1.எழுத்து மொழியையும், 2.அந்த எழுத்து மொழியில் அமைந்த, அந்தச் சொந்த மொழியினத்தின் தரவுத்தொகுப்புகளின் படிநிலை வளர்ச்சியடைந்த இயல்கணக்கையும் கற்றுக் கொடுப்பதற்கானதே கல்வி ஆகும் என்று தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

07,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5126: 

ஐந்து அகவை குழந்தை தன் நேரடி ஈடுபாட்டில்- தாயின்மடியில், குடும்ப உறவில், சொந்த பந்தங்களில், நட்பில் சொந்த மொழியை முழுமையாகப் பேசக் கற்றுவிடுகிறது.

அந்தக் குழந்தை தன் தொலைத் தொடர்பில்- பேரளவினரில், மிகப்பேரளவாகக் கற்க, தரவுத்தொகுப்புகளான நூல்களும், நூல்கள் அமைந்த எழுத்து மொழியும்,  தேவையாய் இருக்கிறது.

1.அந்த எழுத்து மொழியையும், 
2.அந்த எழுத்து மொழியில் அமைந்த, அந்தச் சொந்த மொழியினத்தின் தரவுத்தொகுப்புகளின் படிநிலை வளர்ச்சியடைந்த இயல்கணக்கையும் கற்றுக் கொடுப்பதற்கானதே கல்வி ஆகும்.

அயல் இனத்தவர் தமிழினத்தோடு வந்து கலப்பதற்கு முன்புவரை இந்தக் கல்விமுறையே தமிழ்நாட்டில் சிறப்பாகப் பேணப்பட்டு வந்தது.

அயல் இனத்தவர் தமிழினத்தோடு வந்து கலப்பதற்கு முன்பே தமிழ்வணிகர்களான சாத்தனார் அயல் இனத்தொடர்பில் இருந்தனர். 

தமிழ்ச்சாத்தனார்கள்- தொடர்பில்இருந்த, உலகினரை மலைக்க வைத்து, அவர்கள் தமிழின இருப்பிடத்தை தேடி வரக் காரணம் ஆனதும் தமிழ்முன்னோர் கொண்டிருந்த இயல்கணக்கே.

அந்தக் கல்விமுறையில் பயின்றவர்கள்தான் தொல்காப்பியர், ஒளவை, கணியன் பூங்குன்றனார், திருவள்ளுவர் போன்ற புலவர் பெருமக்கள் எல்லாம்.

நடப்பிலும், இயல்கணக்கு என்கிற உண்மை அறிவுக்கான, தமிழ்முன்னோர் நிறுவியிருந்த அடிப்படை கல்வியை பத்தாம் வகுப்புவரை கொடுக்க முடியும். 

தொழில்ஆற்றுவதற்கும், வேளாண்மைக்கும், வணிகமாற்றுவதற்கும், எந்தத் தனித்திறனுக்கும் அந்தக் கல்வி போதுமானது. இவர்களின் நிறுவனங்களில் நிருவாகக் கூலியாக இயங்குவதற்கும் அந்தக்கல்வி போதுமானது.

உடல் உழைப்பு கூலித்தளத்தில் இயங்குவதற்கு, எந்தக் கல்வியும் தேவையில்லை என்பது, வடஇந்தியாவில் இருந்து, பேரளவினராக, தமிழ்நாட்டில், உடல் உழைப்பு கூலித்தளவேலைகளுக்கு குவிகிறவர்கள் சிறந்த சான்று ஆவார்கள்.

இயல் கணக்கில், இரண்டாவது எந்த மொழிக்கும் இடம் இல்லை. இயல்கணக்கை வேறு எந்த அயல்மொழிவழிக் கல்வியிலும் பயிற்றுவிக்க முடியாது.

