இரண்டாம் மந்திரர் உலகநாதன் (சு.லோகநாதன்) அவர்களோடு முன்னெடுக்கப்பட்ட நேற்றைய கலந்துரையாடலின் பேசுபொருளாக அமைந்த தலைப்பே, 'மிகமிகச்சிறிய அளவேனும் வளர்ந்தே ஆகவேண்டும்! நேற்றைவிட இன்று' என்பதாகும். அதை விரிவாக விளக்கும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. 25,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5125: முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில் தொடங்குகிறது தமிழியல். என்ப, என்மானர் என்று ஆங்காங்கே சுட்டி, என் எல்லாக் கருத்துக்களும் எனக்கு முந்தைய தமிழ்முன்னோர் பேசியிருந்ததே என்கிற அறிவிப்போடே தொல்காப்பியத்தை வடித்துள்ளார் தொல்காப்பியர். அதனால் தொல்காப்பியம் நிறுவியுள்ள இந்த, 'முதலெனப்படுவது இடமும் காலமும்' என்கிற தலைப்பு தமிழியலுக்கான தொடக்கமாகும். முதலெனப்படுவது இடமும் காலமும் என்கிற இடத்தில் இருந்து பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வளர்ந்து வளர்ந்துதான் இன்றைக்கு இந்தக் கட்டுரையைக் கணினியில் வடிக்கிற இடத்திற்கு வந்திருக்கிறோம். முதலெனப்படுகிற படுகிற இடத்தின் காலம்- மிக மிக நுட்பமான தான்தோன்றி இயக்கம் உடைய தனிஒன்றுகள். இந்தக் கட்டுரையைக் கணினியில் வடிக்கிற இடத்திற்கு வந்திருக்கிற நாம், அந்தத் தனிஒன்றுகள் நாற்பெரும் கூட்டமாக ஒருங்கிணைந்த நிலம், நீர், தீ, காற்று ஆகிய நாற்திரங்களின் தொடர்ச்சி ஆவோம். எத்தனையெத்தனை ஆண்டுகள்! எத்தனை யெத்தனை வளர்ச்சி! ஓ! காலத்தின் நோக்கமே வளர்ச்சியா? ஆம் வளர்ச்சிதான் காலத்தின் (இயற்கையின்) நோக்கம். அந்த வளர்ச்சி கருத்தாகவும் பொருளாகவும் இருவேறு நிலையானது. அதானல்தான் தேவையாய் இருக்கிறது, மிகமிகச்சிறிய அளவேனும் வளர்ந்தே ஆகவேண்டும்! நேற்றைவிட இன்று என்கிற இந்தக் கட்டுரை. நாம்மில் வளராமல் நிலையாக நின்றுவிடுகிறவர்களை முட்டாள் மடையன் என்கிறது தமிழியல். அறிவாலோ, பொருளாலோ நாம் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே நம் பிறப்பு அடிப்படை. காலத்தின் வளர்ச்சியைப் பட்டியல் இட்டால் அந்தப் பட்டியல் இப்படி நீள்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் கருத்தாலும் பொருளாலும், கருவிகளாலும் வளர்ந்தாக வேண்டியது கட்டாயம் இல்லையா! நேற்றைவிட இன்று மிகமிகச்சிறிய அளவேனும் வளர்வோம் என்று உறுதியெடுப்போம். புத்தகம் படிக்கலாம். கவிதை எழுதலாம். கட்டுரை வடிக்கலாம். வீட்டுத் தோட்டத்தில் ஒரு செடி நடலாம். பழைய பொருட்களைத் தூக்கி எறியாமல் கலைப்பொருட்களை உருவாக்கலாம். இப்படி நமது வளர்ச்சிக்கு ஆயிரம் ஆயிரம் வழிகள் இருக்கின்றன. வாருங்கள்! கட்டாயம் மிகமிகச்சிறிய அளவேனும் வளர்வோம் இன்றைக்கு.
1. கோடான கோடி தனி ஒன்றுகள்.
2. நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்கள்
3. ஞாயிறு, நாம்வாழும் புவி உள்ளிட்ட கோள்கள். மற்றும் விண்மீன்கள் உள்ளிட்ட வான்பொருட்கள்.
4. புவியில் ஓராறிவு முதலாக அறறிவு வரையிலான உயிரிகள்.
5. ஆறறிவு மனிதன் கட்டமைத்த- இந்தக் கட்டுரையைக் கணினியில் வடிக்கிற இடத்திற்கு வந்திருக்கிற வகைக்கு- கணினி, மென்பொருள், கணினி மேசை, மின்சாரம், இணையம் என்று கணக்கில்அடக்க சிரமமான அளவு எண்ணிக்கையுள்ள பொருட்கள். கருவிகள். கருத்துக்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,638.