Show all

தமிழ்மொழிக்கு நிகரான சிறப்புவாய்ந்த மொழி என்றால் எது? ஏன் என்று கூற முடியுமா?

தமிழ்மொழிக்கு நிகரான சிறப்புவாய்ந்த மொழி என்றால் எது? ஏன் என்று கூற முடியுமா? இப்படியொரு கேள்வி வேறொரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டது அந்தக் கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கே நான் கட்டுரையாக்கி இருக்கிறேன்.

29,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: சங்கம் வைத்து, கூட்டுச் சிந்தனையில், வளர்க்கப் பட்ட உலகின் ஒரேமொழி தமிழ் மட்டுமே.

நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றேர் மிசையா கொன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே! என்று
மலை, காடு, ஆற்றங்கரை, கடல், தட்பவெப்பக் காரணங்களால் திரிந்த மலையும் காடும் என்ற அனைத்து நிலப்பகுதிகளையும் திருத்தி,
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று எந்த நிலத்தையும் வளப்படுத்தி வாழ்ந்த காரணம் பற்றி, கூட்டுச் சிந்தனையில், வளர்க்கப் பட்ட உலகின் ஒரேமொழி தமிழுக்கு- சங்கம் கண்டிட தமிழனுக்கு வாய்ப்பு அமைந்தது. 
உலகின் முதல் கடலோடியான தமிழனின் பயணமும்கூட பயணித்து திரும்பும் வகைக்கானதாகவே அமைந்தது. 
ஆனால் தமிழன் தவிர்த்து, உலகின் அனைத்து நாகரிகங்களும் ஆற்றங்கரை நாகரிகங்களே. ஆற்றங்கரைகளைத் தேடித்திரியும் பயணமே அவர்களின் அடிப்படை. அதனாலேயே உலகினருக்கு வலிமையான தலைமை, மதம், தனிமனித சான்றோர்களின் வழிகாட்டுதல் என்று அதிகார மையம் சார்ந்து அவர்கள் வாழ்க்கை அமைந்தது. அதனால் அவர்கள் மொழிகள்- ஆர்வமுள்ள அறிவாளர்களால் முன்னெடுத்த காரணம் பற்றி அந்த ஆர்வலர்களின் தனிப்பட்ட தகுதி திறமை அடிப்படையாகவே உலகினர் மொழிகள் வளர்ந்து வந்திருக்கின்றன.  

தனிமனித ஆதிக்கம் இல்லாத காரணம் பற்றி, சமூகத் தொடர்பு கருவியாக, தமிழரின் அனைத்து அறிவும் ஆற்றலும் ஒருசேர அமைந்ததாக தமிழ் அமையக் காரணம் ஆனது. அதனாலேயே, தமிழர் வாழ்க்கை நெறியாக இலக்கியங்களும் காப்பியங்களும் அமைகின்றனவே அன்றி தமிழர்களுக்கு தனிமனிதச் சான்றோர் முன்னெடுத்த மதம் தேவைப்படாமல் போனது. 

உலகில் எழுத்தைக் கூட்டினாலே சொல் வருகிற ஒரே மொழி தமிழ் மட்டுமே.

எ கூட்டல் எம் கூட்டல் எம் கூட்டல் எ என்றால் அம்மா என்கிற வகையில்தாம், உலக மொழிகள் எல்லாமே செல்லை எழுத எழுத்தைப் பயன்படுத்துகின்றன.

தமிழில் அ ம் மா என்கிற மூன்று எழுத்தையும் சேர்த்து ஒலித்தாலே அம்மா வந்து விடும்.

தமிழ் எழுத்துக்களைத் கற்றுக் கொண்டு விட்டாலே, தமிழின் எந்த சொல்லையும், யாரும் தவறில்லாமல் எழுத முடியும். ஆனால் பிறமொழிகளில் நாம் எழுத்தை மற்றும் கற்றுக் கொண்டு விட்டு, அந்த எழுத்துக்களை வைத்து, அந்த எழுத்துக்களின் ஒலி அடிப்படையை வைத்து, எந்த சொல்லையும் எழுதி, உறுதியாக சரியானது என்று வாதிட்டு விட முடியாது.

