மந்திரம் இணையக் கலைக்கழகத்தின் மூலமாக முன்னெடுக்கப்படும் சான்றிதழ் படிப்புகளில் ஒன்றான இதழியல் படிப்புக்கு தொகுக்கப்படும் கட்டுரைகள் இதழியல் கட்டுரைகள் வரிசையில் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. அதில்- இதழியல்துறை, சங்ககாலத் தமிழர்களிடம் ஆற்றுப்படை என்ற தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வந்தது என்கிற இந்தக் கட்டுரை முதலாவது ஆகும். 20,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: இதழியல் என்பது அன்றாட நிகழ்வுகள், உண்மைகள், எண்ணங்கள், ஆட்கள் ஆகியவற்றுடனான இடைவினைகளைக் குறைந்தபட்சம் ஓரளவுக்கு சமூகத்திற்கு தெரிவிக்கும் அறிக்கைகளின் தயாரிப்பு, மற்றும் பகிர்வு ஆகும். இந்தத் துறை சங்ககாலத் தமிழர்களிடம் ஆற்றுப்படை என்ற தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. தமிழர்களின் பதினெண்மேல் கணக்கு நூல்களில் பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை (மலைபடுகடாம்), கூத்தராற்றுப்படை ஆகிய நூல்கள் ஆற்றுப்படை நூல்களாகும். ஆற்றுப்படை துறையில் செய்தி தகவல் பரிமாற்றம் மட்டும் அல்லாமல் பொருள் பகிர்வும் முன்னெடுக்கப்பட்டதைக் காண முடிகிறது. ஆற்றுப்படை என்கிற தலைப்பில் இன்றைக்கு நடைமுறையில் உள்ள செய்தித்தாள்கள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள், இணைய வலைப்பூக்கள் போன்ற ஊடகங்கள் அனைத்தையும் மிக எளிதாக அமைக்க முடியும். ஆனால் தற்போதுள்ள இதழியல் என்ற தலைப்பில் இவை அனைத்தையும் அடக்க முடியாமல் இதழியல், ஊடகவியல், சமூக வலைத்தளங்கள் என்கிற மூன்று தலைப்புகளில் பிரித்துப் பிரித்துப் பேசி வருகிறோம். இதழியல் என்பது செய்திகளை அல்லது செய்திக் கட்டுரைகளை சேகரித்தல், எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பணி ஆகும். முன்னர் இத்துறை அச்சு ஊடகங்களான செய்தித்தாள்கள், மலர்கள் முதலியவற்றில் செய்திகளைச் சேகரித்து வெளியிடுவதை மட்டுமே செய்து வந்தது. கடந்த ஒரு இருபது முப்பது ஆண்டுகளில் மின்னணு ஊடகங்களையும் இது தனக்குள் உள்ளடக்கியது. எழுத்தாளர் அல்லது ஊடகவியலாளர் மக்களோடு தொடர்புள்ள நிகழ்வுகளையும், எண்ணங்களையும், சிக்கல்களையும் விளக்குவதற்கு உண்மையாக தகவல்களை வெளியிட வேண்டும் என்பதே ஊடக நெறியாக இருக்க வேண்டும், என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகவியலாளர் தகவல்களைத் திரட்டி வெளியிடுவதனால் உள்ளூர், மாநில, ஒன்றிய என அனைத்து தரப்பு செய்திகளையும் உடனுக்குடன் மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. ஊடகவியல்; அரசு, பொதுத்துறை அலுவலர்கள், நிறுவன நிறைவேற்று அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், ஊடகவியல் நிறுவனங்கள், சமூக அதிகாரங்களைக் கொண்டிருப்போர் போன்றோரின் நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பதுடன்; நடப்பு நிகழ்வுகள் குறித்த தமது கருத்துக்களையும் வெளியிடுவதுண்டு. தற்காலத்தில் நிருபர்கள் தமது தகவல்களையோ அவை தொடர்பான கட்டுரைகளையோ மின்னணுத் தகவல் தொடர்புகள் மூலம் தொலை தூரங்களில் இருந்தே அனுப்புகிறார்கள். புதிய செய்திகள் உருவாகும்போது நிகழிடத்துக்குச் செல்லும் நிருபர்கள் தகவல்களை சேகரித்து உடனுக்குடன் ஊடக அலுவலகத்துக்கு அனுப்புவர். இவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றன. வானொலி தொலைக்காட்சி நிருபர்கள் களத்திலிருந்தபடியே நேரடியாகத் தகவல்களைத் தருவதும் உண்டு. மேலும், தொலைக்காட்சி ஊடகங்கள், நிகழ்வு நடைபெற்ற இடம் அல்லது செய்தி நடைபெறும் இடத்திற்கே சென்று, களத்தில் இருந்து நிருபர்கள் மூலமாக தகவலை உடனுக்குடன் மக்கள் பெறும் வகையில் செயல்படுகின்றன. தற்போதுள்ள தொழில்நுடப் வளர்ச்சியின் காரணமாக, இணைய இதழியல், குறுஞ்செயலி வழியாக செய்திகளை உடனுக்குடன் பகிர்வது, என செய்தி துறை மற்றும் இதழியல் துறை வளர்ந்து கொண்டே செல்கின்றது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,424.