09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உடைமை, உரிமை இரண்டுக்குமான வேறுபாட்டை புரிந்து கொள்ளாமல், தமிழர்களின் தெளிவான இலக்கை தீர்மானிக்க முடியாது. கருணாநிதி அவர்கள் மாணவர்களுக்கு இலவச பேருந்து பாஸ் வழங்கினார்கள். எம்ஜியார் அவர்கள் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கினார்கள். இரண்டில் எதை போற்றிக் கொள்வது என்பதை, தெளிவாக தெரிந்து கொள்ள, உடைமை, உரிமை இரண்டுக்குமான வேறுபாட்டை புரிந்து கொண்டால் மட்டுமே முடியும். கருணாநிதி கொடுத்தது உரிமை. கருணாநிதி ஆட்சி மாறினால் அதற்கு உத்தரவாதம் இல்லை. பேருந்து என்கிற அடிப்படை உடைமை அரசிடம் இருக்கிறது; அதில் பயணிக்கும் அனுமதி மாணவர்களுக்கு கொடுக்கப் படுகிறது. ஆக உரிமை என்பது அனுமதி மட்டுமே; உடைமை அல்ல. எம்ஜியார் கொடுத்தது உடைமை. மிதிவண்டி நமது கைக்கு வந்து விட்டால் அது நம்முடையது. அதன் மீதான அதிகாரம் நம்முடையது. நிலையானது. அதன் பாதுகாப்பு, பராமரிப்பு நம்;மைச் சேர்ந்தது. காங்கிரஸ் சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மானியக் கடன் வழங்கியது. அந்தக் கடனைப் பெறுவதற்கு நாம் என்ன தொழில் செய்யப் போகிறோம் என்று திட்ட அறிக்கை வழங்கி, நமது இளைஞர்கள் அந்தக் கடனைப் பெற்றுக் கொண்டார்கள். நமது இளைஞர்களுக்குச் சொந்தமாக ஒரு தொழில் கிடைத்து விட்டது. திருப்பூர், கோவை, ஓசூர், சென்னை, சேலம் ஆகிய இடங்களில் இளைஞர்கள் தொழில் அதிபர்களாக முளைத்தார்கள். பாஜக நிறைய கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்து விட்டிருக்கிறது. எடுத்துக்காட்டு பதஞ்சலி நிறுவனம். இந்திய நாட்டுப் பொருள்களை விற்பனை செய்வதாக விளம்பரம். பதஞ்சலி ஒரு தனிநபரின் உடைமை. அதில் நமக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தால், அது அந்த நிறுவனத்தில் நாம் பெற்றுக்;; கொண்ட உரிமை. அந்த உரிமை நமது 58 அகவைக்கானது. நமது அடுத்த தலைமுறைக்கு உதவாது. காங்கிரஸ் கொடுத்த தொழில், அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்படும். அதில் வளர்ச்சி அடைந்தால் ஏழேழு தலைமுறைக்கும் நமக்கு பயனளிக்கும். இப்படி கருவிகள் தொழில்; மட்டுமல்ல. முதல் பத்து பணக்காரர்களில் ஒரு தமிழன் இல்லை. முதல் பத்து அரசியல்வாதிகளில் ஒரு தமிழன் இல்லை. முதல் பத்து நடிகர்களில் ஒரு தமிழன் இல்லை. முதல் பத்து ஊடகங்களில் ஒன்றும் தமிழனுடையது இல்லை. எந்த அலைக்கற்றை வரிசையும் தமிழனுடையது இல்லை. உச்ச நீதிமன்றத்தில் இருந்து உலக நீதிமன்றம் வரை தமிழன் இல்லை. முதல் பத்து அறக்கட்டளைகளில் ஒன்றும் தமிழனுடையது இல்லை. 1.கல்வி 2.கலை 3.இலக்கியம் 4.தொழில் 5.கருவிகள் 6.உடை,அணிகலன் 7.உணவுகள் 8.வணிகம் 9.நாடு 10.அரசு 11.நீராதாரம் 12.கோயில் 13.நிதி 14.அறங்கூற்று 15.பாதுகாப்பு 16.பண்பாடு 17.வரலாறு ஆகியவற்றில் எல்லாம் உடைமையாளனாக எந்தத் தமிழனும் இல்லாத போது, தமிழர்களின் வாழ்மானம்- எல்லா தளத்திலும் அயலவர்களை உடைமையாளர்களாக நிறுத்தி, நிருவாகக் கூலியாகவோ உடலுழைப்புக் கூலியாகவோ இயங்குவதாகத்தாகவே யிருக்கிற போது, எந்தத் தமிழனும் எந்தத் துறையிலும் உடைமையாளனாக மாறுகிற முயற்சியேயில்லாமல் வெறுமனே சாதி வேண்டாம்! மதம் வேண்டாம்! திராவிடம் வேண்டாம்! இந்தியம் வேண்டாம்! தமிழனாக இருப்போம். என்றெல்லாம், உணர்வுகளை மட்டுமே பரிமாற்றம் செய்து கொள்வதில் என்ன பயன் விளைந்து விட முடியும். தமிழா! நீ! பகுதி நேரமாக வாவேயினும் ஏதாவதொரு துறையில் உடைமையாளனாக நுழைய முற்படு! படிப்படியாக முழுமையாக மீட்டெடு! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,827.