Show all

நாமக்கல் கவிஞர் அவர்களின் தமிழ் வாழ்த்து! நாம் கட்டவேண்டிய முதலாவது மந்திரம் வரிசையில்

நீங்கள் கட்ட வேண்டிய முதலாவது மந்திரமாக, உங்கள் சொந்த முயற்சியில், சொந்த அனுபவத்தில் ஒரு மொழி வாழ்த்தைக் கட்டுவது சிறப்பு. நாம் கட்டவேண்டிய முதலாவது மந்திரம் வரிசையில் என்கிற தலைப்பில் தொடரும் இந்தக் கட்டுரையில், தேவநேயப் பாவாணர் அவர்கள் முன்னெடுத்த தமிழ் வாழ்த்து குறித்து காண்போம்.
 
17,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும் நீங்கள் முன்னெடுக்கும் நினைப்பில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில் மீட்டப்படும். 

உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும், நீங்கள் முதலாவதாக கட்டவேண்டிய மந்திரம் என்ன என்பதே இந்தத் தலைப்பில் நாம் பேசும் செய்தியாகும்.

ஒவ்வொரு நாளும் ஒரு எட்டு மணி நேரமாவது ஒவ்வொரு மனிதனுக்கும் உறக்கம் தேவையாய் இருக்கிறது. அந்த உறக்கம் நமது உடலுக்கானது அல்ல. நமது உள்ளத்திற்கானது. 

அதனால் நீங்கள் உறங்கி எழும்போது முதலில் விழிப்பது உங்கள் எண்ணமே. எண்ணம் என்பது என்ன? உங்கள் மொழி. அந்த உங்கள் மொழி- ஒன்றிய அரசில் பதவியில் உள்ள ஹிந்தி வெறியர்கள் திணிக்கிற ஹிந்தி மொழியா? இல்லை! உங்கள் முளையிலேயே உங்கள் கல்வியில் திணித்துக் கொண்டிருக்கிறதே உங்கள் சமூகம், அந்த ஆங்கிலமா? இல்லை! 

உங்கள் தாய் தன் குருதியை பாலாக்கி உங்களுக்குத் தந்த உங்கள் உடலும், உங்கள் தாய் தன் மூச்சுக்காற்றை மொழியாக்கி, 'தாய்மடி பல்கலைக்கழகத்தில்;' உங்களுக்கு கற்றுத்தந்த தமிழும், உங்கள் தாய் உங்களுக்குத் தந்த முதல் உடைமைகள். உங்களுக்குக் கிடைத்த முதல் உடைமைகள் இரண்டில் ஒன்றான தமிழே உங்கள் மொழி!

படுக்கையில் இருந்து என்ன நினைத்துக் கொண்டு எழுவீர்கள்? அம்மா தாயே என்று நினைத்துக் கொண்டு எழலாம். முருகா என்று நினைத்துக் கொண்டு எழலாம். கர்த்தாவே என்று நினைத்துக் கொண்டு எழலாம். அல்லாவே என்று நினைத்துக் கொண்டு எழலாம். பெருமாளே என்று நினைத்துக் கொண்டு எழலாம். இப்படி உங்கள் முனைப்பு எதுவானாலும் உங்கள் உயிர்ப்பு தமிழே! 

எந்த மாதிரியான நமது சார்புகளுக்கும், முனைப்புகளுக்கும் முனைப்புகளில் வெற்றிகளுக்கும் இரண்டாவதாக மூன்றாவதாக என்று எத்தனையாவதாக வேண்டுமானலும் மந்திரக்கட்டுக்கு இடம் தரலாம். அனால் நாம் கட்ட வேண்டிய முதல் மந்திரம் நமது உயிர்ப்பான தமிழுக்காக இருக்க வேண்டும்.

நீங்கள் சார்ந்திருக்கும் எந்த முனைப்புகளுக்கும் நீங்கள் கட்டும் மந்திரம்- உங்களுக்கு மட்டுமானதாக, உங்கள் 58 அகவை வரைக்கானது மட்டுமாக மட்டுமே அமையும். ஆனால் நீங்கள் உங்கள் உயிர்ப்பான தமிழுக்காக கட்டும் மந்திரம் இந்த உலகம் பெருவெடியில் முடிந்து போகும் காலம் வரைக்கும் உங்கள் அனைத்து தலைமுறைகளுக்கும் வேராக நின்று பயன்தரும். 

மந்திரக்கலைக்குத், தமிழர்கள் பாடநூலாக கொண்டாடும் வகைக்கான திருக்குறள், தமிழுக்கே தமிழின் முதல் எழுத்தான அகரத்திற்கே மந்திரம் கட்டி அடுத்தடுத்த குறள்களைத் தொடர்கிறது.  

அகர முதல! (என் தாய்த்தமிழுக்கு முதலான அகரம் வாழ்க)
எழுத்தெல்லாம் (ஒட்டுமொத்த தாய்த்தமிழ்)
ஆதி பகவன் (தமிழன் கண்ட முதல் கோளான ஞாயிறு)
முதற்றே உலகு (கோள்களுக்கு எல்லாம் முதலானது போல)

நீங்கள் உறக்கத்தில் இருந்து விழித்ததும், உங்கள் தொடர் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த, கட்ட வேண்டிய முதல் மந்திரம், தமிழ் வாழ்த்தாகவே அமைய வேண்டும். 

