பொதுவாக தாய்மொழிப் பற்று ஆண்களைவிட பெண்களுக்குக் குறைவு தானே? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இதில் என்னுடைய வாழ்க்கை பட்டறிவும் இணைந்த காரணம் பற்றி இந்தக் கட்டுரை, அது ஒரு நிலான் காலம்-5 எனத் தலைப்பு பெறுகிறது. 08,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5125: என்னுடைய தமிழ்ப்பற்று, சொந்த பந்தங்களின் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில்தான் பேரளவாக முன்னெடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. என்னுடைய இந்த முயற்சியை அங்கீகரித்தவர்களின் தமிழ்ப்பற்றின் மீது கேள்வி எழுப்ப முடியாது அல்லவா! அங்கீகரித்தவர்களில் பேரளவினர் பெண்கள்தாம். தேன்மொழி, மணிமொழி, வண்ணக்கிளி, மதியழகன் ஆகிய பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்ட என் பரிந்துரையை ஏற்றுக்கொண்டவர்கள் என் பெரிய அண்ணியார் காவேரி. பெரிய அண்ணன் தருமாங்கதன் அவர்கள், தம்பிள்ளைகளுக்கு இந்தப் பெயர்தான் வைக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டவில்லை. வெண்ணிலா, ஓவியா ஆகிய பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு அங்கீகரித்தவர் என் சிறிய அக்கா விசயலட்சுமி. அவரின் கணவர்தான் இதில் கொஞ்சம் முரண்பட்டார். வெண்ணிலாவை வீட்டில் அவர் பானு என்றே பெயரிட்டு அழைத்து வந்தார். பெரிய அக்காவின் பிள்ளைகளுக்கு ராஜகுமார், உதயகுமார், மதுபாலன், சந்திரா, மலர்விழி என்று பெயரிட்டுக் கொண்டார்கள். உதயக் குமார், மலர்விழி ஆகிய பெயர்கள் நமக்கு மகிழ்ச்சி அளிக்க இயல்பூக்கமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதில் என் அக்காவின் பங்கு இருந்திருக்கவில்லை. நடு அண்ணாரின் பிள்ளைகளுக்கு அன்புச்செல்வி, பாபு சங்கர நாராயணன், பாலாஜி, அலர்மேல் மங்கை என்கிற பாப்பாத்தி, என்று பெயரிட்டுக் கொண்டார்கள். அன்புச் செல்வி, அலர்மேல் மங்கை ஆகிய பெயர்கள் நமக்கு மகிழ்ச்சி அளிக்க இயல்பூக்கமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதில் என் அண்ணியாரின் பங்கு இருந்திருக்கவில்லை. சிறிய அண்ணாரின் பிள்ளைகளுக்குக் கலைமகள் என்றும் கலைக்கோவன் என்றும் என்னால் எளிதாக பெயர் சூட்ட முடிந்தது. என் திருமணம் வரை என் அம்மாவும் நானும் அவர்களோடுதான் இருந்தோம். நான் சூட்டிய தமிழ்ப் பெயர்களுக்கு என் அண்ணியார் மறுப்பு ஏதும் தெரிவிக்க வில்லை. வீட்டிற்கு கலையகம் என்றும், அவர்களின் நிறுவனத்திற்கு கலை போக்குவரத்து என்றும் கூட என் தமிழ்ப்பெயர் பரிந்துரை எளிதாக ஏற்கப்பட்டது. ஆனால், என் சிறிய அண்ணாரின் மகன் தன் பிள்ளைகளுக்கு விரிஜேஸ், மற்றும் அகிலேஷ் என்று பெயர் சூட்டியிருக்கிறார். என் பிள்ளைகளுக்கு எழிலரசி மற்றும் அலையரசன் என்று பெயர் சூட்டுவதற்கு என் மனைவியின் ஒப்புதல் சிறப்பானதே. என் மகன் தன் பிள்ளைகளுக்கு யாழினி மற்றும் தமிழினி என்று பெயர் சூட்டுவதில் என் மருமகளின் பங்கு பேரளவினதே. என் பட்டறிவில், தம் பிள்ளைகளுக்கும், தம் நிறுவனங்களுக்கும் தமிழ்ப் பெயர் சூட்ட மறுப்பது ஆண்கள் என்றும், அதிலும் ஹிந்து மதத்தில் அதீத நம்பிக்கையும் ஹிந்து மதம் அடையாளப்படுத்துகிற தெய்வங்கள் மீது ஒருவித அச்சமும் கொண்ட ஆண்கள் என்றும் நிறுவ முடிகிறது. பொதுவாக கிறித்துவ, முகமதிய மதங்கள்தாம், தம் மதத்தில் இணையும் தமிழர்களின் பெயரில் மொழிஅடையளத்தை அங்கீகரிப்பதில்லை என்று அறிவோம். ஹிந்து மதத்தில் கூடுதல் நம்பிக்கை உள்ள தமிழ்ஆண்களும் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டிவிடக் கூடாது என்பதில் மிக மிக கவனமாக இருக்கின்றனர். தாய்மொழியாக இருக்கிற, தமிழ் உள்ளிட்ட எந்த மொழியும் தாயால்தான் தொடர்ந்து காப்பற்றப்பட்டு வருகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியான உண்மையாகும். தாய்மொழியாக கொண்டாடாத சமஸ்கிருதம், பேச்சு வழக்கில் அழிந்தே விட்டது என்பது, இணையாகக் கொள்ளத்தக்க சான்று ஆகும். சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை உலக அளவில் 25000க்கு குறைவே என்று தரவுகள் தெரிவிக்கின்றன. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாவலந்தேயத்தின் ஒற்றை மொழியாக இருந்த தமிழில் இருந்துதான் இந்தியாவில் நடப்பில் இருக்கிற அனைத்து மொழிகளும் மொழியினங்களும் புதிது புதிதாக கிளைக்க ஆண்களே காரணமாய் இருந்திருக்கின்றனர். ஆண்களால் வெளியில் இருந்து- தொலைக்காட்சி, திரைப்படம், அயல்மொழிவழிப் பள்ளிகள், மதுபான ஆலைகள், மதுக்கடை ஏலங்கள், நிறுவனங்களுக்குச் சூட்டும் பெயர்கள் என்று தாய்மொழிக்கு எதிராக கொடுக்கப்படுகிற அயல்சார்புகளால் பெண்களுக்கு, குடும்பத்திற்குள் தாய்மொழி தமிழையும் தமிழ்கொண்டாடும் பண்பாட்டையும் கட்டிக்காப்பது பெரும்பாடாகவே இருந்து வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,590.