Show all

தமிழகத்தில் பாஜகவின் இராமர் அரசியல் எடுபடுமா!

சீரிய கற்பினள் சீதையைத் தீக்குளிக்க வைத்த இராமன் குற்றவாளியே என்றும், மாவீரன் வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் குற்றவாளியே என்றும் நிறுவப்படுகிற இந்த மண்ணில் தெய்வமாக இருந்தாலும், தமிழ்நெறிக்கு எதிரான செய்தியை, நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றே பேசப்படும். என்று தெளிவு படுத்துவதே இந்தக் கட்டுரை.

05,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: வட இந்தியாவில் இராமர் மிகப் பேரறிமுகமாக இருக்கிறார். இராமரை வைத்தே கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக ஒன்றிய ஆட்சியில் தன்னைத் தக்கவைக்கும் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. வட இந்தியாவில் ஜெய் ஸ்ரீராம் என்பது மிகப் பேரறிமுகமான முழக்கமாகும். நீண்ட நெடிய வழக்கான அயோத்தி வழக்கில்- ஒரு வழியாக இராமர் கோயில் கட்டுவதற்கே அயோத்தி வழக்கிற்கு தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச அறங்கூற்று மன்றம்.

அண்மையில் நேபாளிகள் இராமர் எங்கள் மண்ணுக்குச் சொந்தக்காரர் என்று சொல்லப் போக, சீதை நேபாளப் பெண்தான், இராமருக்கு நேபாளிகள் உரிமை கொண்டாட முடியாது என்று அயோத்தி இராமர் கோயில் கட்டுமானக் குழுவினர் பதில் அளித்து இருந்தார்கள்.

கம்பராமயணம் என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க காவியம் வடிக்கப்பட்டு மாமன்னன் குலோத்துங்க சோழனே அதை அரங்கேற்றிய போதும் கூட தமிழகத்தில் இராமன் ஏன் பேரறிமுகமாக வில்லை என்ற கேள்விக்கான விடை தெரியாமல் ஹிந்துத்துவா ஆசாமிகள் விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தேன்மொழி பிஏ. ஊராட்சி மன்றத் தலைவர் தொடர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கதைத்தலைவியை முதன்மைப்படுத்தும் குடும்பப் பாங்கான தொடராகும். நேற்றைய தொடரில் கதைத்தலைவியின், ‘கற்பை நிரூபிக்க தீக்குளிக்க மாட்டோம். இது மதுரை’ என்ற வசனம் சில மணித் துளிகளிலேயே இணையத்தில் வெளியிடப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.

ஆம் கதைத்தலைவி தேன்மொழி, “நீ களங்கம் சொல்லிவிட்டால் தீக்குளித்து நிரூபிக்க வேண்டுமா? தீக்குளிக்க மாட்டோம் எரித்து விடுவோம். இது மதுரை” என்று அவர் அறைகூவல் விட்டு, வடக்குவரை தெறிக்க விடுகிறார். அந்தப் பேச்சு, சிலமணித்துளிகளிலேயே இணையத்தில் பாராட்டு பெறத் தொடங்கி விட்டது. ஆக தமிழர்கள், குற்றமற்றவர் கோவலன் என்று நிரூபித்து மதுரையை எரியூட்டிய கண்ணகியைக்; கொண்டாடுகிற மரபினர். 

ஆண்களுக்கு இணையாக இலக்கிய தளத்தில் பெண்கள் இருந்த மண் தமிழ்மண். அவர்களைப் பட்டியல் இட்டால்- ஒளவையார், அஞ்சில் அஞ்சியார், அஞ்சியத்தை மகள் நாகையார் , அள்ளூர் நன்முல்லையார், அணிலாடு முன்றிலார், ஒக்கூர் மாசாத்தியார், ஓரிற் பிச்சையார், கச்சிப்பேட்டு நன்னாகையார், கழார்க்கீரன் எயிற்றியார் , காக்கைப்பாடினி நச்சௌ;ளையார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினியார், குறமகள் குறிஎயினி , தாயங்கண்ணியார் , நக்கண்ணையார், நல்வெள்ளியார் , பூங்கனுத்திரையார், பெருங்கோப்பெண்டு, இளவெயினி, பொன்முடியார், பொதும்பில் புல்லளங்கண்ணியார், மாற்பத்தி, மாறோகத்து நப்பசலையார், முடத்தாமக் கண்ணியார், முள்ளியூர் பூதியார், வெள்ளி வீதியார், வெண்ணிக் குயத்தியார், மதுரை ஓலைக் கடையத்தார் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

தமிழர் நெறி என்று பேசினாலே காதலும் வீரமும் தமிழரின் இரண்டு கண்கள் என்பதாகவே அனைத்து தமிழ் இலக்கியங்களும் அணிவகுக்கும். அந்த இரண்டிலும் வடபுலம் கொண்டாடும் இராமன் தோற்றுப் போகிறார்.

