05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்ப் பெற்றோர்களுக்கு, தங்களின் எல்லையில்லா ஆங்கில மோகத்தால், குழந்தைப் பருவத்திலேயே தங்கள் பிள்ளைகள் மீதான ஆங்கிலத் திணிப்பு தவறானது என்பது புரிவதேயில்லை. அதை உணர்த்த வேண்டிய பொறுப்பில் உள்ள அரசோ, ஊடகங்களோ, கல்வி நிறுவனங்களோ கூட அதை அவர்களுக்கு உணர்த்துவதற்கு மாற்றாக ஊக்குவிக்கிற வேலைகளையே செய்கின்றன. மற்ற மொழியினரை விட தமிழ்க் குழந்தைகளுக்கு ஆங்கிலம் ஆபத்தானது. ஏனென்றால்: எந்த தாய்மொழியும் அதைப் பேசும் மக்களுக்கு அறிவாற்றல் வளர்க்கும் கருவியாகும். அதிலும் தமிழ் அறிவின் உச்சாணிக் கொம்பைத் தொட்ட மொழியாகும். உலக மொழிகளிலேயே தமிழ்மொழி மிக மிக நுட்பமானது. ஓர்மை மிகுந்தது. குறில் நெடில் வேறுபாட்டைக் காட்டுவது. எழுத்தைக் கூட்டினால் சொல் வரும். எல்லா சொல்லும் பொருள் குறித்தன. உலக மொழிகளில் உள்ள தொன்மங்களின் மூலத்தை, அந்தந்த மொழியினர் படித்து புரிந்து கொள்ள முடியாது. ஆனால் தமிழ்மொழியில் உள்ள தொன்மங்களை தமிழ் தெரிந்த எந்த காலத்தினரும் படித்து பொருள் புரிந்து கொள்ள முடியும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கப் பள்ளிகளில் ஒரு நாடகம் மாணவர்களால் நடத்திக் காட்டப் படும். அந்த நாடகத்தில்: ஆங்கிலத்தின் மூன்றே சொற்களில் பெரிய நிகழ்;வை நடத்திக் காட்டலாம் என்கிற கருத்து உணர்த்தப் படும். காட்சி:1 மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியர் பாடம் கற்றுத் தருவார். ஆங்கிலத்தில் மிகப் படித்த மனிதர்களைக் கூட சமாளிக்க மூன்றே ஆங்கிலச் சொற்கள் போதும். அதை நான் உங்களுக்குக் கற்றுத் தரப்;; போகிறேன் என்ற பீடிகையோடு மூன்று ஆங்கிலச் சொற்களைக் கற்றுத் தருவார் ஆசிரியர். அந்தச் சொற்கள் 'எஸ்' 'நோ' 'ஆல்ரைட்' என்பன. காட்சி:2 'எஸ்' 'நோ' 'ஆல்ரைட்' ஆங்கிலம் கற்ற மாணவனும் அவன் அப்பாவும் இரண்டாவது காட்சி திரைப்படம் பார்த்து விட்டு, நடுஇரவில் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பார்கள். அந்த வழியாக வந்த காவலர் இவர்கள் மீது சந்தேகப் பட்டு விசாரிப்பார். இந்த நேரத்தில் தெருவில் நடமாடிக் கொண்டிருக்கின்றீகளே நீங்கள் திருடர்களா? என்று. உடனே அந்தக் காவல் அதிகாரியை ஆங்கிலத்தில் சமாளிக்க நினைத்த மாணவன் 'எஸ்' என்றான். அதிர்ச்சி அடைந்த காவலர் நீங்கள் வந்த நோக்கம் முடிந்ததா என்பார். உடனே அந்த மாணவன் 'நோ' என்பான். அவ்வளவு திமிரா உனக்கு இப்போதே கைது செய்யப் போகிறேன் என்பார் காவலர். உடனே அந்த மாணவன் ஆல்ரைட் என்பான். இந்த நாடகக் காட்சியை பள்ளி ஆண்டு விழாவில் கண்டு கழிக்கும் அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அது போலத்தான் நமது தமிழ்க் குழந்தைகளை, மழலை அகவையிலேயே ஆங்கிலப் பாடலை சொல்ல வைத்து, இந்த 'எஸ்' 'நோ' இரண்டே சொற்களில் அவர்கள் கற்க வேண்டிய ஏராளமான சொற்களையும் செய்திகளையும், இந்த இரண்டே சொற்களில் பொதித்து தங்கள் குழந்தையின் அறிவை குறுக்கும் வேலைகளைத் தமிழ் பெற்றோர்கள் செய்து வருகின்றனர். 'பாப்பா உன்னுடைய பெயர் என்ன? அக்கா என்னுடைய பெயர் ஆதிரை.' இவ்வாறு தமிழில் எழுவாய், பயனிலை, செயப்படு பொருள், வினாச்சொல், வினாவகை, பொருள் குறித்த பெயர், தன்மை, முன்னிலை படர்க்கை என ஏராளமான இலக்கணங்களோடு தமிழைக் கற்கின்றனர் தமிழ்க் குழந்தைகள். 'ஜானி ஜானி எஸ் பாப்பா' அடுத்தவரிகளில், ஈட்டிங் சுகர் நோ பாப்பா, டெல்லிங் லெய்ஸ் நோ பாப்பா என்று விரிவாக குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டிய பல செய்திகளை வெறுமனே எஸ் நோ என்று இரண்டு சொற்களால் முடித்துக் கொள்ளப் படுகிறது. வெறுமனே இணைப்புச் சொல் கூட இல்லாமல் உணர்த்துகிற செய்தியைக் கற்றுத் தந்துவிட்டு எதிர்காலத்தில் அந்தக் குழந்தையிடம் எப்படிப் படைப்பாற்றலை எதிர்பார்க்க முடியும். ஆங்கிலம் படிக்கலாம், ஆங்கில வழியிலும் படிக்கலாம் ஆனால் மழலைகளுக்கு ஆங்கிலம் வேண்டாம் தமிழ்ப் பெற்றோர்களே. தமிழைக் கற்றுக் கொண்டால் உலகில் எந்த மொழியையும் எளிமையாகக் கற்கலாம். மழலையில் தமிழை மட்டும் கற்றுக் கொடுங்கள். தாய்மொழியான தமிழைக் கற்றுக் கொள்ளும் தமிழ்க் குழந்தைகள், தமிழ் மொழியின் இலக்கண நுட்பங்களையும் சேர்ந்தே கற்றுக் கொள்வதால் அந்தக் குழந்தையின் நுண்ணறிவுத் மேம்படுகிறது. உலகின் எந்த மொழிக் குழந்தையும் தமிழ்க் குழந்தையோடு நுண்ணறிவுத் திறனில் போட்டி போட முடியாது. போகப் போகத்தான் நம்முடைய குழந்தைகள் பின்னடைவை, நம் வளர்ப்பு முறையால் சந்திக்கின்றன. புரிந்து கொள்ளுங்கள் தமிழ்ப் பொற்றோர்களே! பிஞ்சு தமிழ்க் குழந்தைகளுக்கு ஆங்கிலப் பயிற்சி அதன் அறிவாற்றலைக் குறுக்குமேயன்றி வளர்ப்பதற்கான வாய்ப்பேயில்லை. ஆங்கிலம் என்ற பெயரில் நாமும் நம் கல்வி நிறுவனங்களும் பயிற்று விப்பது நூற்றுக் கணக்கான பெயர்ச் சொற்களை மட்டுந்தாம். நம்குழந்தைகள் ஒன்றும் தமிழ்-ஆங்கில அகரமுதலிகள் இல்லையே. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,917.