'அரசியல் கட்சி அறிவிப்பு' தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என விடை அளித்த இரஜினிகாந்த், போயஸ் தோட்டம் மீண்டும் அரசியல் மைய தளமாகுமா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என விடை அளித்துள்ளார். 29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: எம்ஜியார் அவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, தமிழகத்தில் நடிகராகப் புகழ் பெற்றவர்கள், கட்சி தொடங்கினால் தமிழக முதல்வர் ஆகி விட முடியும் என்கிற கருத்து திரைத்துறைக்கு வருகிற ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. சிவாஜி, பாக்கியராஜ், கார்த்திக், சரத்குமார், இராமராஜன், வெற்றி அடைவதுபோல வந்து தோற்றுப்போன விஜய்காந்த் வரை அரசியல் முன்னெடுத்தவர்கள்தாம். வெற்றி அடைந்த செயலலிதா நேரடியாகவோ, தன்னிச்சையாகவோ அரசியலை முன்னெடுத்தவர் அல்லர். அந்த வகையில் இரஜினி தொடர்ந்து அரசியல் முன்னெடுக்க முயல்வதும், பலரால் முன்மொழியப் படுவதுமாக உள்ளார். தாம் அரசியல் கட்சி தொடங்கி, தமிழக முதல்வராவது வரை முன்னேற முடியும் என்ற நம்பிக்கை இராஜினிக்கு இல்லவே யில்லை என்பது அவர் ஒவ்வொரு முறையும் நழுவி விடுவதிலிருந்தே தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர் பாஜகவில் பொறுப்பேற்று நடுவண் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான தகுதி அவருக்கு உறுதியாக இருக்கிறது. ஏனென்றால் அவர் மிகச்சிறந்த ஹிந்துத்துவாவாதி. ஆனால் அவரே பாஜகவில் இணைந்து தமிழகத்தில் அரசியல் செய்தால் தற்போதைய தமிழக பாஜகவினரைப் போல நையாண்டியாளராகத்தான் வீணாகிப் போவார். ஏனென்றால் தமிழகத்தில் அரசியல் செய்ய ஹிந்துத்துவா தகுதி எதிர்மறைத் தகுதியேயாகும். தமிழர்கள் அத்திவரதரைப் பார்வையிடவும் போவார்கள், தீபாவளியும் கொண்டாடுவார்கள், அன்னை வேளாங்கண்ணி கோயிலுக்கும் போவார்கள். இரம்ஜான் ஊண்புலவையும் கொண்டாடுவார்கள். ஆக, இயற்கையை எந்தக் கோணத்தில் போற்றினாலும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவர்களிடம் எந்த மதத்தின் அடிப்படைகளையும்; முன்னெடுத்துச் செல்ல முடியாது. அப்படி ஒரு வேளை ஏற்றுக் கொள்கிறவர்கள் அந்த மதத்திலேயே இணைந்து விடுவார்கள். தமிழனாக பொதுத் தளத்தில் இருந்து கொண்டு, எந்த மதத்தின் கோட்பாடுகளையும் உள்வாங்கவும் மாட்டார்கள்; உருப்போடவும் மாட்டார்கள். தமிழகத்தில் அரசியல் முன்னெடுப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். அதில், அரசியல் முன்னெடுப்பதற்கு பிரபலமானவராக இருக்க வேண்டும் என்பதும் ஒரு தகுதிதான். ஆனால் அதுவே அடிப்படையானது அன்று. தமிழகத்தில் சாதிக்கு ஒரு மரியாதை இருக்கும்; ஆனால் எந்த மதத்திற்கும் அதுமாதிரியான மரியாதையெல்லாம் கிடையவே கிடையாது. தமிழகத்தில் அரசியலை முன்னெடுப்பதற்கு எந்த மதமும் எதிர்மறைத் தகுதியே. தமிழகத்தில் அரசியல் முன்னெடுப்பதற்கு தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் அக்கறை உள்ளவர் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறவராக இருக்க வேண்டும். என்பது தமிழகத்தில் அரசியலை முன்னெடுப்பதற்கு மிக மிக அடிப்படையான தகுதியாகும். இரஜினிக்கு தமிழகம் விரும்புகிற அடிப்படைத் தகுதியான, தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் அக்கறை உள்ளவர் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளுகிற தகுதி இல்லவே யில்லை. மாறக- தமிழக பாஜகவினரிடம் இருக்கிற, தமிழர்களுக்குப் பிடிக்காத எதிர்மறைத் தகுதியான மதவாதம் இரஜினியிடம் மிக மிக அதிகமாகவே உள்ளது. ஆகவே இரஜினி காந்த் தமிழகத்தில் அரசியல் முன்னெடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லவேயில்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,244.