Show all

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் முறை

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொடாடப்படுகிறது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழர்கள் பலர் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை. ஆனால் பறவைகளின் நலன் கருதி வேடந்தாங்கல் உள்ளிட்ட சரணாலயப் பகுதிகளில் வாழும் மக்கள் அவ்வழக்கத்தை தடை செய்து பட்டாசு இல்லா திருநாளாகக் கொண்டாடி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.