அக்காலத்தில் சாதிகள் என்பன நம் முன்னோரின் தொழில், வாழ்க்கை முறை, தனித்திறன் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றை தெரியப்படுத்தும் அடையாளமாகத் திகழ்ந்தது. 05,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழர் எந்த அயல் இன மொழிகளையும் அறிந்திராத, தமிழ்த் தொடராண்டின் முதல் இரண்டாயிரம் ஆண்டு காலத்தில், நாவலந்தேயம் முழுவதும் தமிழர் அன்றி யாரும் இல்லாத கால கட்டத்தையே இங்கு அக்காலம் என்று குறிப்பிடுகிறோம். அக்காலத்தில் சாதிகள் என்பன நம் முன்னோரின் தொழில், வாழ்க்கை முறை, தனித்திறன் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றை தெரியப்படுத்தும் அடையாளமாகத் திகழ்ந்தது. இன்று அவையே பிறப்படிப் படையாக்கப்பட்டு தமிழ் இனத்தில் சமூக ஏற்றதாழ்வை, வேற்றுமையைக் காட்டும் சாதிகளாக நடமாடி வருகின்றன. அக்காலத்தில் உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ பிரித்துப் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. சாதிகள் ஏற்பட்ட காலத்தில் அவை பிறப்பை மையமாகக் கொண்டு அமையவில்லை அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டே அமைந்தது. மற்றும் அவை ஒருவனுக்கோ அல்லது ஒரு சமூகத்துக்கோ நிரந்தரமாகவும் அமைந்தவை அல்ல. அதாவது அவன் செய்யும் தொழில் மாறுபட்டால் அவன் சாதியும் மாறும் (அக்காலத்தில்). எடுத்துக்காட்டாக ஒருவன் உழவுத் தொழில் செய்தால் வேளாளன் என்பர். அவன் அத்தொழிலை விட்டு வேறு தொழிலில் ஈடுபட்டால் அதாவது யாழ் இசைக்கும் தனித்திறனை முன்னெடுத்தால் அவனைப் பாணன் என்றுதான் கூறுவர். ஆனால் இன்று சாதிமாறும் அமைப்பு இல்லாமல் போய்விட்டது. சாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. ஒருவர் செய்யும் தொழிலுக்குத் தனியாக தொழிற் சங்கம் என்கிற புதிய மாறும்அமைப்பு வந்து விட்டது. சார்ந்திருக்கிற கட்சி அடிப்படையான மாறும்பிரிவும் தற்போது காணப்படுகிறது. சாதி மாறாத்தன்மையுடன் பிறப்படிப்படையாக தொடரப்பட்டு வருகிறது. இது இடையில் ஏற்பட்ட மாறுதல் ஆகும். பார்ப்பனியர் வரவுக்கு பிந்தைய மாறுதல் ஆகும். இந்தியா முழுவதும் தமிழரோடு கலந்த பார்ப்பனியர்- தங்களை- சமூக மற்றும் அரசின் நிருவாகப் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்கள் தொழில் மாற விரும்பாததாலும், தொழில் மாறாததாலும், தங்களைப் பிறப்படிப்படையான அந்தத் தொழில்களுக்கு மட்டும் உரிய சாதி என்றும் தாங்கள் நிருவாகப்பணியில் ஈடுபடும் பணிக்காக பிரமமாவின் முகத்தில் பிறந்தவர்கள் என்றெல்லாம் கதை கட்டினர். சாதிகள் பிறப்படிப்படையாகத் தொடர்வதும், உழைப்பில்லாத் தளத்தில் இருந்து, உழைப்பை நோக்கிய தளம் வரையிலான, தொழிலில் ஈடுபட்ட