ஒரு பெரும் கூட்டத்தை அல்லது அவையை உங்கள் பேச்சின் மூலமாக கட்டுப்படுத்திய பாடு உங்களுக்கு உண்டா? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு எனது பட்டறிவை விடையாக்க, கட்டுரை உருவாக்கத் தொடங்கி, 'அது ஒரு நிலான் காலம்-4' ஆக இந்தக் கட்டுரை நிறைவு செய்யப்படுவதாகிவிட்டது. 17,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: நான்ககைந்து பேர்களை, பத்து பனிரெண்டு பேர்களை என் பேச்சின் மூலமாக கட்டுப்படுத்திய பாடுகள் நிறைய நிறைய உண்டு. ஒரு பெரும் கூட்டத்தை அல்லது அவையை என் பேச்சின் மூலமாக கட்டுப்படுதிய அந்தப் பாட்டை வாழ்வின் எந்த நாளில் நினைத்தாலும் அத்தனை உறுதி இருந்ததா நமக்குள் என்று வியக்கவே தோன்றும். நான்ககைந்து பேர்களை, பத்து பனிரெண்டு பேர்களை என் பேச்சின் மூலமாக கட்டுப்படுத்திய பாடு- எம்ஜியார் மன்றத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்தபோது ஒருமுறை நடந்தது. பழந்தமிழகத்தில் நடந்த திருமணங்கள் பேரளவில் காதல் திருமணங்களே. அதுவும் பெற்றோர் ஒப்புதல் பெற்றே நடந்தன. காதல் திருமணங்கள் வீட்டை விட்டு ஓடுவதாக இருக்கக் கூடாது என்று நான் வாதிட்டு அசத்திய நிகழ்வு அது. எங்கள் ஊரில் உள்ள மதுரை என்கிற இளைஞன் காதலித்த பெண்ணோடு ஊரை விட்டு ஓடி விட்டார். அங்கே ஓடியபேச்சு, காதலியோடு மதுரை ஊரை விட்டு ஓடியதுகுறித்தானது அல்ல. அவர்கள் வீட்டை விட்டு ஓடிய ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்தப் பெண் மட்டும் வீடு திரும்பி, வீடு திரும்பியதற்குச் சொன்ன காரணம் குறித்தது பேச்சு. அவர்கள் தருமபுரியில் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டில் முந்தைய நாள் இரவு, மனைவி தூங்கிக் கொண்டிருக்கையில், கையில் இருந்த காசெல்லாம் தீர்ந்த கவலையில், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டாராம் மதுரை. உண்மையில் மதுரை விளையாட்டு வீரர். அவருக்கு காவல்துறையில் வேலை தேடித்தர அவரது குடும்பத்தார் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். இப்படி உடல் வலிமைமிக்க மதுரைக்கு மனவலிமை இல்லாமல் போய்விட்டதே என்பதே அனைவரின் கவலை. மதுரையின் முடிவு குறித்து, ஒவ்வொருவரும் ஒரு தீர்வை முன்வைத்துப் பேசிக்கொண்டிருந்தோம். நான் பழந்தமிழர் வழக்கத்தில் இருந்த, காதலைப் பெற்றோருக்கு அறிவிக்கிற மடலேறுதல் என்கிற வழக்கத்தை விளக்கி பாராட்டுக்கள் பெற்றேன். மடலேறுதல் என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்லுதல் ஆகும். இந்த மடலூர்தல் தலைவனும் தலைவியும் விரும்பி, பெற்றோர் பெண்ணைத் தர மறுக்கும்போது நிகழ்வது. தங்கமாபுரிப்பட்டணம் மாரியம்மன் கோயில் திடலில்- தமிழ் இலக்கிய நண்பர்களான நான், (அன்றைக்கு நான் வைத்துக் கொண்டிருந்த புனைப்பெயர் பைந்தமிழ்ப்பித்தன்) நண்பர் தமிழ்த்தென்றல், இளந்தமிழ்வேள் என்கிற சு.லோகநாதன், சி.சண்முகம், தங்கை கரிகாலன், நித்தியானந்தன், உள்ளிட்டோர் வைதீசுவரர் உயர்நிலைப்பள்ளி தமிழ்ஆசிரியர். புலவர்.ப.மாதவன் ஐயா அவர்களை நடுவராகக் கொண்டு 'நல்லதொரு வாழ்க்கை அமையச் சிறந்தது காதல் திருமணமா? பெற்றோர்கள் உறுதிசெய்யும் திருமணமா' என்றொரு பட்டிமன்ற நிகழ்வை நடத்தி முடித்திருந்தோம். அந்தப் பட்டிமன்றத்தில் நான் பொற்றோர் உறுதி செய்யும் திருமணமே என்கிற தலைப்பில் அணித்தலைவராக வாதிட்டிருந்தேன். அந்த தலைப்பில் வாதிடுவதற்காக நான் திரண்டியிருந்த செய்திகளே எம்ஜியார் மன்றத்தில் புதிய நண்பர்களை அசத்தும் நிகழ்வுக்குப் பயன்பட்டது. ஒரு பெரும் கூட்டத்தை அல்லது அவையை என் பேச்சின் மூலமாக கட்டுப்படுதிய அந்தப் பாட்டை வாழ்வின் எந்த நாளில் நினைத்தாலும் அத்தனை உறுதி இருந்ததா நமக்குள் என்று வியக்கவே தோன்றும். என்று தொடக்கத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா அந்த நிகழ்வுக்கு வருவோம். நான், வைதீசுவரர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு (பதினோராம் வகுப்பு) முடித்து நான்கைந்து ஆண்டுகள் வேலை தேடிக் கொண்டிருந்த நிலையில், என் நண்பன் சி.