மின்சாரம் குறித்தான இந்த ஐந்தாவது கட்டுரையில் தரையிடல் என்றால் என்ன என்பது குறித்து இயன்ற வரை முழுமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 26,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் மிக மிக நுட்பமான அணுக்களின் தொகுப்பாகும். அந்த அணுக்களில் அமைந்த நிரைகள் (புரட்டான்) நேர்கள் (எலக்ட்ரான்) எண்ணிக்கை மாறுபாட்டால் வெவ்வேறு பொருட்களாக உலகில் உள்ள அத்தனைப் பொருட்களும் வெவ்வேறுபட்டு காணப்படுகின்றன. நமது வாழ்க்கையில் அனைத்து பணிகளிலும், பெரும்பங்காற்றி வரும் மின்சாரத்தை மின்வழங்கும் வாரியத்தில் மின் இணைப்புக் கோரி, மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகிறோம் நாம். நமது வீட்டில் அமைக்கப்பட்ட மின் அமைப்புப் பணிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள தாமிரக் கம்பிகள் இறுதியாக, மின்வாரியத்தால் மின்சாரம் உற்பத்தி செய்ய அமைக்கப்பட்ட மின்னாக்கிகள் (ஜெனரேட்டர்கள்) தொடங்கி இணைக்கப் பட்ட அனைத்துக் கம்பிகளிலும் உள்ள அணுக்களில் ஒரு அணுவில் இருந்து அடுத்த அணுவுக்கு நேர்கள் ஒன்றையொன்று தள்ளிவிட்டு தொடர்ந்து ஓட்டமெடுப்பதுதாம் மின்சாரம் ஆகும். மின்சாரம் என்பது பொருள் மாதிரியானதல்ல. அது ஒரு இயக்கம் மட்டுமே. மின்னாக்கிகளை நிறுத்தினால் மின்சார இயக்கம் நின்று விடும். மீண்டும் சுழலவிட்டால் மின்சார இயக்கம் தொடரும். மின்சாரம் ஒரு இயக்கம் மட்டுமே என்பதால் அதை சேமிக்கவெல்லாம் முடியாது. இயற்கையில் நமக்கு கிடைத்திருக்கிற காந்த ஆற்றலே மின் அமைப்பு வேலைகளில் நாம் பயன்படுத்தும் கம்பிகளின் அணுக்களில் மின்னோட்டத்தை உருவாக்க நமக்குக் கிடைத்த கொண்டாத்தக்க வாய்ப்பாகும். ஒரு கம்பிச் சுருளுக்குள் காந்தத்தை மேலும் கீழுமாக ஆட்டினால் அந்த கம்பியில் மின்னோட்டம் நிகழும். அந்தக் கம்பிச் சுருளின் இரண்டு முனைகளில் மின்சார விளக்கைப் பொருத்தினால் மின்சார விளக்கு ஒளிரும். அந்த ஒளியின் அளவு, காந்தத்தை ஆட்டும் வேகத்திற்கு இணையாக அமையும். மின்சாரம் தண்ணீரில் இருந்தோ, நீராவியில் இருந்தோ, அணுசக்தியில் இருந்தோ, காற்றாலை இயக்கும் காற்றில் இருந்தோ தயாரிக்கப்படுவதல்ல. எங்கே மின்சாரம் வேண்டுமென்றாலும் கம்பிச் சுருளுக்குள் காந்தம் இயங்க வேண்டும். மின்னாக்கிகளில் (ஜெனரேட்டர்) கம்பிச்சுருளுக்கு நடுவே காந்தத்தைச் சுழற்றுவதற்கே அணை மின் நிலையங்களில் நீரோட்டத்தின் வேகமும், அனல்மின் நிலையங்களில் நீராவியும், அணுமின் நிலையங்களில் அணுசக்தியும் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. எல்லா மின் உற்பத்தி நிலையங்களிலும் 11000 வோல்ட் அழுத்தம் உள்ள மின்சாரம் தயாரிக்கப்டுகிறது. மின்னாக்கிகளில் 120 பாகைக்கு ஒன்றாக மூன்று கம்பிச் சுருள்கள் வெளிவட்டமாக அமைக்கப்பட்டிருக்கும். அதில் உள்வட்டமாக காந்தத்தைச் சுழற்ற நீரோட்டம், நீராவி, அணுசக்தி, காற்றாலை மின்சாரத்தில் வெட்டவெளிக்காற்று என்று பல்வேறு இயக்க சக்திகள் பயன்படுத்திக் கொள்ள படுகின்றன. இந்த மூன்றுக் கம்பிச் சுருளுக்;கும் ஆறு முனைகள் இருக்குமல்லவா? அவற்றில் மூன்று முனைகளை தரையில் இணைத்து விடுவார்கள். மீதி மூன்று முனைகள் தாம் பெரிய நிறுவனங்களில் இருந்து வீடுவரை மின் இணைப்பு கொடுப்பதற்கு பயன் படுத்தப்படுகிறது. இப்படி மூன்று முனைகளைத் தரையில் இணைத்துவிடுவதைத்தான் தரையிடல் என்று சொல்லுகிறோம். மின் உற்பத்தி நிலையங்களில் உருவாக்கப்படும் 11000 வோல்ட் மின் அழுத்தத்தை மின்மாற்றிகள் மூலம் 440 வோல்ட் மின் அழுத்தமாக மாற்றி வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது. வீடுகளுக்கு மும்முனை இணைப்பு கொடுக்கப்பட்டாலும் எல்லாக் கருவிகளும் ஒரு முனை இணைப்பிலேயே இயங்கும் வகைக்கானவைகளே. மின்சார உருவாக்க நிலையங்களில் ஒரு முனையை தரையிட்டோம் இல்லையா? இனி புவியின் எந்தப் பகுதியிலும் நமது வீட்டிற்கு இணைப்பு கொடுக்கப்பட்ட மும்முனை இணைப்பின் ஒரு முனையை மற்றொரு முனையாக புவிக்கு இணைப்புக் கொடுத்தால் நமக்கு 220 மின் அழுத்தமாக ஒரு முனை மின்சாரமாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆக மின் உருவாக்க நிலையங்கள் ஒரு கம்பிக்கு மாற்றாக புவியையே ஒரு கம்பி இணைப்பாக பயன்படுத்திக் கொள்வதே தரையிடல் ஆகும்.