தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். அவையே தசாவதாரம் அல்லது திருமாலின் பத்து அவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1.மச்ச அவதாரம்

2.கூர்ம அவதாரம்

3.வராக அவதாரம்

4.நரசிம்ம அவதாரம்

5.வாமன அவதாரம்

6.பரசுராமர் அவதாரம்

7.இராம அவதாரம்

8.பலராம அவதாரம்

9.கிருஷ்ண அவதாரம்

10. கல்கி அவதாரம் ஆகியவை ஆகும்.

மச்ச அவதாரம்

இது திருமாலின் முதலாவது அவதாரம் ஆகும். மச்சம் என்றால் மீன் ஆகும். கிருத யுகம் நடைபெறும்போது திருமால் மீன் வடிவில் தோன்றி வேதங்களையும், உலக உயிர்களையும் காப்பாற்றினார்.

குதிரை முகம் கொண்ட சோமுகாசுரன் என்ற அசுரன் படைப்பிற்கு ஆதாரமான வேதங்களை பிரம்மாவிடம் இருந்து எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்துவிட்டான். இந்நிலையில் உலகில் பிரளயம் ஏற்பட்டது.

சத்தியவிரதன் என்ற விஷ்ணு பக்தன் மூலம் சப்தரிஷிகள், மூலிகைகள், பலவிதமான வித்துக்கள் ஆகியவற்றைக் கொண்ட படகினை பிரளயத்திலிருந்து மச்சமூர்த்தி காப்பாற்றினார்.

மேலும் சோமுகாசுரனுடன் போரிட்டு வேதங்களை மீட்டு உலக உயிர்கள் படைப்புத் தொழிலை மீண்டும் பிரம்மனுக்கே வழங்கினார்.

இவ்வதார மூர்த்தியானவர் உடலின் மேல்பாகத்தில் நான்கு கைகளுடன் தேவரூபத்திலும், கீழ்பாகத்தில் மீனின் உருக்கொண்டும் அருள் புரிகிறார்.

திருப்பதிக்கு தென்கிழக்கே 70கி.மீ தொலைவில் நாகலாபுரம் என்னுமிடத்தில் வேதநாரணயன் சுவாமி கோவில் உள்ளது. இங்கே இறைவன் வேதநாராயணன் என்னும் பெயரில் மச்ச அவதாரத்தில் அருள்புரிகிறார்.

கூர்ம அவதாரம்

இத திருமாலின் இரண்டாவது அவதாரமாகும். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். இவ்வதாரம் கிருத யுகத்தில் நடைபெற்றது.

சிரஞ்சீவியாக வாழச் செய்யும் அமிர்தம் கிடைக்கும் பொருட்டு தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை இறைவனின் ஆணைப்படி கடைய ஆயத்தமானனர்.

அப்போது மந்திர மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்தனர். அப்போது மலை அதன் பாரம் தாங்காது கடலில் வீழ்ந்தது. திருமால் ஆமையாக கூர்ம அவதாரம் செய்து மலையைத் தாங்கி கடலையை கடைய துணைபுரிந்தார்.

இவ்வதார மூர்த்தியானவர் உடலின் மேல்பாகத்தில் நான்கு கைகளுடன் தேவரூபத்திலும், கீழ்பாகத்தில் ஆமையின் உருக்கொண்டும் அருள் புரிகிறார்.

ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் என்னும் ஊருக்கு அருகில் சுமார் 20கிமீ தொலைவில் ஸ்ரீகூர்மம் என்னுமிடத்தில் ஸ்ரீகூர்மநாதர் என்னும் பெயரில் கூர்ம அவதாரத்தில் அருள்புரிகிறார்.

வாரக அவதாரம்

இது திருமாலின் மூன்றாவது அவதாரம் ஆகும். இவ்வதாரம்

கிருத யுகத்தில் நடைபெற்றது. வாரகம் என்பதற்கு பன்றி என்று பொருள்.

