவதுதான் உண்மையில் பிழை. உங்கள் பிள்ளைக்கு எங்கே போகின்றீர் என்று அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தெரிவிக்க எடுத்துக் கொள்ளும் தாமதம் உங்களுக்கான பாதுகாப்பு ஆகும். உங்களுக்குப் பிடிக்காத எதிர் வீட்டுக்காரர் அல்லது பக்கத்து வீட்டுக்காரர் உங்கள் பயணத்தில் இடைப்பட்டால் அது உங்கள் பயணத்தில் ஒரு பாதுகாப்பை நிறுவுதற்கான நிமித்தமே என்று அவர்களின் இடையீட்டுக்கு மதிப்பளியுங்கள். தண்ணீர் அருந்தவோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியை கொஞ்சம் பார்த்துக் கொண்டிருக்கவோ, உங்கள் செல்பேசியில் கொஞ்ச நேரம் வேலையாகவோ இருந்து கொஞ்சம் தாமதியுங்கள். எப்போதும் பயணத்தை நேர நெருக்கடியாக திட்டமிடாதீர்கள். பயணத்தொடக்கம் எப்போதுமே பொறுமையாக அமையட்டும். நிமித்தத்தை எதிர் நோக்கியல்ல. நிமத்தம் வந்தால் காலம் கொடுப்பதற்கு. எதிர்வரும் நிமித்தத்தைத் தடையாகக் கருதாமல், அது பயணத்தில் ஒரு பாதுகாப்பை நிறுவுதற்கான நிமித்தமே என்று புரிந்து கொண்டு, உங்கள் பயணத்தை சில மணித்துளிகள் தாமதித்து அதற்கு மதிப்பளியுங்கள்.நிமித்தத்தை மதிப்போமாக. பயணப்பாதுகாப்பில் சிறப்போமாக.
1. கனவில் நேரிடையாகத் தெய்வம் வந்து உரைத்தல் தன் நிமித்தக் குறியீடாக அமைதல்.
2. கனவில் மட்டுமின்றி நேரடியாகத் தோன்றும் சில இயற்கை நிகழ்வுகள் தீ நிமித்தக் குறியீடாகக் கொள்ளுதல்.
3. கனவில் இன்றி வாழ்விலும் நேரிடையாக நடைபெறும் சில நிகழ்வுகள் நல்ல நிமித்தமாக அமைதல்.
4. சோதிடர் கூற்றினைப் பின்னர் நிகழக்கூடிய நிகழ்வுகளின் குறியீடாக ஏற்றுக் கொள்ளல்.
வண்ணான் வெளுத்த புடவைகண்டாள்
சாரைகுறுக்காச்சு சர்ப்ந்தடையாச்சு
பூனைகுறுக்காச்சு புதுப்பானை முன்னாச்சு
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,437.