‘இறை’ என்கிற தமிழ்ச் சொல்லுக்கு நேரான சொல், உலகில் எந்த மொழியிலும் புழக்கத்தில் இல்லை. எனவே தமிழர்கள் இறை என்ற சொல்லை கண்ட கண்ட இடங்களில் பயன்படுத்தி வீணடிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். 15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: உலகில் உள்ள அனைத்து இனங்களும் மதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. மதமற்றவர்கள் இயல்அறிவை (http://www.news.mowval.in/Editorial/katturai/Eyalarivu-121.html) தூக்கிப்பிடிக்கின்றார்கள். தமிழர்கள், நேற்று தமிழின் ஐம்பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கினார்கள். மதங்களுக்கும், இயல்அறிவுக்கும் (சயின்ஸ்), நம் தமிழ் முன்னோருக்கும் உலகத் தோற்றம் குறித்து வெவ்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. மதங்கள் உலகம் படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. இயல் அறிவு: எல்லாம் பொருள். பொருளிலிருந்தே எல்லாம். பெருவெடியிலிருந்து உலகத் தோற்றம். பரிணாம வளர்ச்சி என்கிறது. நமது தமிழ் முன்னோர்:- ஐம்பரிமாணம், (நீளம், அகலம், உயரம், இடம், காலம்) அவற்றுள் முதலெனப்படுவது இடமும் காலமும் என்று இரண்டினை முன்வைக்கிறது. அந்த இடமும் காலத்திலிருந்து தான்தோன்றியாக மற்ற முப்பரிமாணங்கள் தோன்றின என்கின்றனர். அதாவது யாரும் நம்மைப் படைக்கவில்லை. நாமாக- ‘தான்தோன்றியாக’ உருவானோம் என்கின்றனர் தமிழ்முன்னோர். தலையெழுத்து என்பது நம்மை படைத்தது அல்லது படைத்தவர் நமக்கு எழுதியது அல்ல. நமக்கு நாமே வடிவமைத்துக் கொள்கிற நமது இயக்கத்திற்கான மென்பொருள் (சாப்ட்வேர்) போன்றதாகத் தெரிவிக்கின்றார்கள். தான்தோன்றியாக முதலாவதாக உருவான பரிமாணங்களை ஐந்திரம் (பஞ்சபூதங்கள்) என்கின்றார்கள். அதாவது முதலாவதான இடம், காலத்திலிருந்து- தான்தோன்றியாக நிலம், நீர், தீ காற்று விசும்பு என்னும் ஐந்திரங்கள் உருவாகின்றன. இந்த நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு ஆற்றல்களும் வெளியில் இறைந்து இயங்கிக் கொண்டிருப்பதால் அவற்றை இறை என்கின்றனர். அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் பிண்டத்தில் இருப்பது அண்டத்தில் என்று சித்தர் பாடல்களில் வரும். இந்த நாற்திர ஆற்றல்களால் தாம் நாம் தான்தோன்றியாக ஒருங்கிணைந்திருக்கிறோம். இயற்கையில் காணப்படுவது எல்லாம் ஒருங்கிணைப்பே. எதுவும் படைப்பு அல்ல. யாராலும் படைக்கப்பட்டது அல்ல என்கின்றனர் தமிழ் முன்னோர். திறன் வெளிப்படுகிற ஆற்றல். திரம் குவிந்திருக்கிற ஆற்றல். நிலம், நீர், தீ, காற்று, விசும்பு இவற்றில் ஆற்றல் குவிக்கப்பட்டிருப்பதால் திரம் என்று பெயரிட்டுள்ளனர் தமிழ்முன்னோர். ஆக இறை என்பது ஐந்திர ஆற்றல்;. பஞ்சபூதம் என்று நடைமுறையில் அறியப்பட்டு வருகிறது. ஆக நாம் ஐந்திரங்களில் தான்தோன்றியாக உருவாகி, ஐந்திரங்ளையே உண்டு, அருந்தி, மூச்சிழுத்து, காய்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறோம். நாம் ஐந்திரத்தில் உருவான ஒரு புதிய ஒருங்கிணைப்பு அல்லது கூட்டியக்கம். ஒருங்கிணைப்பு செயலற்று போதலை இறப்பு என்கின்றனர் தமிழ் முன்னோர். அதாவது மீண்டும் இறையாகிப் போதல் என்று பொருள். காலமாகி விட்டார் என்றும் செல்லுகின்றனர். அந்தக் காணாமல் போன புதிய கூட்டியக்கமே உயிர். முதலெனப்படுவது இடமும் காலமும் என்பது தமிழ்முன்னோர் கண்டுபிடிப்பு. இரண்டை ஒற்றாவதாக முன் வைக்கின்றனர் தமிழ் முன்னோர். ஒன்று என்கிற எண்ணிலேயே இரு தனிகள் ஒன்றியிருத்தல் என்பதாக ஒன்றுதல்- ஒன்று என்ற வினையைப் பெயராக்கியிருக்கிறார்கள். வினை பெயராக வரும் சொல்லுக்கு தொழிற்பெயர் என்ற இலக்கணம் தமிழ் கொண்டிருக்கிறது. ஆக தமிழில் ஒன்று என்பது ஒன்றிய இரு தனிகள். இரண்டு என்பது பிரிந்த இரு தனிகள். ஆக முதல் எனப்படுவது எப்போதும் இரண்டுதாம் என்கின்றனர் தமிழ்முன்னோர். பொருள் என்றால் அகமும் புறமும், நாள் என்றால் இரவும் பகலும், மதங்கள் கருத்து முதல்வாதத்தை முன்னெடுத்தாலும், இயல்அறிவு (சயின்ஸ்) பொருள் முதல் வாதத்தை முன்னெடுத்தாலும் , தமிழ்முன்னோர் முன்னெடுப்பது கருத்தும் பொருளும் சேர்ந்தே இருப்பது என்பதாகும். இருப்பு என்பதும், இல்லை என்பதும் சேர்ந்தே இருப்பதாகும். இல்லையிலிருந்து இருப்பு தோன்ற முடியாது என்பதும், இருப்பு இல்லாமல் போக முடியாது என்பதும் தமிழ் முன்னோர் முன்னெடுக்கும் வாதமாகும். ஆக இறை என்பது ஐந்திரங்கள். 1.இயக்கம் இல்லாத- எல்லை இல்லாத- வெளியாகவும், 2.மற்ற நாற்திரங்களால் இயக்கம் பெற்று விண்வெளியாகவும், 3.இயக்கம் தந்த நாற்திரங்களை இயக்கும் விசும்பு ஒரு திரமாகும். நிலம், நீர், தீ, காற்று மற்ற நாற்திரங்கள். இவைகளே தமிழ் முன்னோர் சுட்டிய இறை. இவ்வளவு விளக்கங்கள் அடங்கிய ‘இறை’ என்கிற தமிழ்ச் சொல்லுக்கு நேரான சொல், உலகில் எந்த மொழியிலும் புழக்கத்தில் இல்லை. எனவே தமிழர்கள் இறை என்ற சொல்லை கண்ட கண்ட இடங்களில் பயன்படுத்தி வீணடிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.