மின்சாரம் (Electricity) என்ற தலைப்பிற்குள் போனவுடன்- தண்ணீரில் இருந்து, நிலக்கரியில் இருந்து எல்லாம் மின்சாரம் எடுப்பது போல் வேறு எது எதில் இருந்து மின்சாரம் எடுக்க முடியும்? நம் உடலில் கூட மின்சாரம் இருக்கிறதாமே? மின்சாரத்தை சேமிக்க முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுவது இயல்புதான். அதற்கு முன்னால் மின்சாரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோமேயானால் அதிலேயே இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும். நீங்கள் ஓடுகின்றீர்கள், தண்ணீர் ஓடுகிறது. இந்த ஓடுதல் என்பது ஓர் ஆற்றல். அது போல ஒரு சிறிய வீட்டிற்கு மின் இணைப்பு செய்யப்பட்டுள்ள செப்புக் கம்பியில் ஒரு அணுவுக்கு 29 நேர்கள் (Electron) என கோடி கோடியான நேர்கள் அந்த செப்புக் கம்பியில் இருக்கும். நீங்கள் ஓடுவது போல, தண்ணீர் ஓடுவது போல, உங்கள் வீட்டில் மின் இணைப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள செப்புக் கம்பியில் உள்ள நேர்கள் (Electron) ஓடினால் அது மின்சாரம். அந்த ஓட்ட ஆற்றல்தான் மின்சாரம். நாய் துரத்தினால் நீங்கள் ஓடுவீர்கள். பள்ளம் இருந்தால் தண்ணீர் ஓடும். உங்கள் வீட்டு மின் அமைப்பு பணிகளுக்கு மின்வாரியம் மின் இணைப்பு கொடுத்தால் உங்கள் வீட்டு மின் இணைப்பு செப்புக் கம்பியில் நேர்கள் ஓட முடியும். ஓவ்வொரு கருவிக்கும் மதகுகள் மூலம் நேர்களின் ஓட்டத்தைத் தடைபடுத்தி விளக்குகளை ஒளிரவும் அணைக்கவும் செய்கின்றீர்கள். ஒரு கம்பியில் உள்ள நேர்களை ஓடச்செய்ய காந்தத்தால் மட்டுமே முடியும். தைக்க உதவும் நூல்கண்டை பார்த்திருப்பீர்கள். அந்த நூல்கண்டை போல, காப்பிடப்பட்ட செப்புக் கம்பியை சுருளாகச் சுற்றி அதன் நடுவில் ஒரு காந்தத்தை சுழற்றினாலோ, மேலும் கீழுமாக ஆட்டினாலோ அந்த செப்புக்கம்பி சுருளில் உள்ள நேர்கள் ஓடும். அந்தச் செப்புக்கம்பி சுருளின் இரண்டு முனைகளில் மிக மிக குறைந்த மின்சாரத்தில் இயங்கக் கூடிய மின்விளக்கை எரிய வைக்கலாம். தண்ணீரில் இருந்து, நிலக்கரியில் இருந்து எல்லாம் மின்சாரம் தயாரிக்கப் படுவதில்லை. மிகப்பிரமாண்டமான “கம்பிச்சுருள் அதன் நடுவில் காந்தம்” என்கிற கருவியில் காந்தத்தை சுழற்ற அணைமின் நிலையங்களில், அணைகளில் தேக்கப்பட்ட தண்ணீரின் சீறிப்பாயும் ஓட்டம் பயன்படுத்தப்படுகிறது. அனல்மின் நிலையங்களில் நிலக்கரியை எரித்து, பெரிய பெரிய கொள்கலனில் உள்ள நீரை சூடேற்றி, வெளிப்படும் அதன் நீராவி ஆற்றல்- மிகப்பிரமாண்டமான “கம்பிச்சுருள் அதன் நடுவில் காந்தம்” என்கிற கருவியில் காந்தத்தை சுழற்ற பயன்படுத்தப்படுகிறது. அணுமின் நிலையங்களில் அணுப்பிளப்பு ஆற்றல் மூலம் பெரிய பெரிய கொள்கலனில் உள்ள நீரை சூடேற்றி, வெளிப்படும் அதன் நீராவி ஆற்றல்- மிகப்பிரமாண்டமான “கம்பிச்சுருள் அதன் நடுவில் காந்தம்” என்கிற கருவியில் காந்தத்தை சுழற்ற பயன்படுத்தப்படுகிறது. ஆக மின்சாரத்தைச் சேமிக்கவும் முடியாது. “கம்பிச்சுருள் அதன் நடுவில் காந்தம்” என்கிற கருவி- அணை மின்நிலையங்களிலோ, அனல் மின் நிலையங்களிலோ, எங்காவது இயங்கிக் கொண்டிருந்தால் மட்டுமே அதனோடு இணைக்கப்பட்ட வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் மின்சாரத்தைப் பெறமுடியும். “கம்பிச்சுருள் அதன் நடுவில் காந்தம்” என்கிற கருவியை வேறு எந்த வகையான ஆற்றல் மூலமாகவும் இயக்கி, இயங்கும் நேரத்தில் மின்சாரத்தைப் பெறலாம். மிதிவண்டியின் சக்கரத்தில் இந்தக் கருவியை பொருத்தி, மிதிவண்டியில் மின்விளக்கை எரிக்கிறோம் அல்லவா! “கம்பிச்சுருள் அதன் நடுவில் காந்தம்” என்கிற கருவியை மின்ஆக்கி (Generator) என்று சொல்கிறோம். நமது உடலில் கூட மின்சாரம் இருக்கிறதா என்றால்- நமது உடல் செப்புக் கம்பி போல நேர்கள் ஓட்டத்தை அனுமதிக்கும். ஆனால் அழுத்தம் மிகுந்த நேர்கள் ஓட்டத்தால் நமது உடல் இயக்கம் பாதிக்கப்பட்டு மரணம் நேரிடும். சில நேரங்களில் நமது முழங்கையை எங்காவது இடித்துக் கொள்கிறோம் அல்லவா? அப்படி இடித்துக் கொள்கிற போது, மிகமிக குறைந்த வேக நேர்கள் ஓட்டம் அங்கே ஏற்படுகிறது. இதுதான் நமது உடலுக்கும் மின்சாரத்திற்குமான தொடர்பு. அடுத்தக் கட்டுரையில் சந்திக்கலாம்.