Show all

தீபாவளி: புராண அடிப்படை விளக்கம்

நரகாசுரனை கிருஷ்ணர் அழித்த புராணக் காரணத்திற்காக தீபாவளி கொண்டாடப் படுகிறது.

புராணக் கதைகளின் படி, கிருஷ்ணரின் மனைவியர் (திருமகள், பூமகள்) இருவருள் ஒருவரான பூமகளுக்கும் (பூமாதேவிக்கு) மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பிறந்த மகன் தான் நரகாசுரன்.

தொடக்கத்தில் அவன் மிக நல்லவனாக தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான், நாளடைவில் நரகாசுரன் கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். இதற்கு இடையில் அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்யலானான். பிரம்மாவும் மனம் மகிழ்ந்து காட்சித் தந்து,

‘அன்பனே உன் தவத்திற்கு மெச்சினேன், விரும்பிய வரம் கேள்’ என்றார்.

‘நான் சாகக்கூடாது, எனக்குச் சாகா வரம் அருளுங்கள்’ என்றான். அதற்கு ‘உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள்: அழியத்தான் வேண்டும் அது தர இயலாது என பிரமா கூறி, வேறு எதாவது கேள்’ என்றார். அதனால் அவன் ‘ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு எவராலும் மரணம் அடையக்கூடாது’ என்று வரமருளக் கேட்டான்.

வரத்தை வாங்கியதும் நரகாசுரனுக்கு கர்வம் (அசுரக் குணம்) தலைக்கேறியது. தொடங்கி விட்டது நரகாசுரனின் அட்டகாசம். அதனால் அவன், அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களையும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான்.

எவரும் இரவில் வீட்டில் விளக்கேற்றக் கூடாது என்றும் உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்!

வெளிச்ச விளக்குகளை வீட்டில் வைத்திருந்தவர்களின் தலைகளைக் கொய்தான்.

இந்திர லோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான். இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான், நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர். ‘கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்’ என்றார் கிருஷ்ணர்.

ஸ்ரீகிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார். அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான், நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை. போர் தொடங்கியது. அவனை பூமாதேவியினால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரம் பெற்றிருந்தமையால், பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார் கிருஷ்ணர்.

கண்ணனுக்கு சாரதியாக சத்தியபாமவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள். அவளும் தேரோட்ட, யுத்தம் தொடங்கியது. முதலில் நரகாசுரனின் படைத் தளபதி முரன் என்பவனைக் கொன்றார் கிருஷ்ணர். அதனால்தான் கிருஷ்ணனுக்கு ‘முராரி’ என்ற பெயர் வந்தது. கடும்போர் தொடர்ந்தது. நரகாசுரன் தன் ‘கதையை’ வீசினான், மாயக் கண்ணன் மயங்கி விழுந்ததுபோல் விழுந்தான். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா?

எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர், ஆனால் காரணம் இல்லாமல் காரியமா? பூமாதேவியின் அம்சமான சத்திய பாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள் அல்லவா? அவள் கையால் தானே மரணம் ஆக வேண்டும்? அந்த சந்தற்பத்தை ஏற்படுத்தவே கிருஷ்ணர் மயங்கியதை அறியாத சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு எழுந்தாள்,

‘என் கண்ணனுக்கா இந்த நிலை’ என்று அவள் மனம் கொதிக்க, அம்பு நரகாசுரன் மேல் சரமாரியாக எய்ய அவனும் (நரகாசுரன்) கீழே சாய்ந்தான். அவன் கேட்ட வரத்தின்படி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான்.

நரகாசுரன் கொல்லப்பட்ட அந்நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடி வருகின்றோம்.

தீபாவளியை பட்டாசு வெடித்தும் விளக்கு ஏற்றியும் கொண்டாடுவதற்கான காரணம்:

நரகாசுரன், எவரும் இரவில் வீட்டில் விளக்கேற்றக் கூடாது என்றும் உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்ச விளக்குகளை வீட்டில் வைத்திருந்தவர்களின் தலைகளைக் கொய்தான்.

எனவேதான் அவன் இறப்பை வெடி வெடித்தும் விளக்கேற்றியும் கொண்டாடுகிறோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.