Show all

இந்தியாவில் வேலையின்மை நிலையை ஒழிக்க உங்களால் சில கருத்துக்கள் கூற முடியுமா?

வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, இந்தியாவில் வேலையின்மை நிலையை ஒழிக்க உங்களால் சில கருத்துக்கள் கூற முடியுமா? என்ற கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.

30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரு மனிதன் தனது குடும்ப வருமானத்திற்கும் வளர்ச்சிக்குமாக அவன் எடுக்க வேண்டிய முயற்சிகள்- உழவு, தொழில், வணிகம், தனித்திறன், ஒப்பந்தம், வேலை இப்படி ஆறு வகையின.
நிலத்தை சொந்தமாக்கிக் கொண்டு நிலத்தை உழுது பயிர் விளைவிப்பது உழவு.
அனைத்துத் துறைக்குமான கருவிகள் இயந்திரங்கள், வடிவமைப்பது தொழில்.
விளைவித்த பயிரையோ, வடிவமைத்த கருவிகளையோ வாங்கி விற்பது வணிகம்.
நடிப்பது, பாடுவது, விளையாடுவது, வரைவது, எழுதுவது இவை தனித்திறன்.
ஒரு கட்டிடம், அல்லது ஒரு தொழிற்சாலை வடிவமைத்தல், கணினிமயமாக்கல், மின்மயமாக்கல் எல்லாம் ஒப்பந்த அடிப்படையில் முடித்துத் தருவது ஒப்பந்தம்.

இவற்றுள் உழவு, தொழில், வணிகம், ஒப்பந்தம் ஆகிய நான்கு வகைகளுக்கு அமைந்த நிறுவனங்களில் உடலுழைப்புக் கூலியாகவோ, நிருவாகக் கூலியாகவோ சம்பளத்திற்கு அவர்கள் சொல்கிற வேலையை அவர்கள் சொல்கிறபடி செய்து தருவது வேலை.

ஆக வேலையின்மை நிலை இல்லை என்பதாக ஏராளமான வேலைவாய்ப்புகளை இந்த உழவு, தொழில், வணிகம், ஒப்பந்தம் ஆகிய நான்கு வகை நிறுவனங்கள்தாம் உருவாக்கித்தர முடியும். இந்த நிறுவனங்களை அரசும் முன்னெடுக்கலாம். நீங்களும் நானும் கூட முன்னெடுக்கலாம். இந்த நான்கும் உடைமைகள் என்ற தலைப்பில் வரும். ஐந்தாவதாக தனித்திறனும் உடைமை என்ற தலைப்பிலேயே வரும்.

வேலை என்பது உடைமை அல்ல. உடைமையாளர்களிடம் அவர்கள் விதித்த தகுதிப்பாட்டில், நாம் பணியாற்றி ஆதாயம் பெறும் வகைக்கான உரிமை ஆகும்.

இந்தியா என்ற தலைப்பில் இந்த உடைமைக்கும், உரிமைக்கும் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு வாய்ப்பு இல்லை. இந்திய ஒன்றிய ஆட்சி, ஹிந்தி, ஹிந்துத்துவா, ஹிந்து ராஷ்டிரம் என்கிற வெள்ளையர்கள் வருகைக்கு முந்தைய ரஜபுத்திரர்களின் மனுவாதிக்கு முனையும் ஆட்சியாகவே நேற்றைய பாரதிய ராஷ்டிரிய காங்கிரசும், இன்றைய பாரதிய ஜனதா கட்சியும் தொடர்ந்து வருகிறது. 

இந்திய அளவில் நிரந்தர மாற்றம் காண, மாநில ஆட்சிக்கு முனையும் கட்சிகளின், கூட்டணி ஆட்சி- ஒன்றியத்திற்குத் தேவை. 
 
ஆகவே இதற்கான களப்பணி இப்போதைக்கு, தமிழ்நாட்டில் இருந்து தொடங்கப்பட்டால் போதும். தமிழர் யாரும், தமிழே தங்கள் முதல் உடைமை என்கிற அடையாளத்தை கொண்டாடுகிற தமிழராக இல்லை. கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்யுக்கு அலைகிறவர்களாக- ஆரியச்சார்பில் சிலர், அராபியச் சார்பில் சிலர், ஐரோப்பியச்சார்பில் சிலர், மார்க்சியச்சார்பில் சிலர், பல்வேறு மதச்சார்புகளில் சிலர் என அந்தந்தச் சார்புகளில் உரிமைக்குப் போராடிக் கொண்டுள்ளனர்.

அந்தந்த சார்புகளுக்கு வெளியே சிந்திக்கத் தூண்டுபவர்களும் உணர்ச்சியில் மட்டுமே தமிழியல் நிலைபாடாகவும் நடைமுறையில் அவர்களும் வேறு அயலியல் சார்பில் திளைக்கிற நிலையில் தமிழர்கள் யாரும் உடைமை குறித்து சிந்திக்கிற நிலையில் இல்லை.
 