தமிழகத்தில் இந்த இரண்டு தலைப்புகளில் பட்டி தொட்டியெல்லாம் பட்டி மன்றங்களும்;, வழக்காடு மன்றங்களும் அரங்கேறி இருக்கின்றன. தாரமங்கலம் கோயிலில், சில பதின் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாற்று சிறப்பு மிக்க பட்டிமன்ற போட்டி விழாவிலும் இந்த தலைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அவை: சீரிய கற்பினள் சீதையைத் தீக்குளிக்க வைத்த இராமன் குற்றவாளியே என்றும், மாவீரன் வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் குற்றவாளியே என்பதாகும்.

திமுக வெற்றி வாகைசூடிய அரசியலில் அதிகம் பேசப்பட்ட புறநானூற்றுப் பாடல்கள் அனைத்தும் வீரத்தாய் பற்றியதும், வீரமகன் பற்றியதும் ஆகும். 

“நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்

முளரி மருங்கின், முதியோள் சிறுவன்

படை அழிந்து, மாறினன் என்று பலர் கூற,

‘மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்

முலை அறுத்திடுவென், யான்’ எனச் சினைஇ,

கொண்ட வாளோடு படு பிணம் பெயரா

செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய

படு மகன் கிடக்கை காணூஉ,

ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே” (புறம்: 278)

இப்புறநானூற்றுப் பாடல், அகவை முதிர்ந்த ஒரு தாயின் மகன் போர் புரியச் சென்றான். அவன் போரில் வெற்றி பெற்று வருவான் என எண்ணிக் காத்திருந்தாள் அவன் தாய். ஒரு நாள் அவளிடம் சிலர், ‘உன் மகன் பகைவருக்குப் புறங்கொடுத்து ஓடினான்’ என்று சொல்லக் கேட்ட அத்தாய் கோபமுற்று எழுந்து ஓர் அரிவாளை எடுத்துக் கொண்டு போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டாள். என் மகன் பேடியாய்ப் புறங்காட்டி ஓடியது உண்மையாயின் அவனுக்குப் பாலூட்டிய மார்பை இவ்வாளால் அறுத்திடுவேன் என்று கூறினாள். போர்க்களத்திலே பிணங்களோடு தலைவேறு, உடல் வேறாய்க் கிடந்த தன் மைந்தனைக் கண்டாள். அவனைச் சேர்த்தெடுத்து அணைத்து ஆனந்தம் கொண்டாள். மகனைப் பெற்றபோது அடைந்த இன்பத்தினும் அவன் விழுப்புண் பட்டுக் கிடைந்ததைப் பார்த்தவுடன் பேரானாந்தம் கொண்டாள் என்று பொருளுரைக்கின்றது.

மகன் இறந்தான் என்பதைப் பற்றிக் கவலைக் கொள்ளாது. எப்படி இறந்தான்? என்ற வினாவிற்க்கான பதிலைத் தேடும் வீரஉணர்வுடைய தாயாகத் திகழ்வதை இப்பாடல் புலப்படுத்துவதை அறியலாம்.

“ஈன்ற பொழுதிற் பெரிதுஉவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக் கேட்டத்தாய்” (குறள்:69)

என்கிற திருக்குறளை இப்புறநானூற்றுப் பாடலோடு ஒப்பு நோக்கலாம். ஒரு தாய் தன் மகன் இறந்தாலும் கூட அவன் சான்றோனாகவும், வீரனாகவும்தான் இறக்கவேண்டும் என்றும், இது அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரியதாகும் சங்கத் தமிழரின் வாழ்க்கை நெறிமுறையை உணர்ந்தே குறளும் வீரத்தாயின் உணர்வினை படம் பிடித்துக் காட்டியுள்ளது என்றும் மொழிகிறது திருக்குறள்.