நாம் கற்றுக் கொள்கிற அனைத்து சொற்களுக்கும், உரிய எழுத்துக்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். பிறமொழிகளில் நாம் கற்றுக் கொள்கிற எந்த சொல்லுக்கும் ஒலிப்பெழுத்து (ஸ்பெல்லிங்) தெரியாமல் எழுத முடியாது.

இவை எழுத்துக்கும் எழுத்தைக் கூட்ட வருகிற சொல்லுக்குமான பாட்டில் தமிழுக்குப் பிறமொழிகளில் இல்லாத சிறப்பு. அடுத்து சொற்றொடர் என்று வருகிற போது, உலகினரில் எந்த மொழியினரும் எளிதில் கற்றுக் கொள்ளும் வகையினது தமிழ்ச் சொற்றொடர் அமைப்பு முறை.

ஆனால் உலகில் எந்த மொழியையும் தவறில்லாமல் கற்றுக் கொள்வது மிக அரிது. சொல்லின் இடத்தை மாற்றினாலே பொருள் மாறிவிடும். ஆனால் தமிழில் அந்தச் சிக்கல் இல்லவே இல்லை. சொல்லை இடம் மாற்றி சொற்றொடர் அமைத்தாலும், பொருள் மாறாத வகைக்கு தமிழ் சிறப்புடையது.

எலியைப் பிடித்தது பூனை
பிடித்தது பூனை எலியை
பூனை எலியைப் பிடித்தது

இப்படி எழுவாய் பயனிலை செயப்படுபொருளை மாற்றி மாற்றி அமைத்தாலும் அதே பொருள்தாம் கிடைக்கும்.

ஆனால், உலகின் மற்ற மொழிகளில் இவ்வாறான அமைப்பு இல்லை.

தமிழ்மொழிக்கு நிகரான சிறப்புவாய்ந்த மொழி உலகில் எதுவும் இல்லை. தமிழ் காலம் காலமாக செம்மொழி அல்லது இயன்மை மொழியாகவே இருந்து வருகிறது. தமிழ் எந்த மொழியின் கிளை மொழியன்று. தமிழ் தனித்துவமானது. தமிழ் எக்காலத்தும் தனித்தியங்கும் வகைக்கான அடிப்படைகளைக் கொண்டது. தமிழில் கலப்பு செய்கிறவர்கள் தமிழை சிதைக்க முடிவதில்லை. அவர்கள் ஒரு புதிய மொழியை உருவாக்கிக் கொண்டு பிரிந்து விடுகின்றார்கள். அந்த வகையில் மிக அண்மையில் தமிழில் இருந்து பிரிந்த மொழி மலையாளம், தற்போது பலர் தங்கிலீசர்ககளாக புது மொழி உருவாக்கி பிரிந்துகொண்டு வருகின்றார்கள். அவர்களாலும் தமிழைச் சிதைக்க முடியாது. 

தமிழின் காலத்தில், தோன்றிய உலகின் செம்மொழிகள் அல்லது இயன்மொழிகள் எதுவும் தற்போது இல்லை. கலப்புகளை உள்வாங்கிக் கொள்ள தனிமனித அதிகாரம் மேற்கொள்ளப்பட்டதால், அவைகள் பெரும்பாலனவை பேச்சுவழக்கில் இல்லை. ஆகவே தமிழோடு போட்டி போட தகுதி வாய்ந்த மொழி உலகில் ஒன்று கூட இல்லை. இன்றைக்கு உலகில் பெருங்கூட்ட மொழிகளாக இருக்கின்ற மொழிகள் கூட இயன்மொழிகளாக இல்லை. உலக மொழிகள் அனைத்தும் கிளை மொழிகளாக வேர்ச்சொற்கள் இல்லாத இடுகுறிச் சொற்களாகவே இயக்கப்பட்டு வருகின்றன. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.