Show all

இருள்நாறி மலர்! சங்ககால மலர்கள் தொன்னூன்றொன்பதின் வரிசையில்

சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து  விளையாடியதாக தொன்னூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக ஆறாவதாக இருள்நாறி மலர் குறித்து அமைகிறது இந்தக் கட்டுரை.

20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இருள்நாறி பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது. தற்காலத்தில் இருள்நாறி மலர் இருள்வாசி அல்லது இருவாச்சி என வழங்கப்பட்டு வருகிறது.

மாலையில் மலரும் பூவான இருள்நாறி மிகுந்த மணம் உடையது. இந்த மலரின் அல்லிகள் இரண்டு அடுக்காக அமைந்திருக்கும். நாறி என்பது மணத்தை குறிப்பதற்கானதாகும். 

நாற்றம் உரைக்கும், மலர் உண்மை; கூறிய

மாற்றம் உரைக்கும், வினை நலம்; தூக்கின்,

அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும்; முன்னம்

முகம் போல முன் உரைப்பது இல்.

என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூலான நான்மணிக்கடிகையில் வருகின்ற வெண்பாவாகும்.

இதன் பொருள்: மலரிருக்கும் இடத்தை அதன் மணம் உணர்த்தும். ஒருவன் செயல்திறனை அவனது சொற்கள் உணர்த்திவிடும். ஆராய்ந்து பார்த்தால் மனதில் பொதிந்த தீமையை அவன் மனம் அறிவிக்கும் முன்பே முகம் அறிவிப்பது போல் வேறு எதுவும் அறிவிக்காது. என்பதாகும்.

பதினெண் கீழ்க் கணக்கு நூல் வரையிலும் கூட தமிழில் நாற்றம் என்கிற சொல்- நல்ல மணம் என்பதான பொருளிலேயே கொண்டாடப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் தாம் அது தீயமணமாக்கப் பட்டிருக்கிறது.

இருள்நாறி மலர்- மல்லிகை வகையைச் சார்ந்த மலரே. தற்காலத்தில், மலர்ச்சந்தையை நிறைவாக்குகிற மலரே மல்லிகைதான். மல்லிகை என்பதில் குண்டு மல்லிகையே தற்காலத்தில் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  

இருள்நாறி குறைந்த வணிக மதிப்பு கொண்டது, எனவே எந்த பூ சந்தையிலும் காண முடியாது. ஆனால் இந்தப் பூவை திருமணத்தில் மணப்பெண்ணின் முடி அழகுக்கு முன்பெல்லாம் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது. இந்த மலர்கள் நீண்ட தண்டு கொண்டவை, எனவே பின்னலிடப்பட்ட முடியில் குத்தி அழகு படுத்தியதில் பயன்படுத்தி வந்ததாகத் தெரிவிக்கப் படுகிறது.

இந்த இருள்நாறி மலரை பெண்குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தியிருப்பதைக் கொண்டு சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு அக்கால மகளிர் பறித்து  விளையாடியதான தொன்னூற்று ஒன்பது மலர்களின் பட்டியலில் இருள்நாறி மலரையும் இணைத்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,118.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.