 “சிற்றில் நல் தூண்பற்றி நின்மகன்

யாண்டு உளனோ? என வினவுதி என்மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்

புலிசேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர் களத்தானே” (புறம்: 86)

என்ற வாகைத்திணைக்குரிய ‘காவற்பெண்டிர் பாட்டு’ சிறிய வீட்டில் உள்ள நல்ல துணைப் பற்றிய வண்ணம் உள்ள ‘உன் மகன் எங்கு உள்ளான்’ என ஒருபெண் வினவ, ‘என்மகன் எங்கிருந்தாலும் நான் அறிவேன். புலி இருந்து பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனைப் பெற்ற வயிறு இதுவாகும். அவன் போர் நிகழும் களத்தில் இருப்பான், அவனைக் காண்பதற்கு அங்குச் செல்’ என்று தன்மகனின் மீது நம்பிக்கை வைத்து ஒரு தாய் கூறுவதாக அமைகின்றது. இப்பாடலில் தாய் தன் வயிற்றைப் ‘புலி கிடந்தக் குகை’ என்று கூறுவது வீரத்தின் அடையாளத்தைப் புலப்படுத்தும் சிறந்த உவமை எனலாம்.

“கெடுக சிந்தை கடிது இவள் துணிவே

மூதில் மகளிராதல் தகுமே

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை

யானை எறிந்து களத்து ஒழிந்தனனே

நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்

பெருநிரை விலக்கி ஆண்டு பட்டனனே

இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி

வேல் கைக்கொடுத்து வெளிது விரித்து உடீஇ

பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி

ஒரு மகன் அல்லது இல்லோள்

செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே!” (புறம்: 279)

என்ற வாகைத்திணைப் பாடலொன்று, மறக்குடியில் பிறந்த ஒரு பெண் முதல் நாள் நடந்தப் போரில் இவளுடைய தந்தை யானையைக் கொன்றுத் தானும் இறந்தான். நேற்று நடந்த போரில் இவள் கணவன் இறந்தான். இன்று போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டு விருப்பம் கொண்டு இருநாளிலும் போர்புரிந்து இறந்துப்பட்ட தந்தையையும் தலைவனையும் நினைத்து அவள் தயங்காமல் வீட்டுக்கொரு வீரன் போர்க்களம் போக வேண்டும் என்பதால் எஞ்சி நின்ற தன் சிறிய மகளை அன்போடு அழைத்து வெண்மையான ஆடையை உடுத்தித் தலையைச் சீவிமுடித்து வேலை எடுத்துக் கையிலே கொடுத்து போர்க்களத்தை நோக்கி அனுப்பி வைத்தாள். எனவே, அன்றைய காலத்தில் ஒரு தாய் என்பவள் தன் மைந்தனின் தாய் என்பதை விட ‘வீரத்தாய்’ என்பதிலேயே மகிழ்ச்சி பெற்றுள்ளாள் என்பதைப் பறை சாற்றுகின்றது.

நால்வகைப் படையும் சுற்றிநின்று போர் புரியும் போர்க்களத்தில் ஆண் யானைகளை அடித்து வீழ்த்துதல் வீரத்துள் வீரமாக மதிக்கப்பட்டுள்ளது. இதனை,

“கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்” (குறள் : 704)

என்கிறார் திருவள்ளுவர். ஒரு வீரன் போர்க்களத்தில் பிளிறிய யானையின் மீது தன் வேலை விட்டெறிய அஃது அடிபட்டு விழுந்தது. அப்பொழுது மற்றொரு யானை அவனைத் தாக்க வந்தது. இன்னொரு வேல் கிடைத்தால் இந்த யானையையும் கொன்றிடலாம் என்று அங்குமிங்கும் பார்த்தான். அந்நிலையில் அவன் மார்பில் தைத்திருந்த வேல் ஒன்றைக் கண்டான். அதுவரையும் போர்வெறியில் தன் மேனியிற் பாய்ந்திருந்த வேலையும் அறியாதிருந்த வீரன், அதை ஆர்வத்தோடு பறித்து இழுத்தான். வேழத்தைக் கொல்ல ஒரு வேல் கிடைத்ததே என்று மகிழ்ந்தான். ஒருவீரன் சாகும் தறுவாயில்கூடப் போரிடவேண்டும் என்ற மனஉறுதியுடன் செயலாற்றியதைப் புறநானுறு கூறுகிறது.

