Show all

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தமிழ் வாழ்த்து! நாம் கட்டவேண்டிய முதலாவது மந்திரம் வரிசையில்

நீங்கள் கட்ட வேண்டிய முதலாவது மந்திரமாக, உங்கள் சொந்த முயற்சியில், சொந்த அனுபவத்தில் ஒரு மொழி வாழ்த்தைக் கட்டுவது சிறப்பு. நாம் கட்டவேண்டிய முதலாவது மந்திரம் வரிசையில் என்கிற தலைப்பில் தொடரும் இந்தக் கட்டுரையில், பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் முன்னெடுத்த தமிழ் வாழ்த்து குறித்து காண்போம்
 
11,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும் நீங்கள் முன்னெடுக்கும் பதிவில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில் மீட்டப்படும். 

உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும், நீங்கள் முன்னெடுக்கும் பதிவு எதுவாக அல்லது எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதே 'நாம் கட்டவேண்டிய முதலாவது மந்திரம்' தலைப்பு பேசும் செய்தியாகும்.

ஒவ்வொரு நாளும் ஒரு எட்டு மணி நேரமாவது ஒவ்வொரு மனிதனுக்கும் உறக்கம் தேவையாய் இருக்கிறது. அந்த உறக்கம் நமது உடலுக்கானது அல்ல. நமது உள்ளத்திற்கானது. 

அதனால் நீங்கள் உறங்கி எழும்போது முதலில் விழிப்பது உங்கள் எண்ணமே. எண்ணம் என்பது என்ன? உங்கள் மொழி. அந்த உங்கள் மொழி- ஒன்றிய அரசில் பதவியில் உள்ள ஹிந்தி வெறியர்கள் திணிக்கிற ஹிந்தி மொழியா? இல்லை! உங்கள் முளையிலேயே உங்கள் கல்வியில் திணித்துக் கொண்டிருக்கிறதே உங்கள் சமூகம், அந்த ஆங்கிலமா? இல்லை! 

உங்கள் தாய் தன் குருதியை பாலாக்கி உங்களுக்குத் தந்த உங்கள் உடலும், உங்கள் தாய் தன் மூச்சுக்காற்றை மொழியாக்கி, 'தாய்மடி பல்கலைக்கழகத்தில்' உங்களுக்கு கற்றுத்தந்த தமிழும், உங்கள் தாய் உங்களுக்குத் தந்த முதல் உடைமைகள். உங்களுக்குக் கிடைத்த முதல் உடைமைகள் இரண்டில் ஒன்றான தமிழே உங்கள் மொழி!

படுக்கையில் இருந்து என்ன நினைத்துக் கொண்டு எழுவீர்கள்? அம்மா தாயே என்று நினைத்துக் கொண்டு எழலாம். முருகா என்று நினைத்துக் கொண்டு எழலாம். கர்த்தாவே என்று நினைத்துக் கொண்டு எழலாம். அல்லாவே என்று நினைத்துக் கொண்டு எழலாம். பெருமாளே என்று நினைத்துக் கொண்டு எழலாம். இப்படி உங்கள் முனைப்பு எதுவானாலும் உங்கள் உயிர்ப்பு தமிழே! 

இந்த மாதிரியான நமது சார்புகளுக்கும், முனைப்புகளுக்கும் முனைப்புகளில் வெற்றிகளுக்கும் இரண்டாவதாக மூன்றாவதாக என்று எத்தனையாவதாக வேண்டுமானலும் மந்திரக்கட்டுக்கு இடம் தரலாம். அனால் நாம் கட்ட வேண்டிய முதல் மந்திரம் நமது உயிர்ப்பான தமிழுக்காக இருக்க வேண்டும்.

நீங்கள் சார்ந்திருக்கும் முனைப்புகளுக்கு நீங்கள் கட்டும் மந்திரம்- உங்களுக்கு மட்டுமானதாக, உங்கள் 58 அகவை வரைக்கானது மட்டுமாக மட்டுமே அமையும். ஆனால் நீங்கள் உங்கள் உயிர்ப்பான தமிழுக்காக கட்டும் மந்திரம் இந்த உலகம் பெருவெடியில் முடிந்து போகும் காலம் வரைக்கும் உங்கள் அனைத்து தலைமுறைகளுக்கும் வேராக நின்று பயன்தரும். 

மந்திரக்கலைக்குத், தமிழர்கள் பாடநூலாக கொண்டாடும் வகைக்கான திருக்குறள், தமிழுக்கே தமிழின் முதல் எழுத்தான அகரத்திற்கே மந்திரம் கட்டி அடுத்தடுத்த குறள்களைத் தொடர்கிறது.  

அகர முதல! (என் தாய்த்தமிழுக்கு முதலான அகரம் வாழ்க)
எழுத்தெல்லாம் (ஒட்டுமொத்த தாய்த்தமிழ்)
ஆதி பகவன் (தமிழன் கண்ட முதல் கோளான ஞாயிறு)
முதற்றே உலகு (கோள்களுக்கு எல்லாம் முதலானது போல)

நீங்கள் உறக்கத்தில் இருந்து விழித்ததும், உங்கள் தொடர் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த, கட்ட வேண்டிய முதல் மந்திரம், தமிழ் வாழ்த்தாகவே அமைய வேண்டும். 

நீங்கள், உங்கள் சொந்த முயற்சியில், சொந்த அனுபவத்தில் ஒரு மொழி வாழ்த்தைக் கட்டுவது சிறப்பு. 

அதுவரை, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தமிழர் முன்னேற்றத்திற்கான முதலாவது மந்திரக்கட்டை ஓதி கொண்டாடுவோம்.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் முன்னெடுத்திருந்த தமிழ்வாழ்த்;து கீழே வெளியிடப்பட்டுள்ளது. 
தமிழே வாழ்க! தாயே வாழ்க!
அமிழ்தே வாழ்க! அன்பே வாழ்க!
கமழக் கமழக் கனிந்த கனியே
அமைந்த வாழ்வின் அழகே வாழ்க!

சேர சோழ பாண்டிய ரெல்லாம்
ஆர வளர்த்த ஆயே வாழ்க!
ஊரும் பேரும் தெரியா தவரும்
பாரோர் அறியச் செய்தாய் வாழ்க!

சீரிய அறமும் சிறந்த வாழ்வும்
ஆரும் அடையும் அறிவைப் பொழிந்தாய்;
வீரம் தந்தாய் மேன்மை வகுத்தாய்
ஈர நெஞ்சே இன்பம் என்றாய்.

குமரி நாட்டில் தூக்கிய கொடியை
இமயத் தலைமேல் ஏறச் செய்தாய்.
தமிழைத் தனித்த புகழில் நட்டாய்
தமிழின் பகைவர் நெஞ்சைச் சுட்டாய்.

முத்தமிழ் அம்மா! முத்தமிழ் அம்மா!
தத்துவ உணர்வை முதலில் தந்தாய்;
எத்தனை இலக்கியம், இலக்கணம் வைத்தாய்
முத்துக் கடலே! பவழக் கொடியே!

எழுத்தே பேச்சே இயலே வாழ்க!
இழைத்த குயிலே இசையே வாழ்க!
தழைத்த மயிலே கூத்தே வாழ்க!
ஒழுக்க வாழ்வின் உயிரே வாழ்க!

தமிழே ஆதித் தாயே வாழ்க!
தமிழர்க் கெல்லம் உயிரே வாழ்க!
தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்
அமிழ்தாய் அமைந்த அம்மா வாழ்க!

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க!
ஓரா உலகின் ஒளியே வாழ்க!
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,198.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.