தமிழ்நாட்டில் இருந்து தமிழர் ஒருவர் இந்தியாவின் தலைமைஅமைச்சர் ஆனால் தமிழ்நாடு எப்படி இருக்கும்? என்னிடம் வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இக்கட்டுரை ஆகும். 28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு அப்படியேதான் இருக்கும். ஆனால் இந்தியா உலகம் கொண்டாடும் வகைக்கு முன்னெடுக்கப்படும். அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது தமிழ்நாடு அப்படியேதான் இருந்தது. ஆனால் இந்தியா உலகினரால் பேசப்பட்டது. அதிகாரமே இல்லாத பதவியில் இந்தியாவை உயர்த்திய தமிழர் அப்துல்கலாம். எந்த தமிழனும், இந்தியத் தலைமை அமைச்சரானால்- தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை இந்தியாவின் அலுவல் மொழிகளாக ஏற்றுக் கொண்டுள்ள, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அட்டவணை எட்டு செயலாக்கத்திற்கு வரும். இந்தியா முழுவதும் தமிழ்நாடு போல, போக்குவரத்து வசதிகள் பெருக்கப்படும். இந்தியா முழுவதும் தமிழ்நாடு போல, கல்விநிலையங்கள் பேரளவாக உருவாக்கப்படும். இந்தியா முழுவதும் தமிழ்நாடு போல, மருத்துவமனைகளும் நிறைந்து காணப்படும். உலகம் இந்தியாவைத் திருப்பி பார்க்கும்! இத்தனை ஆண்டுகளாய் எப்படி இந்தியாவிற்கு இது சாத்தியம் ஆகாமல் இருந்தது என்று வியக்கும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொண்டிருந்து, ஒன்றிய பாஜக அரசு பிடுங்கிய காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதிகள், மீண்டும் காஷ்மீருக்கு வழங்கப் படுவதோடு அந்தச் சட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கப் பட வாய்ப்பு ஏற்படும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,245.