வெந்து வாய் மடித்து வேல் தலைப் பெயரித்

தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின்

வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி

இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய

சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி

வாடு முலை ஊறிச் சுரந்தன

ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே” (புறம்: 295)

என்ற பாடல் கடலின் ஆரவாரம் போன்றது பாசறை, அப்பாசறையில் போர்க்களத்திற்குத் தேவையான படைக்கருவிகள் கூர்மையாகத் தீட்டப்பெற்றன. இவ்வாறு கூர்மை செய்யப்பெற்ற வேலை வீரர்கள் பகைவர்பால் திருப்பினர். தலைவன் ஒருவன் மறவர் தொகுதியை முற்படச் செலுத்தித் தானும் அவர்களோடு எழுந்து போருக்குப் புறப்பட்டான். போர்க்களத்தில் பகைவரைத் தாக்க முயலும் போது படைத்திரளின் இடையில் வெட்டுண்டு உடல் சிதைந்து வேறுபட்டான். புறம் காட்டி ஓடாத கொள்கையை உடைய காளைக்குத் தாயாகிய இவள் சிறப்புக்குரிய தன் மகனின் மறமாண்பு கண்டு அன்பு மேலிட அத்தாயின் வற்றிய முலைகளில் இருந்து பால் ஊறிச்சுரந்தன. எனவே தன் மகனை நினைத்து அத்தாய்க்குப் பெருமையுடன் கூடிய அன்பு பெருகியது என்றுரைக்கின்றது.

“பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்

செறா அது ஓச்சிய சிறுகோல் அஞ்சியோடு

உயவொடு வருந்தும் மனனே இனியே

புகர் நிறம் கொண்ட களிறட்டு ஆனான்

முன்நாள் வீழ்ந்த உரவேர் மகனே

உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு

மான் உளை அன்ன குடுமித்

தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே”(புறம்: 310)

சிறு பிள்ளையாக இருக்கும் போது கிண்ணத்தில் பாலை ஊற்றிக் கையால் எடுத்து ஊட்டினாலும் குடிக்கமறுத்த மகனை சிறுகோல் கொண்டு அடிப்பது போல மிரட்டியேப் பாலை குடிக்கும்படி செய்துள்ளாள் ஒரு தாய். இத்தகு இளமைக் காலத்தை எண்ணி கவலைப்பட்டு வருந்துகின்ற தாய் பின் தன் மனதை நோக்கி மனமே! என்மகன் முன்பொருநாள் பகைவருடன் வீரப்போர் புரிந்து வீழ்ந்த வீரன் பெற்ற வீரன் இவன் துதிக்கையை உடைய யானையை வீழ்த்தியது மட்டும் அல்லாமல் தன் மார்பில் அம்பு பாய்ந்தது கூட அறியாத வீரனாகக் கேடயத்தின் மீது வீழ்ந்து கிடந்தான். என் இனிய வீரமகன் என்று ஒரு தாய் தன் கணவனையும் தன் மகனையும் சிறப்பித்துக் கூறுவதாக அமைந்த பாடலும் ஒரு தாயின் வீரமாண்பினைப் பறைசாற்றுவதாக அமைகிறது.

சங்ககாலத்தில் பெண்கள் வீரமுடைய பெண்ணாகவும், வீரப்புதல்வர்களைப் பெற்ற வீரத்தாயாகவும் இருந்துள்ளனர். ஆண்குழந்தை வீரத்தின் அடையாளமாக, கருதப்பட்டதைப் போல அவர்களுக்கான வீரமும், வீரமரணமும் தலையாயத்துவமானதாக இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. புறநானூற்றில் வீரமகனைப் பெற்றெடுத்த தாயின் உணர்வுகள் மிகமிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

அடுத்து காதலுக்கு வந்தால்- பெண் தன் கணவனை சந்தேகப்படுவது ஊடல் என்றே கொண்டாடப் படுகிறது. ஆனால் கணவன் மனைவியைச் சந்தேகப்பட்டால் அவன் நோயாளியாகவே பார்க்கப்படுவான் தமிழ் மண்ணில்.

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்

என்று ஊடலைப் போற்றும் கடைசி குறளை எழுதி திருக்குறளை நிறைவு செய்கிறார் திருவள்ளுவர்.

சீரிய கற்பினள் சீதையைத் தீக்குளிக்க வைத்த இராமன் குற்றவாளியே என்றும், மாவீரன் வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் குற்றவாளியே என்றும் நிறுவப்படுகிற இந்த மண்ணில் தெய்வமாக இருந்தாலும், தமிழ்நெறிக்கு எதிரான செய்தி, நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றே பேசப்படும். ஜெய் ஸ்ரீராம், ராம் ராஷ்டிரா, என்றெல்லாம் தூக்கிப் பிடித்து பாஜக அரசியல் செய்து வாகை சூடிட தமிழகத்தில் என்றைக்கும் வழி பிறக்கப் போவதேயில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.