இரண்யாட்சன் என்ற அரக்கன் பிரம்ம தேவரிடம் பெற்ற தவத்தின் வலிமையால் மூன்று உலகையும் ஆட்டிப்படைத்தான். இரண்யாட்சன் பூமியை எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் மறைத்து வைத்துவிட்டான்.

அப்போது பிம்மாதிதேவர்கள் எல்லோரும் இரண்யாட்சனிடமிருந்து தங்களையும், உலகஉயிர்களையும் காப்பாற்றுமாறு திருமாலிடம் வேண்டினர்.

இறைவன் வௌ;ளைநிறப் பன்றியாக வாரக அவதாரம் செய்தார். இரண்யாட்சனுக்கும் வாரக மூர்த்திக்கும் ஆயிரம் ஆண்டுகள் கடும் போர் நடந்தது.

இறுதியில் வாரகமூர்த்தி இரண்யாட்சனை வெற்றி கொண்டு பூமியை தன் கொம்புகளில் தாங்கி வெளிக்கொணர்ந்து உலக உயிர்களைக் காத்தார்.

இவ்வதார மூர்த்தியானவர் பன்றி முகத்துடன் கொம்புகளில் பூமியைத் தாங்கிய வண்ணம் நான்கு கைகளுடன் ஆஜானுபாகுவான உடல்வாகுடன் அருள் புரிகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் உள்ள லட்சுமி வராகப் பெருமாள் கோவிலில் வாரகமூர்த்தி அருள்புரிகிறார். ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வாரக ஷேத்திரமாகப் போற்றப்படுகிறது.

நரசிம்ம அவதாரம்

இது திருமாலின் நான்காவது அவதாரமாகப் போற்றப்படுகிறது. இவ்வதாரம் கிருத யுகத்தில் நடைபெற்றது.

நரசிம்மம் என்பதனை நரன் சிம்மம் என்று பிரிக்கலாம். நரன் என்றால் மனிதன் சிம்மம் என்றால் சிங்கம். நரசிம்மமூர்த்தி சிங்கத்தலை மற்றும் கைகளில் சிங்க நகம் கொண்டு மனித உடலுடன் அருள்பாலிக்கிறார்.

இரண்யகசிபு என்ற அரக்கன் பிரம்மதேவரிடம் சகாவரம் வேண்டி கடும்தவம் புரிந்தான். பிரம்மதேவர் பூமியில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் மரணம் என்பது நிச்சயம். ஆதலால் சகாவரத்திற்குப் பதில் வேறுவரம் கேட்குமாறு பணித்தார்.

இரண்யகசிபு தனக்கு மரணம் என்பது பகலிலோ, இரவிலோ, ஆயுதங்களினாலோ, உள்ளேயோ, வெளியிலோ, மனிதராலோ, விலங்குகளாலோ, முனிவர்கள் மற்றும் தேவர்களாலோ ஏற்படக்கூடாது என்ற வரத்தினைப் பெற்றான்.

தான் பெற்ற வரத்தினால் தனக்கு அழிவில்லை என்ற கர்வத்துடன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினான். இரண்யகசிபுவின் மகன் பிரகலாதன் திருமாலின் பக்தனாவனான். ஆதலால் இரண்யகசிபு பிரகலாதனை பலவழிகளில் கொல்ல முயன்றான்.

இறுதியில் ஒருநாள் அந்திவேளையில் பிரகலாதனிடம் உன் இறைவன் எங்கிருக்கிறார்? என்றான். பிரகலாதன் என் இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றான்.

அதற்கு இரண்யகசிபு தூணினைக் காட்டி இந்த தூணில் இருக்கிறானா? என்றான். அதற்கு பிரகலாதன் ஆமாம் என்றவுடன் தூணினை தன் கையில் வைத்திருந்த கதாயுதத்தால் பிளந்தான்.

அதிலிருந்து திருமால் சிங்க முகம் மனித தலையுடன் நரசிம்மாக வெளிப்பட்டார். இரண்யகசிபுவை வாயிற்படியில் வைத்து நகத்தால் வயிற்றைக் கிழித்துக் கொன்று உலக மக்களை துன்பத்திலிருந்து காப்பாற்றினார்.