வகைக்கு ஏற்றவாறு, ஏற்றதாழ்வு கற்பிக்கப்பட்டது. அதிக உழைப்பு சார்ந்த தொழிலினர் மிகத்தாழ்ந்தவர்கள். உழைப்பு குறைய குறைய உயர்ந்தவர்கள். அனைவரையும் விடவும், எல்லாச் சாதிகளை விடவும் பார்ப்பனியர்கள் உயர்ந்தவர்கள். பார்ப்பனியர்கள் கொண்டுவந்த ஈரானிய பாரசீக மொழியோடு, தமிழ்கலந்து செய்யப்பட்ட மொழியான சமஸ்கிருதத்தை பெண்களும், பார்ப்பனியர் அல்லாத மற்ற இனத்தினரும் படிக்கக்கூடாது. சமஸ்கிருதம் தேவபாஷா- தமிழ் நீச பாஷா- என்று கற்பிக்கப்பட்டது. பார்ப்பனியரோடு எந்த சாதிக்கும் உரசல் கிடையாது. மற்ற ஒவ்வொரு சாதிக்கும் தங்கள் சாதிக்கான உயர்வு கற்பிக்க பல்வேறு பிறப்புக் கதைகளும் கட்டப்பட்டு, சாதிகளுக்கு இடையிலான ஏற்றதாழ்வு மற்றும் உரசல், பல ஆயிரம் ஆண்டுகளாக வெள்ளையர் வணிக வருகை வரை தொடர்ந்து வந்தது. வெள்ளையர் வருகைக்குப் பின்பும், திராவிட இயக்கத்தின் எழுச்சிக்குப் பின்பும், கொஞ்சம் கொஞ்சமாக சாதிகளுக்கு இடையிலான ஏற்றதாழ்வு களையப்பட்டும், பார்ப்பனியர்களோடு உரசல் மேற்கொள்ளப்பட்டும், பார்ப்பனிய புளுகுகள் தோலுரிக்கப்பட்டும் வருகின்றன. தமிழ்த் தேசியம் என்ற தலைப்பில் எழுந்திருக்கிற தலைவர்கள், சாதியை அடியோடு களைய முடியும் என்று நம்பி, களைய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இயங்குகிறார்கள். சாதிக்கொரு கட்சி அமைத்து கொண்ட சாதியத் தலைவர்கள்- தங்கள் சாதியர் முன்னேற்றத்திற்குப் போராடுவதோடு, அடுத்த சாதியரை வீழ்த்தவும், அசிங்கப்படுத்த, தாழ்த்த பார்ப்பனியச் சார்பில் முன்னெடுக்கப்பட்ட கட்டுக்கதைகளில் திளைத்து வருகின்றனர். ஆக- சாதி வேண்டவே வேண்டாம் என்கிற தமிழ்த்தேசிய அரசியலும், இன்றைக்கும் பார்ப்பனியச் சார்பில்- சாதிகளுக்கு இடையில் ஏற்றதாழ்வு கற்பித்து அப்பாவி மக்களை அடித்துக் கொள்ள வைத்து இயங்கிவரும் சாதிக்கட்சி அரசியலும், சாதியில் நீக்குப் போக்கு அமைந்த அக்கால சாதி அமைப்பை கொண்டாட முனைய வேண்டும். பார்ப்பனியச் சார்பிலிருந்து முற்றாக விடுபட வேண்டும் பிறப்படிப்படையாக- தமிழ்ச்சாதிகளுக்குள் ஏற்றதாழ்வைக் கற்பித்த பார்ப்பனியர்களை- தமிழ்ச்சாதிகளுக்குள்ளோ, தமிழினத்திற்குள்ளோ அங்கீகரிக்கக் கூடாது. எந்தக் கணக்கெடுப்பும், எந்த இடஒதுக்கீடும் தமிழ்ச் சாதிகளுக்கு மட்டுமே தொடரவேண்டும். பல ஆயிரம் ஆண்டுகள்- நம்மை மட்டும் உழைப்பில் ஈடுபடுத்தி, உழைப்பில் ஈடுபட்டதற்காகவே தாழ்த்தி, தாழ்த்தியே உழைப்பில் ;தொடர்ந்து ஈடுபட வைத்து, உழைப்பில் இருந்து விலகியிருந்த பார்ப்பனியர்கள் சில நூறு ஆண்டுகளாவது, பொதுப்பட்டியலில் போட்டியிட்டு நம்மோடு இயங்கட்டுமே!
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,074.