Show all

எருவை மலர்! சங்ககால மலர்கள் தொன்னூன்றொன்பதின் வரிசையில்

சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து  விளையாடியதாக தொன்னூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக ஐந்தாவதாக எருவை மலர் குறித்து அமைகிறது இந்தக் கட்டுரை.
 
25,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: எருவைப் பூ கரும்புப் பூப் போலவே இருக்கும். எருவை என்பது செடியினத்தில் ஒருவகைப் புல். புல் என்பது உள்ளே துளை உடைய செடியினம். எருவை என்பது பெருநாணல் செடி ஆகும். சிறுநாணல் என்று ஒன்றும் கூறப்பட்டது. அதன் பெயர் வேழம் என்பதாகும். 

இந்த வேழம் புல்லை யானைகள் விரும்பி உண்பது குறித்தே யானைக்கு வேழம்விரும்பி, வேழம் என்ற பெயர்கள் அமைந்தன. இருவகை நாணலையும் இக்காலத்தில் நாணல் என்றும், நாணாத்தட்டை என்றும், கொறுக்காந்தட்டை என்றும், பேக்கரும்பு என்றும் கூறுகின்றனர்.

பொதுவாக பெருநாணல், சிறுநாணல் ஆற்றங்கரைகளில் செழித்து வளரும். கிளை இல்லாமல் செங்குத்தாக நேராக வளரும். மூங்கில் போலக் கணுக்கள் கொண்டது. இரண்டு-விரல் அளவு கூடப் பருக்கும். இதனை மூங்கில் போல் வளைக்க முடியாது. மூங்கில் அளவுக்குக் கெட்டித்தன்மை இல்லாதது. மிகவும் இலேசானது. 

இந்த நாணல் தட்டைகளைக் கோர்த்து உடம்பில் கட்டிக்கொண்டு குழந்தைகளுக்கு நீச்சல் பழக்குவதற்கு பயன்படுத்தியுள்ளனர். 

விழாக்காலங்களில் இந்த நாணல்தட்டைகளில் குழல்; செய்து குழந்தைகள் விரும்பும் இசைக்கருவிகளாக விற்பனை செய்திருந்திருக்கின்றனர். 

இந்த எருவைப்பூவை பெண்குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தியிருப்பதைக் கொண்டு சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு அக்கால மகளிர் பறித்து  விளையாடியதான தொன்னூற்று ஒன்பது மலர்களின் பட்டியலில் எருவைப்பூவையும் இணைத்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,094.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.