நீங்கள், உங்கள் சொந்த முயற்சியில், சொந்த அனுபவத்தில் ஒரு மொழி வாழ்த்தைக் கட்டுவது சிறப்பு. 

அதுவரை, நாமக்கல் கவிஞர் அவர்களின் தமிழர் முன்னேற்றத்திற்கான முதலாவது மந்திரக்கட்டை ஓதி கொண்டாடுவோம்.

நாமக்கல் கவிஞர் அவர்கள் முன்னெடுத்திருந்த தமிழ்வாழ்த்;து கீழே வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில்
அமிழ்தென்று வருகின்ற அதுவந்து சேரும்.
நமதிந்தப் பெயர்கொண்ட மொழியென்ற எண்ணம்
தமிழர்க்குப் புகழ்மிக்கத் தருமென்றல் திண்ணம்.       1
பயிருக்கு நீர்என்ற பயன்மிக்க வழியே
உயிருக்கு வெகுநல்ல உணர்வுள்ள மொழியே.
துயருற்ற மனதிற்குத் துணைநின்றே உதவும்;
அயர்வற்ற ஞானத்தை அடைவிக்கும் அதுவே.       2
அன்பென்று அதைமிக்க அறிவிக்க நின்று
துன்பங்கள் தருகின்ற துயரத்தை வென்றே
இன்பத்தின் நிலைசொல்ல இணையற்ற வழியாம்;
தென்புள்ள தமிழென்று திகழ்கின்ற மொழியாம்.       3
அருளென்ன உலகத்தின் அறிவாள ரெல்லாம்
பொருள்கொள்ளும் பொருள்தன்னைப் புரிவிக்கும் சொல்லாம்;
இருள்கொண்ட உள்ளத்தில் இயல்பான பழியைத்
தெருள்கொள்ள ஒளிதந்து திகழ்கின்ற மொழியே.       4
அறிவென்று பெயர்கொண்ட அதைமட்டும் நாடும்;
குறிகொண்டே உலகெங்கும் குறைவின்றித் தேடும்;
வெறிகொண்ட இனம்என்று வெகுபேர்கள் போற்றும்
நெறிகொண்ட தமிழ்மக்கள் நிறைகண்ட மாற்றம்.       5
கலையென்ற கடலுக்குக் கரைகண்ட புணையாம்
நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம்;
அலைபட்ட மனதிற்கு அமைதிக்கு வழியாம்;
மலையுச்சி ஒளியன்ன மறைவற்ற மொழியாம்.       6
அறமன்றிச் செயலொன்றும் அறியாத மொழியாம்;
மறமென்ற செயல்என்றும் மதியாத மொழியாம்;
நிறமென்று மதமென்று நிந்தித்தல் அறியாத்
திறமுள்ள தமிழென்று திசைமெச்சும் நெறியாம்.       7
குணமென்ற அதைமட்டும் கும்பிட்டு நாளும்
பணமென்ற பலமென்ற பயமின்றி வாழும்
இணையற்ற உறுதிக்கு இசைமிக்க வழியாம்
மணமிக்க தமிழென்று மதிமிக்க மொழியாம்.       8
பலகாலம் பலநாடும் பரிவோடு சுற்றி
உலகோரின் பலசொல்லை உறவோடு கற்று
விலகாத நட்பிற்கு வெகு கெட்டி வேராம்;
தலையாய அறிவிற்குத் தமிழென்று பேராம்.       9
எந்தெந்த நாட்டின்கண் எதுநல்ல தென்றே
அந்தந்த மொழிதந்த அறிவின்கண் நின்று
முந்துள்ள இவையென்ற முறையுள்ள எல்லாம்
தந்துள்ள தொகைபோலும் தமிழென்ற சொல்லாம்.       10
விரிகின்ற அறிவோடு விரிகின்ற நிலையால்
திரிகின்ற உலகத்தைத் தெரிகின்ற கலையால்
சரியென்ப தொன்றன்றிப் பிறிதொன்றில் சலியாப்
பெருமைத்து தமிழென்ற பெயர்தந்த ஒலியாம்.       11
சீலத்தை இதுவென்று தெரிவிக்கும் நூலாம்;
காலத்தைத் தூரத்தைக் கருதாது மேலாம்
ஞாலத்தை அண்டத்தை நாமாக எண்ணும்
மூலத்தின் உணர்வெங்கள் மொழி உண்டு பண்ணும்.       12
பிறநாடு பிறர்சொத்து பிறர்சொந்தம் எதையும்
உறநாடிச் சதிசெய்தல் உன்னாத மதியும்
இரவாமல் எவருக்கும் ஈகின்ற நயனும்
அறமோதும் தமிழ்கற்று அடைகின்ற பயனாம்.       13
விஞ்ஞானம் அதனோடும் விளையாடி நிற்கும்;
மெய்ஞ்ஞானம் அதைமட்டும் மிகநாடி கற்கும்;
மெய்ஞ்ஞானம் வாதித்துப் புனிதத்தை இகழும்
அஞ்ஞானம் இல்லாமை அதுபெற்ற புகழாம்.       14
கொல்லாமை பொய்யாமை எனுமிவ்விரண்டில்
எல்லாநல் அறமுற்றும் இடைநிற்றல் கண்டு
சொல்லாலும் செயலாலும் மனதாலும் தொழுதோர்
நல்லோர்கள் பணிதந்த தமிழ்வாழ்க நாளும்.       15
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,204.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.