சண்முகம் விலங்கியல் துறையில், இயல்அறிவு இளவல் பட்டப்படிப்பு முடித்து இயல்அறிவு முதுவர் படித்துக் கொண்டிருந்த காலம். அப்போது அவன் எனக்குச் சொன்ன அறிவுரை, கல்லூரி சென்று படிக்க உனக்கு குடும்ப சூழல் ஒத்துழைக்காவிட்டால் என்ன? நம்மூரிலேயே இருக்கிற அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து ஏதாவதொரு தொழிற்பிரிவில் படித்து விட்டு வேலைதேடினால் சிறப்பாக வருமே என்று தெரிவித்து, என்னை அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கும் அழைத்துச் சென்று விண்ணப்பம் போட வைத்தான். நான் அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மின்பணியாளர் பாடப்பிரிவில் சேர்ந்து இரண்டாம் ஆண்டு படிக்கும் போது நிகழ்ந்ததுதான் அந்தப் பேரங்கீகார நிகழ்வு. என் நண்பர் சண்முகம் மூலம் கல்லூரியில் நடக்கும் மாணவர் தலைவர் தேர்தல் குறித்து நிறைய நிறைய கேள்விப்பட்டு, அந்தப்பாடுகள் நமக்கு அமையாமல் போனதே கல்லூரி போகாதால் என்று ஏங்கியதுண்டு. எங்கள் அரசுதொழிற்பயிற்சி நிலையத்திலும் மாணவர் தேர்தல் நடைமுறை உண்டு. அது கடந்த நான்கைந்து ஆண்டுகளாக முன்னெடுக்கப்படவில்லை முதல்வர் மிகக் கண்டிப்பானவர் என்கிற காரணம் பற்றி என்று, அறிந்து கொண்ட போது இந்த ஆண்டு ஏன் நமது அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மாணவர் தலைவர் தேர்தல் நடத்தக் கூடாது என்கிற கேள்வி எனக்குள்எழ, காரணமானவர் நண்பர் சு.கணேசன் ஆவார். அவரும் தமிழ்ஆர்வலர் என்கிற காரணம் பற்றி நாங்கள் நட்பில் இணைந்தோம். நானும், அவரும், (அவர் தலைவராகப் போட்டியிட வினோபாஜி என்கிற மாணவர் செயலாளராகவும் போட்டியிட குழுவே அமைத்திருந்தார்.) சில மாணவர்களும் இணைந்து அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் முதல்வரிடம் மாணவர் தலைவர் தேர்தலுக்காக கோரிக்கை வைத்த போது, முதல்வர் எங்களை மிரட்டி அனுப்பி வைத்து விட்டார். அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் இணைவதற்கு முன்பே மேட்டூர் அலுமனியத் தொழிற்சாலையில் ஓர் ஒப்பந்தப் பணியில் சில காலம் பற்றவைப்பவருக்கும், மற்றோர் ஒப்பந்தப் பணியில் சில காலம் கடைசல் பிடிப்பவருக்கும் உதவியாளராக பணியாற்றியதில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஆர்வம் இருந்த காரணம் பற்றி, நமது உரிமை நிலைநாட்டலுக்கு வேலை நிறுத்தம் நல்ல தீர்வு என்கிற கருத்து எனக்குள் இருந்தது. கணேசனிடமும் வினோபாஜியிடமும் எனது இந்தக் கருத்தை தெரிவித்த போது அவர்களால் அதற்கு உடன்பட இயலவில்லை. நானே ஒட்டுமொத்த மாணவர்களையும் ஒருங்கிணைத்து வேலை நிறுத்தத்தை நடத்தி விடுவது என்று முடிவு செய்து விட்டேன். அதன்பொருட்டு ஒவ்வொரு வகுப்பாகச் சென்று, ஓடும் இயந்திரங்களை நிறுத்தி விட்டு, மாணவர் தலைவர் தேர்தலின் கட்டாயத்தை மாணவர்களுக்குத் தெரிவித்து, நிருவாகம் மறுப்பதைக் கண்டித்துப் பேசி, அனைத்து மாணவர்களையும் வெளியில் அழைத்து வந்து விட்டேன். அவர்களிடம் நான் மட்டுமாக உரையாற்றத் தொடங்க மற்ற போட்டியாளர்களும் பேசினார்கள். நிருவாகம் பணிந்து தேர்தல் நடத்த ஒப்புக்கொண்டது. நான் ஒரு அணியாகவும், கணேசன் ஒரு அணியாகவும் தேர்தலைச் சந்திக்க வேண்டி அமைந்தது. எனது அணியில் நான் செயலாளராகப் போட்டியிட விரும்பினேன். பே.வீ.பாசுக்கரன் என்பவர் எங்கள் அணியின் தலைவராக இணைந்தார். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் போது நான் மட்டுமல்ல நிருவாகமும் மலைத்துப் போனது. என்னை எதிர்த்து எதிரணியில் செயலாளராகப் போட்டியிட்டவருக்கு வெறுமனே ஒன்பது வாக்குகள் கிடைத்திருந்தன. மற்ற மற்ற பதவிகளுக்கு இயல்பான போட்டி இருந்தது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,569.