வேறு ஒரு தளத்தில், தன்னம்பிக்கை கொள்வது முன்னேற்றத் தேவையா? தன்னம்பிக்கை தரும் புத்தகங்களைப் பரிந்துரைக்க முடியுமா? என்று கேட்டிருந்த வினாவிற்கு விடையாக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 01,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5125. ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்த பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம். அதனாலேயே ஒருவர் கொண்ட நம்பிக்கையினை இன்னொருவர் அல்லது இன்னொரு அமைப்பு கேள்விக்குள்ளாக்கும் போது அதன் சரி பிழைகளை ஏற்கும் அல்லது பகுத்துப் பார்க்கும் மனநிலையை பெரும்பாலும் மனிதர்கள் இழந்து விடுகிறார்கள். மாறாக கேள்விக்குள்ளாக்கும் நபர் அல்லது அமைப்பின் மீது வன்மமாக எதிர்க்கும் மனநிலைக்கும் தள்ளப்பட்டு விடுகிறார்கள். மனித மனங்களில் ஏற்படும் நம்பிக்கைகள் பலவாறாக இருக்கின்றன. அவை அவரவர் பிறக்கும், வளரும், வாழும், சூழல் மற்றும் சமூக சூழ்நிலைகளைப் பொறுத்து ஏற்படுகின்றன. ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை இன்னொருவருக்கு மூடநம்பிக்கையாகவும், தான் நம்பும் நம்பிக்கையே உண்மையானதானகவும் நினைக்கும் அல்லது கருதும் நிலையில் மனித மனங்கள் உந்தப்படுகின்றன. இப்படி மணல்வீடாக கட்டப்படுவதுதான் நம்பிக்கை. உங்கள் இயல்பு, உங்கள் ஆற்றல், இதுவரை நீங்கள் ஈட்டிய வெற்றிகள் என்கிற அனைத்தையும் தெளிவாக ஆய்வது என்பதை விடுத்து மொட்டையாகத் தன்னம்பிக்கை என்கிற தலைப்பில் உங்களைக் கட்ட முயன்ற முனைப்புகள் அனைத்தும் நூறு விழுக்காடு பிழையானவைகளே. தன்னம்பிக்கை குறித்த பயிலரங்கங்கள், தன்னம்பிக்கை குறித்த நூல்கள் அனைத்தும் கலந்து கொள்ளும் போதும், படிக்கும் போதும் உங்களைப் பேரளவாகக் காட்டி அவற்றிலிருந்து வெளியேறிய அடுத்த வினாடி உங்களைப் பொலபொலவென உதிரியாக்கிவிடும். தன்னம்பிக்கை என்கிற தலைப்பில் உலா வந்த பல்வேறு அறிஞர்கள், தன்னம்பிக்கை என்கிற தலைப்பில் உலா வந்த நூல்கள், தன்னம்பிக்கை என்கிற தலைப்பில் பேரளவாக நடத்தப்பட்ட பயிலரங்கங்கள், தன்னம்பிக்கையை முன்னெடுத்த இதழ்கள் அனைத்தும் கூட காலத்தால் உதிரியாகி விட்டதும், தன்னம்பிக்கை கட்டுமானங்களைப் பின்தொடர்ந்திருந்த பலர், தனிமனித வழிகாட்டிகளை நோக்கி திரும்பி விட்டதும் வரலாறு ஆகும். தனிமனித முன்னேற்றத்திற்கு- தமிழ்முன்னோர் தொடர்ச்சியாக மூன்று கலைகளை முன்னெடுத்தனர். அவை 1. சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம். 2. கணியம். 3. மந்திரம் என்பனவாகும். அவற்றுள் மூன்றாவது முன்னேற்றக் கலையான மந்திரமே நிறைவான கலையாகும். தனிமனித முன்னேற்றத்திற்கு, தன்னம்பிக்கை என்பது ஒருபோதும் தீர்வாக முடியாது. தனிமனித முன்னேற்றத்திற்குத் தேவை தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரமே ஆகும். ஆக தனிமனித முன்னேற்றத்திற்கு தன்னம்பிக்கை கொள்வது தீர்வாகாது. மந்திரம் கற்பதே தீர்வாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,709.