வேறு ஒரு தளத்தில், இறை நிலையின் உறை நிலைதான் இறப்பா? ஏன்று என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை. 03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: உங்கள் வினா, தொடக்கம் முடிவு என்கிற அடிப்படையை அலசுகிற வகையானதாக அமைந்துள்ளது. தமிழ்அடிப்படையில் இந்த வகைக்கு கடவுள், இறை, தெய்வம் என்கிற மூன்று சொற்கள் முன்மொழியப்படுகின்றன. எனவே அந்த மூன்று சொற்களின் விரிவையும் நாம் இங்கு அலச முயல்வோம். இறை என்பது பொருள்பொதிந்த தமிழ்ச்சொல். நிலம். நீர், தீ, காற்று என்கிற நான்கு ஆற்றல்கள் (நாற்திரம்) வெளியில் இறைந்து காணப்படுவதால் அவைகளை இறையென்ற தலைப்பில் அடக்கினர் தமிழ் முன்னோர். நிலம், நீர். தீ, காற்று ஆகிய ஆற்றல் மூலங்களை தமிழர் திரங்கள் என்றனர். திரம் என்றால் குவிந்திருக்கிற ஆற்றல் என்று பொருள். திரட்சி, திரண்டிருத்தல், திரள் ஆகிய சொற்களை ஒப்பு நோக்குக. திறன் என்றால் ஆற்றல். வெளிப்படுகிற ஆற்றல். திற, திறப்பு ஆகிய சொற்களை ஒப்பு நோக்குக. இந்த நிலம். நீர், தீ, காற்று என்கிற நான்கு ஆற்றல்களே விண்மீன்கள், ஏழு கோள்கள், அவற்றில் ஒன்றான புவியில் வாழும் உயிரிகள் மரம் மட்டை நீங்கள் நான் அனைத்திற்கும் மூலமானவைகள் ஆகும். இந்த நிலம் நீர் தீ காற்று என்கிற நான்கு ஆற்றல்கள் தான்தோன்றியாக இயங்கிக் கொண்டிருப்பவைகள் ஆகும். ஆனாலும் தமிழ் முன்னோர் முதலெனத் தெரிவித்தது நேரடியாக இந்தத் திரங்களை அல்ல. தமிழ்முன்னோர் முதலாகத் தெரிவித்தது: தமிழ்முன்னோர் திரங்களை நான்காகப் பட்டியல் இடவில்லை. மாறாக ஐந்திரம் என்கின்றனர். ஐந்திரம் என்பதும் பொருள் பொதிந்த தமிழ்ச்சொல்லே. ஐந்திரத்தை வேறு யாராவது உரிமை கொண்டாடினால் அது களவாணித்தனமே ஆகும். நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திரங்களில் நிலம், நீர், தீ, காற்று ஆகியவைகளையே இயக்க ஆற்றல் என்று ஒப்புக்கொள்ள முடியும், அனால் அடிப்படையில்லாமலா தமிழ்முன்னோர் இயக்கம் காட்டாத (பார்ப்பனியர் ஆகாயம் என்றும், ஆங்கிலேயர் ஸ்கை என்றும் எளிமையாகக் கடந்து போகிற) இந்த வெளியை ஆற்றல் பட்டியலில் திரமாக இணைத்திருப்பர்? நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திரங்களில் ஒன்றான தான்தோன்றி இயக்கம் அற்றதும் எல்லையற்றதும் ஆன விசும்பு- தான் தோன்றி இயக்கம் உடைய நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களுக்கு உள்ளும் கடந்தும், அமைகிற காரணம் பற்றி கடவுள் என்றும் வழங்கினர் தமிழ் முன்னோர். அந்த நாற்திர ஆற்றல்கள் நம்முள் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி நாமே தெய்வங்கள் ஆவோம். அந்த வகையில் நமக்கு நம் முன்னோர்கள் தெய்வம். நமது மரபுரிமையர்களுக்கு நாம் தெய்வம். கடவுள் என்பது விசும்பு வெளி, விண்வெளி, விசும்பு என்ற மூன்று நிலைகளாக- கடவுள் நம்மிடம் இயக்கம் பெற்று நம்மை முயக்குகிற ஆற்றல். அதாவது கடவுள் நம்மை முயக்கும் வகைக்கு நாம் வெளியில் இயங்கி, விண்வெளி விசும்பு என்ற நிலைக்கு அதை மாற்றி- நமது விதியை நாமே விசும்பில் எழுதிக் கொள்கிறோம். ஆனால் அந்த அடிப்படையிலிருந்து பார்ப்பனியர்களாலும், பார்ப்பனியச் சார்பில் நம்மாலும் பல ஆயிரம் தெய்வங்கள் இடுகுறிகளாக