நரசிம்ம அவதாரத்தின் மூலம் இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்தவன் என்பதும், பக்தியின் மூலம் இறையருள் பெறலாம் என்பதும் அறியப்படுகிறது.

மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள யோக நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் கோயில்கள் புகழ்பெற்றவை.

வாமன அவதாரம்

இது திருமாலின் ஐந்தாவது அவதாரமாகப் போற்றப்படுகிறது. இவ்வதாரம் திரேதா யுகத்தில் நடைபெற்றது. வாமனன் என்றால் குள்ளவடிவினன் என்பது பொருள்.

பலிச்சக்ரவர்த்தியின் கர்வத்தை அடக்கி அவருக்கு அருள்புரியவும், அதிதியின் வேண்டுகோளின்படி தேவர்களைக் காக்கவும் எடுத்த திருமாலின் அவதாரம் வாமன அவதாரம் ஆகும்.

பலிச்சக்ரவர்த்தியால் மூவுலகையும் ஆளுவதற்காக செய்யப்பட்ட யாகத்தில் மூன்றடி நிலத்தினை தானமாக வாமனன் கேட்டான். சுக்ராசாரியரின் சொல்லைக் கேட்டாமல் மூன்றடி தானம் தர மாபலி சம்மதித்தான்.

அப்போது இறைவன் திரிவிக்ரமனாக உருவம் கொண்டு வானத்தை ஓரடியாகவும், பூமியை ஓரடியாகவும் அளந்து மூன்றாவது அடியை பலிச்சக்ரவர்த்தியின் தலையில் வைத்து பாதளலோகத்திற்கு அரசனாக்கினார்.

வாமன அவதாரத்தில் அந்தணச்சிறுவனாக ஒரு கையில் தாழம்பூ குடையுடனும், மறுகையில் கமண்டலத்தைப் பிடித்தும் அருளுகிறார். காஞ்சிபுரத்திலுள்ள வாமனர் கோவிலில் இறைவன் வாமன அவதாரத்தில் காட்சி தருகிறார்.

பரசுராமர் அவதாரம்

இது திருமாலின் ஆறாவது அவதாரம் ஆகும். இவ்வதாரம் திரேதா யுகத்தில் நடைபெற்றது. இவர் கையில் கோடாரியுடன் காட்சியளிக்கிறார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கூற்றிற்கு உதாரணமானவர். இன்றும் மகேந்திர பர்வதத்தில் சீரஞ்சீவியாக தவம் புரிகிறார் என்று கருதப்படுகிறது.

துரோணர், பீஷ்மர், கர்ணன் போன்ற மகாபாரத்தில் உள்ள முக்கியமானவர்களின் குருவாகப் போற்றப்படுகிறார். இவர் ஜமத்கனி மற்றும் ரேணுகாதேவியின் நான்கு புதல்வர்களில் ஒருவர்.

தந்தை சொல்லை தட்டாது செய்பவர். தந்தை இட்ட ஆணைக்கிணங்க தாயையும், சகோதரர்களையும் கொன்று மீண்டும் அவர்களை தந்தையின் மூலம் உயிர்பித்தவர்.

தனது தந்தையைக் கொன்ற காத்தவீரியார்சுனன் அரசனின் மகன்களைக் கொன்றதோடு இருபத்தியோரு தலைமுறை சத்திரியர்களை கொன்று குவித்தார்.

சிவனிடமிருந்து பெற்ற பரசு எனப்படும் கோடாரி கையில் ஏந்தி அருள்பாலிக்கிறார். கன்னியாகுமரி கோவிலில் நீலநிறக் கல்லில் பரசுராம அவதாரத்தில் திருமால் அருளுகிறார்.

இராமவதாரம்

இது திருமாலின் ஏழாவது அவதாரம் ஆகும். இவ்வதாரம் திரேதா யுகத்தில் நடைபெற்றது. புகழ்பெற்ற இதிகாச நூலான இராமாயணம் இராமரை மையப்படுத்தியே எழுதப்பட்டது.

