பெரியார் தத்துவம் என்பது என்ன? பலர் தங்களைப் பெரியாரியக்காரர்கள் (பெரியாரிஸ்ட்) என கூறிக்கொண்டு கடவுள் மறுப்பை முன் எடுக்கிறார்கள், அதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இதில் என் சொந்தப் பாடுகள் கூடுதலாகப் பேசப்படுகிற காரணம் பற்றி, அது ஒரு நிலான் காலம்-8 என்பது இக்கட்டுரைக்கான தலைப்பாகிறது. 16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5126: இளம் அகவையில் என் அம்மா என்னை சாமி திரைப்படங்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்வர். ஆனாலும் எல்லா சாமியும் என்னை பாதிக்கவில்லை. என்னை பாதித்தது முருகன் மட்டுமே. எட்டாம் வகுப்பு படிப்பை நான் மேட்டூரில் தொடரவேண்டி வந்தது. ஏழாம் வகுப்பு வரை நான் படித்தது ஈரோட்டில்தான். ஈரோட்டில் படிக்கும் வரை எனக்கு மிகுந்த ஈடுபாடு புரட்சித்தலைவர் அவர்களும், அண்ணா அவர்களுமே. நான் பிறந்த ஈரோட்டில் வாழ்ந்த பெரியாரைப் பற்றி அப்போது எனக்குப் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. மேட்டூரில் நான் படித்த வைதீசுவரர் உயர்நிலைப்பள்ளி பேரளவு பிராமணியத் தாக்கம் உள்ள பள்ளி. மேட்டூரே கொஞ்சம் பிராமணியத் தாக்கம் மிகுந்த பகுதிதான். மேட்டூரில் எந்த அளவிற்கு பிராமணியத் தாக்கம் இருக்கிறதோ அதை விடக் கூடுதலாக பெரியாரியத் தாக்கம் உண்டு. இயல்பிலேயே எனக்கிருந்த தமிழ்ப்பற்று. நான் எட்டாம் படிக்கும் போது என் தமிழாசிரியர் தாமோதரன் ஐயா அவர்களால் மேலும் மெருகூட்டப்பட்டது. அத்தோடு பிரமணிய எதிர்ப்புக்கும் என்னுள் அவர் வித்திட்டார். நானும் சாமிஇல்லை என்று பேசுகிறவனும், எழுதுகிறவனும் பொதுவெளியில் முழங்குகிறவனும் ஆக இருந்தேன். ஆனால் தமிழ்த்தெய்வம் முருகனை மட்டும் என் இதயத்தில் இருந்து வெளியேற்ற முடிய அல்லது முயலவே இல்லை. மால்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான மக்கள் மனமகிழ் மன்றத்தில் நான் பெரியார் அவர்களின் பேச்சை முன் வரிசையில் அமர்ந்து கேட்டிருக்கிறேன். நான் மேட்டூர் அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மின்பணியாளர் முதலாண்டு படிக்கும் போது மாரியைப் பேரளவாக வணங்குகிறவரும், தன் பெண் குழந்தைக்கு தமிழ்மாரி என்று பெயரிட்டவரும் என் இனிய நண்பரும் ஆன இயந்திர வேலையாள் இரண்டாம் ஆண்டு படித்த கணேசன் திராவிட இயக்கத்தலைவர் வீரமணியை எங்கள் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு அழைத்து வந்து பேச வைத்தார். சாமி இல்லை என்கிற கருத்தியல், தனிமனிதர்கள் யாரையும் முன்னேற்றவில்லை என்கிற கருத்து என்னுள் மெல்ல முளைத்தது. மேலும் பிராமணிய எதிர்ப்பு என்கிற கருத்தியல் மற்றும் சாமி இல்லை என்கிற கருத்தியல் 'இருக்கிறது' என்கிற ஒன்றுக்கான முரண்பாடே அன்றி அது தனி அடிப்படை கொண்டது அல்ல என்பது என் கருத்துக்கு உரமூட்டியது. என்னுள் பிராமணிய எதிர்ப்பு: பிராமணிய எதிர்ப்பு பிராமணியத்தை நோக்கிச் செல்கிறவர்களை ஊக்குவிக்கிறதே அன்றி பிராமணியத்தை வீழ்த்திவிடவில்லை. ஆகவே நாம் முன்னெடுக்கவேண்டியது நமது சொந்த இயலான தமிழியல் கட்டுமானமே என்று புரிய வைத்தது. சாமி இல்லை என்கிற கருத்தியல் எனக்குள் நீர்த்துப் போகத் தொடங்கியது. நான் ஹிந்து இல்லை. தமிழன் என்கிற செய்தி என் சிந்தனையை முறுக்கேற்றியது. அப்புறம் நீண்ட நெடும் பயணத்தில் எனக்குக் கிடைத்த மிகமிக அரிய உண்மைத்தகவல் கடவுள் தமிழ்ச்சொல் மட்டுமே என்பது ஆகும். பெரியார் வாழ்ந்த காலத்தில் எனக்கோ, வேறு ஒற்றை ஆளுக்கோ கடவுள் தமிழ்ச்சொல் மட்டுமே என்கிற உண்மை கிடைத்திருக்க வில்லை. அதனால் பெரியாருக்கும் இது சென்று சேரவில்லை என்பது உண்மை. பெரியாரை எதிர்காலத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி, பெரியாரில் மீதான வினா எழுப்பவது பிழையே. பிராமணியம் கொண்டாடும் அத்தனை வழிபாட்டு மூலங்களுக்கும் அடிப்படை, தமிழ்முன்னேர் தெளிவாக நிறுவியிருந்த தெய்வங்களே என்று என் வரலாற்றில் நான் தெளிவாகப் புரிந்து கொண்ட தகவலும், இந்தத் தகவல், பெரியார் வாழ்ந்த காலத்தில் எனக்கோ வேறு ஒற்றை ஆளுக்கோ கிடைத்திருக்க வில்லை. அதனால் பெரியாருக்கும் இதுவும் சென்று சேரவில்லை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,180.