ஆரியர்கள் வந்தவுடன் ஏன் தமிழர்கள் தென்னிந்தியா வந்தனர். அவர்களைக் கண்டு அஞ்சினார்களா. என்று வேறு ஒருதளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு நாவலந்தேய இந்தியாவின் வடக்கில் வாழ்ந்திருந்த தமிழர் யாரும் தெற்கு நோக்கி பயணிக்க வில்லை என்பதை தெளிவுபடுத்த உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை 15,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆரியர்கள் வந்தபோது நாவலந்தேய இந்தியாவின் வடக்கில் வாழ்ந்திருந்த தமிழர் யாரும் தெற்கு நோக்கி பயணிக்க வில்லை. என்னுடைய அகவையில் இருப்பவர்கள், நான் கூறப்போகும் தகவலைக் கண்கூடாகப் பார்த்திருப்பார்கள். நரிக்குறவர்கள், காட்டுவாசிகள், இலம்பாடிகள் என்று நாகரிகம் அடையாத பல்வேறு இனக்குழுவினர் தமிழ்நாட்டின் ஊர்ப்பகுதியில் பெரிய பெரிய திடல் போன்றிருக்கிற பகுதிகளில் வந்து கூடாரம் அடித்து வாழ்ந்திருப்பார்கள். பகல் நேரங்களில் நமது வீடுகளுக்கு வந்து பாசி. ஊக்குகள், நரிக்கொம்பு, புனுகு, பொய்முடி, தேன், போன்ற பொருட்களை விற்று அந்த கூடாரங்களில் பலமாதங்கள் வாழ்ந்திருப்பார்கள். அவர்களில் திருப்பிப் போவோரில் மிகச்சிலர் நமது ஊரிலேயே தங்கி வாழத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் வாழும் காலம் முழுவதும் நாம்மோடு அணுக்கமாக இருப்பார்கள். சண்டை போட மாட்டார்கள். வம்பு தும்பு பண்ண மாட்டார்கள். நம்மவர்களில் சில ஆண்கள் அந்தப் பெண்களின் அழகில் சொக்கிப் போவதும் உண்டு. நாவலந்தேய வட புலத்தில் இதுதான் நடந்திருந்தது. ஆரியர்கள் யாரும் சில பல மாதங்கள் ஆண்டுகள் எல்லாம் நம்மோடு வாழவில்லை. இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார்கள். வடபுலத் தமிழர்கள் ஆரியர்கள் வாழ்ந்த பகுதிகளை அவர்களுக்கு விட்டுக்கொடுத்தும் மிக மிகக் குறைந்த பெண்களோடு வந்த ஆரியர்கள் பலர் நாவலந்தேய வடபுலத் தமிழர்களோடு கலந்து புதுப்புதுப் மொழிகளையும் புதுப்புது இனங்களையும் உருவாக்கிக் கொண்டார்கள். ஈரானிலிருந்து வந்த ஆரியர்கள் இந்தியாவில் நல்வாழ்க்கை வாழ்கிற தகவல் ஈரானிய மண்ணுக்கு எட்டிய போதுதான் வட இந்தியா மீதான துருக்கிய, முகலாய, முஸ்லீம்கள் படையெடுப்புகள் தொடர்ந்து நடந்தன. அந்த படையெடுப்புகளின் தாக்கத்தால் உருவான மொழிதான் ஹிந்தி. நாவலந்தேய தென்புலத்தமிழர்கள் ஆரியர்களை அங்கீகரித்த நிகழ்வுகளும் உண்டு விரட்டியடித்த நிகழ்வுகளும் உண்டு இந்த இரண்டும் வரலாற்றில் பதிவாகியே இருக்கிறது. அப்படி அங்கீகரித்த வகையில் உருவான தமிழ்ப்புத்தினங்கள்தாம் தெலுங்கு, துளு, கன்னடம் மிக அண்மையில் மலையாளம் உள்ளிட்ட மொழியினங்கள். புரியாத இடங்களில பொய்களால் நிறைத்துக் கொள்கிற புதினங்கள், ஏற்றதாழ்வு சமூக அமைப்பு முறைகள், காமசூத்ரா கொக்கோகம் போன்ற பாலியல் கருதுகோள்கள் எல்லாம் இன்றைக்கும், உள்ளார்ந்து மறுக்க முடியாமல் கமுக்கமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டே வருகிறது. ஆங்கிலம் கலந்து பேசுகிற அயல்மயக்கம் மாதிரி சமஸ்கிருத மொழியில் பெயர் வைத்துக் கொள்கிற ஆரியமாயை தமிழர்களிடம் அகன்றபாடில்லாமல், தமிழ் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று கொண்டாட முடியாத நிலை இருந்து கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் அயல்சார்ப்பில்- தமிழிலிருந்து பேரளாவான தமிழர்கள் வெளியேறக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. நாவலந்தேயத்தின் ஒட்டுமொத்த மண்ணிலும் வாழ்ந்திருந்த தமிழினம் கொஞ்சம் கொஞ்சமாகக் சுருங்கிக் கொண்டேதான் இருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும் சரியே- தமிழில் இருப்பவர்கள் மட்டுமே தமிழர்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களால் தமிழ் இருந்து கொண்டே இருக்கும். நான் தமிழில் இருந்து கொண்டிருக்கிறேன். தமிழில் இருந்து கொண்டிருப்பவர்களை வாழ்த்தி வணங்க கடமைப்பட்டிருக்கிறேன்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,567.