ஆபாசத் தொன்மக் கதைகளோடு கட்டமைக்கப்பட்டு இன்றுவரை கொண்டாப்பட்டு வருகின்றன. அதிலிருந்து உயர்நிலையாக ஆன்மீகம், இயற்கை, அப்பாற்பட்ட ஆற்றல் என்றும் பேசப்பட்டு வருகிற நிலையில் கிடைத்த கருதுகோளில்தான் உங்கள், இறைநிலையின் உறைநிலை தான் இறப்பா? என்ற வினா முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதலெனப்டுவது இடமும் காலமும் என்பது தமிழ்அடிப்படை. இடம் என்பது எப்போதும் இடமே ஆகும். ஆனால் காலம் என்பது கோடான கோடி ஒன்றுகள் என்கிற நுட்ப நிலையில் அந்த ஒன்றுகள் இரண்டு நான்கு எட்டு என்று ஒருங்கிணைந்து எண்ணிக்கை மாற்றத்தால் இறை என்கிற நாற்திரங்கள் தோன்றின. அந்த நாற்திரங்களில் இருந்தே விண்மீன்கள் ஏழு கோள்கள், அவற்றில் ஒன்றான புவியில் வாழும் உயிரிகள் மரம் மட்டை நீங்கள் நான் அனைவரும் தனித்தனி தான்தோன்றிகளாக தனித்தனி கூட்டியக்கமாக பிறந்தோம். இறப்பு என்பது இறையாகிப் போதல், காலமாதல் என்பது காலமாகிப் போதல். இரண்டும் நாம் அடிப்படையாகிப் போதலைக் குறிக்கின்றன. நாம் பிறத்தல் என்பது புதியதொரு எண்ணிக்கையில் புதியதொரு தான்தோன்றி கூட்டியக்கமாக ஒருங்கிணைதல் ஆகும். இறத்தலில் அந்த ஒருங்கிணைப்பை அடிப்படைகள் துண்டித்துக் கொள்கின்றன. அனைத்தும்- தமிழ்முன்னோர் முதலெனச் சுட்டிய இடம் காலத்தில்- இயக்கமற்ற இடத்திற்கும் இயக்கமுடைய காலத்திற்கும் இடையிலான போரட்டங்களே. ஒருங்கிணைதல் காலத்தின் அடிப்படை. தகர்த்தல் இடத்தின் அடிப்படை. முதனெப்படுவது இடமும் காலமும் என்றால் முடிவெனப்படுவது பெருவெடியாகும்.
முதலெனப்படுவது இடமும் காலமும் என்கிற இரண்டையும் ஆகும்.
தனியான ஏதாவதொன்றிலிருந்தோ, இல்லாத ஒன்றிலிருந்தே பல்வேறு இயல்புகளில் பற்பல தோன்றியிருக்க முடியாது அல்லவா?
எடுத்துக் காட்டாக இறை என்றும் ஆற்றல் மூலங்கள் என்றும் தமிழர் பட்டியலிடும் நிலம், நீர், தீ, காற்று வௌ;வேறு இயல்பின அல்லவா?
தமிழ்முன்னோர் வெளியை எப்படி இயக்கம் என்று நிறுவ முயன்றார்கள் என்பது பெரிய ஆய்வாகும்.
தம்மின் தம்மக்களின் அறிவுடைமையைப் போற்றிக் கொள்ளும் தமிழ்முன்னோர் வழியில், தமக்குள்ளிருந்து வெளியாகி இயங்குகிற தம்பிள்ளைகளை கடவுளாக, சோயோனாக, பிள்ளையாராக, விசும்புத் திரமாகவும்- தமக்குள்ளிருந்து வெளிப்படும் உயிர்க்காற்றான மொழியைத் தாய்மொழியாக, தமிழாக, அறிவாகக் கொண்டாடுகிறோம் நாம்.
நமது பிள்ளைகள் நம்மை- இறை தொய்ந்தவர்களாக, தெய்வங்களாக, வீட்டு தெய்வமாக, குலதெய்வமாக, ஊர்த்தெய்வமாக காவல் தெய்வமாக, எல்லை தெய்வமாக, நாடாண்ட மன்னனாக கொண்டாடுவதைத் தமிழ்முன்னோர் தெய்வம் என்று தலைப்பில் தெரிவித்தனர்.
இறை என்பன நிலம், நீர், தீ, காற்று
தெய்வம் என்போர் அம்மா, அப்பா தொடங்கி முன்னோர்கள் என இறை தொய்ந்தவர்களும்- பிள்ளைகளும், தமிழும் என கடவுள் தொய்ந்தவர்களும் ஆகும்.
கடவுள் என்கிற விசும்புத் தெய்வம் தமிழாக, அறிவாக, பிள்ளைகளாக நம்மால் கொண்டாடப்படுகிறது.
இறை என்கிற நாம் நமது பிள்ளைகளால், முன்னோராக. குலதெய்வங்களாக கொண்டாடப்படுகிறோம்.
ஆக தெய்வம் என விசும்பு, நிலம், நீர், தீ, காற்று ஆகிய ஐந்திரங்களும் தமிழ்முன்னோரால் கொண்டாடப்பட்டன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,220.