உங்கள் வீட்டில் விளக்கு ஒளிர வேண்டுமா? பட்டென மதகைத் (ஸ்விட்ச்) தட்டுகின்றீர்கள். மின்விசிறி சுழல வேண்டுமா? பட்டென மதகைத் (ஸ்விட்ச்) தட்டுகின்றீர்கள். இதற்கெல்லாம் உங்கள் வீடு, ஒரு மின்பணியாளர் மூலம் மின் அமைப்பு வேலைகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்வாரியத்தில் விண்ணப்பித்து மின் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். இந்த மின் அமைப்பு வேலைகள் முன்பெல்லாம் வெளியில் தெரியும்படி சுவரில், உங்கள் வீட்டு ஒவ்வொரு அறைக்கும் மின் இணைப்பு வேலைகள் செய்யப்பட்டு, மின் இணைப்பு கொடுக்கப் பட்டிருக்கும். ஆனால் தற்காலங்களில் சுவருக்குள் பதித்து மின் அமைப்பு வேலைகள் செய்யப்படுகின்றன. உங்கள் வீட்டின் மின் அமைப்பு வேலைகள், தமிழ்நாடு மின்வாரியம் கொடுக்கும் மின்சாரத்தை பயன்படுத்துவதற்காக, காப்பிடப்பட்ட செப்புகம்பிகள் மூலம் விளக்கு, மின்விசிறி, குளிர்சேமக்கலன், தொலைக்காட்சி என்று, அனைத்து மின்சாரத்தால் இயங்கும் கருவிகளுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். மேசை மின் விசிறி, மின்அரைப்பிகள், மின்ஆட்டுரல், செல்பேசிகளுக்கு மின்னேற்றம் செய்ய என இந்த வகையான பயன்பாடுகளுக்கு அந்த கருவிகளில் இணைந்த பொருத்திகளை (பிளக்), மதகுகள் பலகையில் (சுவிட்ச் போர்டு) உள்ள மின்முனைகளில் (வால்சாக்கட்) இணைத்து மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மதகுகள் பலகையில் (சுவிட்ச் போர்டு) உள்ள மின்முனைகளில் பொருத்தகளைப் இணைப்பதற்காக இரண்டு துளைகள் இருக்கும். அந்தத் துளைகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள மதகைத் தட்டியவுடன் அந்த துளைகளில் மின்சாரம் வந்து நிற்கும். அந்தத் துளைகளில் உள்ள உலோக பாகத்தில் உங்கள் விரல்கள் தவறுதலாகப் பட்டுவிட்டால், அந்த மின்துளைகளில் வந்து நிற்கிற 230 ஓல்ட் மின்சாரம் உங்களை கடுமையாகத் தாக்கும். அது உங்களை கடும் வேகத்தில் ஆட்டி அதிர்ச்சி தரும். உடனடியாக ஒரு மின்சாரம் பாயாத பொருள் மூலம், உங்கள் கையை மின் இணைப்பில் இருந்து வேகமாக தட்டி விட்டு உங்களை மன்தாக்குதலில் இருந்து மீட்கலாம். உங்களை யாராவது மீட்கலாம் என்று உங்களைத் தொட்டு இழுக்க முயன்றால், அவரையும் மின்சாரம் பற்றிக் கொண்டு தாக்கும். தவறுதலாக மின் முனையில் வைத்த உங்கள் விரலை நீங்களாக முயற்சி செய்து இழுத்துக் கொள்வது மிகமிக கடினம். நீங்கள் மின்சாரத்தைத் தொட்டவுடனே உங்களைப் பற்றிக்கொண்டு உங்கள் மூலமாக நீங்கள் நிற்கும் தரைக்கு மின்சாரம் பாயும். நீங்கள் பயன்படுத்தும் எந்;தக் கருவியில் மின்கசிவு இருந்தாலும், அந்தக் கருவியை உங்கள் கைகளால் தொடும் போது, மின்சாரத்தால் இதே மாதிரியான பாதிப்பு உங்களுக்கு உண்டு. அடுத்தக் கட்டுரையில் சந்திக்கலாம்.