Show all

கடவுள் இறை தெய்வம்

இந்தக் கட்டுரை- கடவுள் இறை தெய்வம் என்னும் மூன்று சொற்களில், தமிழ் முன்னோர் பொதித்து வைத்திருக்கிற தமிழ் மெய்யியலை இயன்ற வரை விளக்க முயல்கிறது.  

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கடவுள் இறை தெய்வம் இந்த மூன்றும் தமிழ்ச்சொற்கள். அந்த மூன்றுக்கும் ஆன பொருளை ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ, வங்காள மொழியிலோ தேடினால்- கடவுள் இறை தெய்வம் என்ற இந்த மூன்றுக்கும் மூன்று வகையான சொற்களைத் தரலாமேயொழிய அந்த மூன்று சொற்களும் தமிழ் தருகிற வகையான பொருட்களை தரமாட்டா.

ஆங்கிலத்தில் தேட: கடவுள் என்பதற்கு காட் என்றும், இறை என்பதற்கு டிவைன் என்றும், தெய்வம் என்பதற்கு எல்ப் என்றும் சொற்கள் கிடைக்கின்றன.
ஹிந்தியில் தேட: கடவுள் என்பதற்கு பரமேஸ்வர் என்றும், இறை என்பதற்கு தெய்வ் என்றும், தெய்வம் என்பதற்கு யோஜினி என்றும் சொற்கள் கிடைக்கின்றன.
வங்காள மொழியில் தேட: கடவுள் என்பதற்கு சிருஷ்டி கர்த்தா  என்றும், இறை என்பதற்கு ஐஸ்பரிக்கா என்றும், தெய்வம் என்பதற்கு பரி என்றும் சொற்கள் கிடைக்கின்றன.

இந்த மூன்று மொழிகளிலும் கிடைக்கிற ஒன்பது சொற்களின் பொருளை கடவுள் என்றும் சொல்லலாம், இறை என்றும் சொல்லலாம், தெய்வம் என்றும் சொல்லலாம், என்பது போலவே நடைமுறைத் தமிழர்கள் யாரும் புரிந்துகொள்கிறார்கள். 

காரணம்- தமிழர்கள் யாரும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தங்கள் மொழி தமிழில் இருக்கிற கடவுள் இறை தெய்வம் ஆகிய இந்த மூன்று சொற்களும் கற்பிக்கும் பொருள் என்ன என்று தேடுவதற்கான அமைப்பு தமிழகத்தில் ஒன்று கூட இல்லை.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார் என்று நாம் படிப்போம். ஆனால் இந்த மூன்று சொற்களின் துறையை தமிழில் மீட்க ஓர் அமைப்பு இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தோன்ற வில்லை. 

காரணம் இந்த மூன்று சொற்களில் தமிழ் முன்னெடுத்த தமிழ்மெய்யியல் மிக நுட்பமானது. நாம் எளிமையாக அதைக் கிடப்பில் போட்டு விட்டு, எளிதாக இருக்கிற நிலையிலும், வழிகாட்ட, பரப்ப ஆட்கள் இருக்கிற நிலையிலும் உலகினரின் மதங்களை பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். 

இந்தியாவில் தமிழன் யாரும்- தன்னுடைய மதம் கிறித்துவம், அல்லது முகமதியம் என்று உலகில் உள்ள ஏதாவதொரு மதத்தைத் தெரிவிக்காவிட்டால் அவன் ஹிந்து என்ற பட்டியலுக்குள் தானாக வந்துவிடுகிற அமைப்பை இந்திய அதிகார வர்க்கத்தில் இருக்கிற பார்ப்பனியம் கட்டமைத்திருக்கிறது. 

ஹிந்திக்கு எதிராக தமிழைத் தூக்கிப்பிடித்த திராவிட இயக்கங்களும்- ஹிந்துத்துவாவிற்கு எதிராக தமிழ்மெய்யியல் என்கிற அந்த நுட்பவியலை கையில் எடுக்கவில்லை. 

மாறாக  ஹிந்தியில் தேடக் கிடைக்கிற கடவுள் என்பதற்கு பரமேஸ்வர் என்றும், இறை என்பதற்கு தெய்வ் என்றும், தெய்வம் என்பதற்கு யோஜினி சொல்லப்படுகிறவைகளை- அவைகள் இல்லை, அவைகளைக் கற்பித்தவர்கள் முட்டாள், அவைகளை வணங்குகிறவர்கள் காட்டுமிராண்டி என்று அவைகளை மறுக்க தமிழ் மெய்யியல் வழங்கியுள்ள பொருள் பொதிந்த கடவுள் இறை தெய்வம் என்கிற சொற்களை வீணடித்தார்கள். இன்றும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார் என்று நாம் படிக்கிறோமே- அதற்கு ஏற்ப, கடவுள் இறை தெய்வம் என்கிற மூன்று சொற்களில் ஒட்டு மொத்த தமிழ் மெய்யியலையும் நமக்குப் பொதித்து வைத்திருக்கின்றார்கள் நமது முன்னோர்கள்.

உண்மையில் அந்த அடிப்படையில்தாம் மற்ற மதங்கள் சொல்லும் கருத்துருக்களையும் தமிழர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அந்த மதங்கள் சொல்லும் தொல்கதைகளோடு நாம் அவர்கள் சொல்லும் கருத்துருக்களை ஒருகாலும் நடைமுறைத் தமிழர் யாரும் பொருத்திப் பார்ப்பதில்லை என்பதுதாம் உண்மை. 

அந்தத் தொல்கதைகளில், குறிப்பாக பார்ப்பனியம் கொண்டாடுகிற தொல்கதைகளில் சொல்லப்பட்டவற்றை, பொருத்திப் பார்க்கிற தமிழர்கள் அந்தத் தொல்கதைகள் கட்டமைத்திருக்கிற ஆபாச அருவருப்பில் அவைகளை இல்லை என மறுக்கும் தலைப்பில் இயங்குகிறார்கள். அது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது. எதில் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கிறார்களோ அதை மறுப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது. 

தமிழ் கொண்டிருக்கிற ‘கடவுள்’ என்கிற ஒரு தலைப்பை விளங்க வைப்பதே மிகக் கடினம். ஏனென்றால் அது அவ்வளவு நுட்பமானது. தமிழ் மெய்யியலைக் கட்டமைப்பது உண்மையில் கடினமே. ஆனால் தமிழ் மெய்யியலைக் கட்டமைப்பதில் மட்டுமே தமிழர்களுக்கான விடிவு இருக்கிறது என்பது மட்டும் உண்மை. கடவுள், இறை, தெய்வம் என்கிற மூன்று கட்டுரைகள் அடுத்தடுத்து வரும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.