இறைவன் இவ்வதாரத்தில் ஏகபத்தினி விரதனாகப் போற்றப்படுகிறார். அடக்கம், பொறுமை, ஆற்றல், அரசாட்சி திறமை, எல்லா உயிர்களையும் சமமாக பாவித்தல் ஆகியவற்றிற்கு உதாரணமாகக் கொள்ளப்படுகிறார்.

அடுத்தவர் மனைவியின் மீது ஆசைப்படுபவன் இறுதியில் மரணத்தை பரிசாக அனுபவிப்பான் என்பதை இராவண வதம் மூலம் இவ்வதாரம் உணர்த்துகிறது.

தந்தையின் சொல்லைக் காப்பாற்ற வேண்டும், தீயசக்திகள் அழிக்கப்படும் ஆகியவற்றை இராமாவதாரத்தின் மூலம் இறைவன் உலகிற்கு உணர்த்தினார்.

இவர் சீதா, வட்சுமணன், அனுமான் ஆகியோருடன் கையில் கோதண்டமாகிய வில்லை ஏந்தி காட்சியளிக்கிறார். ராமேஸ்வரத்திலுள்ள கோதண்ட ராமர் கோவிலில் ராமாவதாரத்தில் இறைவன் அருளுகிறார்.

பலராமர் அவதாரம்

இது திருமாலின் எட்டாவது அவதாரமாகப் போற்றப்படுகிறது. இவ்வதாரம் துவார யுகத்தில் நடைபெற்றது. பலராமர் என்பவர் வசுதேவர் மற்றும் ரோகிணிக்கும் பிறந்த குழந்தையாவர்.

இவரே கிருஷ்ணா அவதாரத்தில் கிருஷ்ணனுடன் இருந்து கோகுலத்திலும், பிருந்தாவனத்திலும் பல லீலைகள் புரிந்தார்.

திருமால் பள்ளிகொள்ளும் ஆதிஷேசனே லட்சுமணனானகவும், பலராமனாகவும் அவதரித்தாகக் கூறுவதுண்டு.

இவர் கையில் ஏருடன் ஆஜானுபாகுவாகக் காட்சியளிக்கிறார். ஒரிஸாவில் கேன்டாபாரா என்னுமிடத்தில் பலராமனுக்கு கோவில் உள்ளது.

கிருஷ்ணன் அவதாரம்

திருமாலின் ஒன்பதாவது அவதாரம். இவ்வதாரம் துவார யுகத்தில் நடைபெற்றது. எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட அவதாரம். குழந்தைப் பருவ கிருஷ்ண லீலைகள் எல்லோராலும் இன்றைக்கும் ரசிக்கக் கூடியவை.

கம்சன் என்னும் அரக்கனை அழித்தல், பாண்டவர்களின் நியாயத்திற்கு போராடுதல், திரௌபதியின் மானத்தைக் காத்தல், அருச்சுனனுக்கு கீதையை உபதேசித்தல், மதுராவை உண்டாக்கி ஆட்சி செய்யல் ஆகியவை இவ்வதாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளாகும்.

மனித வாழ்க்கைக்குத் தேவையானவை அனைத்தும் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.

இவர் பெரும்பாலும் குழலினை ஊதிய வண்ணம் காட்சியளிக்கிறார். இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் கிருஷ்ணருக்கு வழிபாட்டுத்தலங்கள் உள்ளன.

கல்கி அவதாரம்

இது திருமாலின் பத்தாவது அவதாரமாக் கொள்ளப்படுகிறது. கலியுக முடிவில் பெருமாளின் இவ்வாதரம் நிகழும் என்று நம்பப்படுகிறது.

தர்மச்செயல்களின் அளவைவிட அதர்மத்தின் அளவானது அதிகரிக்கும்போது கல்கி பகவான் தோன்றுவார். அவர் வௌ;ளை நிறக்குதிரையின்மீது ஏறி கையில் கத்தி மற்றும் கேடங்களைப் பெற்றிருப்பார்.

உலகில் நடைபெறும் அதர்ம செயல்களை தடுத்து மக்களை நல்வழிப்படுத்துவார். அதன்பின் கிருத யுகம் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.