நமது மண்ணை, பலவேறு அயல் இனங்களுக்கு தொழில்ஆற்றுவதற்கும், வேளாண்மைக்கும், வணிகமாற்றுவதற்கும், எந்தத் தனித்திறனுக்கும் ஒப்புக்கொடுத்துவிட்டு அவர்களின் நிறுவனங்களில் நிருவாகக் கூலியாக இயங்குவதற்கு உரியதாக பேணப்படுகிறது நடப்புத்; தமிழ்நாட்டுக் கல்வி.

அந்தக் கல்வியில் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் சேர்க்கப்படுகிறது. இன்னும் சிலரால் ஆங்கில வழிக்கல்வியும் சோக்கப்படுகிறது. அதை அரசுப் பள்ளிகளிலும் முன்னெடுக்க வழிவகையும் ஏற்படுத்தப்பட்டுவிட்ட பேரவலமும் தொடர்கிறது.

ஆங்கில வழியாகவே படிக்கிற நீங்கள் ஏன் ஹிந்தி என்கிற இன்னொரு மொழியையும் படிக்கக் கூடாது என்கிற வினாவை ஒன்றிய ஆட்சியில் அமைந்த ஹிந்தி வெறியர்கள் முன்னெடுக்கிறார்கள். இதுதான் நம் மீதான, மும்மொழித் திணிப்பின் அடிப்படை ஆகிறது.

இயல்கணக்கு வாழ்க்கைக்கானதும், உண்மை அறிவுக்கானதும் ஆகும்.

தமிழ்முன்னோர் இயல்அறிவுக் கல்வியையும் சிறப்பாக முன்னெடுத்தே வந்திருந்தனர். இயல்அறிவுக் கல்வி, இயல்அறிவுகான கோட்பாடுகளாக எழுத்துக் கல்வியாக அமையாமல் தொழிலில், வணிகத்தில், வேளாண்மையில், தனித்திறனில் நடைமுறைப் பாடற்றலாகவே முன்னெடுக்கப்பட்டது. 

அந்த வகை நடைமுறைப் பாடாற்றலில் இருந்தவர்களுக்கும் எழுத்துக் கல்வியும் கோட்பாடுகளும் இயல்கணக்காக மட்டுமே முன்னெடுக்கப் பட்டு வந்தது என்பதற்கும் நமக்கு நிறைய வரலாற்றுத் தரவுகள் கிடைக்கவே செய்கின்றன.

இயல்அறிவு என்கிற துறை நமக்கு இல்லவே இல்லை என்பதுபோல ஐரோப்பியம் கொண்டுள்ள ஆங்கில இயல்அறிவை, அறிவாக மலைத்து, சயின்சுக்கு அறிவியல் என்றே தலைப்பிட்டு, ஆங்கிலம் கட்டாயத் தேவை என்பதாகப் பிழையாகக் கருதியிருக்கிறோம்.

அடிப்படை கல்வி என்கிற பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் இரண்டாவது மொழி என்பதே தேவையில்லை. இரண்டாவது மொழி என்கிற தேவையைத்தாண்டி இரண்டாவது மொழிவழிக் கல்வி என்கிற பிழையான முன்னெடுப்பில் உலா வந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு.
இளவல் பட்டப்படிப்புகள், முதுவர் மேல்நிலைப் பட்டப் படிப்புகள் முனைவர் ஆய்வுநிலைப் படிப்புகள் அனைத்தும் துறை சார்ந்து படிக்கிற படிப்புகள். அவற்றில் ஒவ்வொருவரும் தெரிவு செய்கிற துறைப்படிப்பில் பிறமொழி கற்றலும், பிறமொழியினப் புதினங்கள் கற்றலும் தேவையாய் இருக்கலாம். அதையதை அந்தந்த நிறுவனங்கள் பயிற்றுவிப்பதில் பிழையில்லை. அந்த வகைகளுக்கும் நீட் போன்ற தடைத்தேர்வுகள் ஆதிக்க அடவடியே ஆகும்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,320.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.