உடைமை! இந்தத் தலைப்பில் இருந்து தமிழர்கள் விலகி பல ஆயிரம் ஆண்டுகளாகி விட்டன. முதலில் சுழியம் புள்ளி ஒரு விழுக்காடு தமிழராவது உலகளவில் பட்டியலிடப் படுகிற உடைமையாளராக உயர்ந்தாக வேண்டும்.

தமிழகத்தின் வேளாண்மை, தொழில்கள், வணிகம், கலை, கல்வி, என்று எந்தத் துறைக்கும் தமிழன் உடைமையாளனாக இல்லை. ஆனால் எல்லாத் துறைகளிலும் உலகளாவி தமிழன் இருக்கிறான்; உடல் உழைப்புக் கூலியாகவோ அல்லது நிருவாகக் கூலியாகவோ.
 
சுந்தர் பிச்சை அண்மைக் கால தமிழர் பெருமை; உலகின் மிகப் பெரிய நிறுவனத்திற்கே தலைவராம். உடைமைத் தளத்தில் பில்கேட்ஸ், அம்பானி அதானி என்று மட்டுமே பட்டியல் போடுவார்களாம். ஆனால் கூலித் தளத்திற்கு தமிழர்கள் மட்டுந்தானாம்.
அன்னியர் ஆட்சியில்தான் கப்பலோட்டிய தமிழன் உடைமையாளராக முயற்சித்தார் என்று செக்கிழுத்தார் என்றால் இன்றைக்கும் அப்படித்தான். தமிழன் தொழில் அதிபராகவோ, வணிகராக, வளர்ந்துவிடாமல் தடுக்க சட்ட நிருவாகத்தில் ஏழாயிரம் கிடிக்கிப் பிடிகள். அற்பக்காசு ஆண்டு இரண்டு இலட்சம் சம்மாதித்தாலே மிரட்டுவதற்கும், பிடுங்குவதற்கும், வழக்குப் போடுவதற்கும் வருமானவரித்துறை என்று ஒரு துறை. உடலுழைப்புக் கூலியாக மிச்சம் பிடித்து முன்னேறி விடாமல் தடுக்க சாராயக் கடைகள்.
 
உடைமையாளனை உருவாக்க கல்வி கிடையாது. எல்லாக் கல்வி நிறுவனங்களும் நிருவாகக் கூலிகளை உருவாக்கவே. அந்தக் கல்வி நிறுவன முதலாளிகளாகக் கூட தமிழர்கள் வந்து விடமாட்டர்கள். நிருவாகக் கூலிகளை உலகளாவி உருவாக்குவதற்கென்றே ஆங்கில வழிக் கல்வி. தமிழன் உடைமை குறித்து சிந்திக்காத வரை தமிழனுக்கு விடிவேயில்லை.

கூலிக்காரனுக்கு முதலாளி மொழிதான் தேவை.(நாய்களுக்கு வளர்ப்பவன் போடும் எலும்புக்காக அவன் மொழியைக் கற்று வாலாட்ட வேண்டிய தேவையிருகிறது. நாயின் மொழி நாய்களோடு சண்டை போடுவற்கு வெறும் குரைப்பாக மட்டும் போதுமானது.)
 
தமிழர்கள் உடைமை குறித்து சிந்திக்கும் போது மட்டுமே முதல் உடைமையான தாய்மொழியைக் தக்க வைக்கவைக்க முடியும்.
2.குடும்பம்
3.வீடு
4.கல்வி
5.கலை
6.இலக்கியம்
7.தொழில்
8.கருவிகள்
9.உடை,அணிகலன்
10.உணவுகள்
11.வணிகம்
12.நாடு
13.அரசு
14.நீராதாரம்
15.கோயில்
16.நிதி
17.நீதி
18.பாதுகாப்பு
19.பண்பாடு
20.வரலாறு
ஆகியவற்றில்
உடைமையாளனாக மாறு!
உன் தமிழனம் இழந்த அனைத்தும் கிடைக்கும்.

அப்பா உடலுழைப்புக் கூலியாகவோ, சொந்தத்தொழில் பாட்டாளராகவோ வளரமுடியாமலே இருந்தால் - பிள்ளைகளை நிருவாகக் கூலித்தளத்திற்கு கல்வி பயிற்றி முன்னேற்றுங்கள். அதற்காக அவர்களுக்கு மழலையர் கல்வியிலிருந்தே தனியார் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி கொடுத்து, தனியார் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சிக்குப் பாடாற்ற வேண்டாம். 

அரசுப் பள்ளியில் நடப்பில் இருக்கிற மேல்நிலைப் படிப்பு வரை தமிழ்வழிக் கல்வி, இளவல் முதுவர் முனைவர் பட்டப்படிப்புகளில் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி என்று அப்துல் கலாம், இறையன்பு போன்றவர்கள் பாதையில் பயணியுங்கள். அவர்களைப் பகுதிநேரமாக உடைமைதளத்தில் பழக்குங்கள். ஆதாயம் வளர்ச்சி காணும் வரை உடைமைத்தளத்தில் பகுதி நேரமாக ஈடுபட்டு கூலித்தளத்தில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை அதற்கு உரமாக்குங்கள். இதுவே தமிழர் உடைமைக்கும், உரிமைகளுக்குமான நிரந்தரத் தீர்வு ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,038.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.