Show all

தமிழர்களே! மரபுகளைப் பின்பற்றுவதில் நமக்கு அதிக கவனம் தேவை. இது ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கும் தருணம்

தமிழர் மரபுகளை அறிவூட்டச் சார்பிலிருந்து, ஆதிக்கவாதிகளின் அடிமைப்பாட்டுக்கு மடைமாற்றும், ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கும் தருணத்தில் தமிழர்தம் நடப்பு வாழ்க்கைப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எச்சரிக்கை தமிழர்களே.
 
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா விடுதலை பெற்ற நாளிலிருந்து ஒன்றிய ஆட்சி- இந்தியாவின் தென் கோடியில் உள்ள தமிழ், வடக்கில் உள்ள வங்காளம் போன்ற தேசிய இனங்களின் கூட்டணி ஆட்சியாக முன்னெடுக்க முயற்சி எடுக்கப்படவேயில்லை. 

ஒன்றியத்தில்- ஹிந்தி ஆதிக்க வெறியர்களின் கூடாரமாக இருந்துவரும் காங்கிரசின் ஆட்சி நேற்று இருந்தது. இன்றோ ஹிந்தி ஆதிக்க வெறியோடு, ஹிந்துத்துவா ஆதிக்க வெறியும் கொண்ட பாஜகவின் ஆட்சி தொடர்கிறது. 

இந்தியாவின் மொழிஅடையாளம் ஹிந்தி என்பதாக உலகினருக்கு அறிவித்து வந்தது காங்கிரஸ். இன்றைக்கு இந்தியாவின் மொழிஅடையாளம் ஹிந்திதான், ஆனால் மதஅடையாளம் மதச்சார்பின்மை அல்ல; இந்தியாவின் மதஅடையாளம் ஹிந்துத்துவா என்று நிறுவ முயன்று வருகிறது பாஜக.  

காங்கிரஸ் ஹிந்தி திணிப்புக்கான அதிகாரத்தை, அரசியலமைப்புச் சட்டத்தில் முன்னெடுத்து இருக்கிறது. தமிழகத்தில் ஹிந்தியின் அதிகாரம் தடுக்கப்பட்டு இருக்கிறது என்றால், அதற்கு ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகமும், பல்வேறு சட்டப் போராட்டங்களில் திமுகவும், நேருவிடம் இருந்து பெற்ற, “ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மக்கள், ஹிந்தியைத் தொடர்பு மொழியாக விரும்பாத வரை, ஆங்கிலமே தொடர்பு மொழியாக நீடிக்கும்” என்ற உறுதி மொழியும், அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22மொழிகள் இந்தியாவின் அலுவல் மொழிகள் என்கிற அரசியலமைப்பு சட்ட அடிப்படையும், மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்ட அடிப்படைகளுமே காரணங்கள் ஆகும்.

ஆனால் இந்த அடிப்படைகளில் இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் ஹிந்தியை தூக்கி எறியமுடியும் என்றும், அறிவூட்டத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத, மூடநம்பிக்கைகளின் கருவூலமான ஹிந்தியை தூக்கி எறியவேண்டியது கட்டாயம் என்கிற உணர்வுகளுக்கு தற்போதுதாம் கொஞ்சம் கொஞ்சமாக முன்வந்து கொண்டிருக்கின்றன.

நல்லவேளையாக காங்கிரஸ் ஹிந்தித்திணிப்பை முன்னெடுத்த அளவிற்கு, ஆட்சியில் முதன்மை பெற்றிருந்த நேருவின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட மதஅடையாளம் தேவைப்படாத அல்லது பேணமுடியாத நிலையில், பார்ப்பனிய ஆதிக்கத்தின் பாற்பட்ட ஹிந்துத்துவாவை முன்னெடுக்க முடியவில்லை. அதனால் இந்தியா- அரசியலமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மை நாடாக அமைய முடிந்தது.    

அரசியலமைப்பு சட்ட அடிப்படையில் இந்தியா மதச்சார்ப்பற்ற நாடு. இங்கே அரசியலமைப்பு சட்ட அடிப்படையாக ஹிந்துத்துவா உள்ளிட்ட எந்த மதத்தையும் தூக்கிப்பிடிக்க முடியாது. அதனால் சமூக அடிப்படையாக, நடைமுறையில் இருக்கிற மரபு அடிப்படையாக பாஜக ஹிந்துத்துவாவை இந்தியாவின் மதஅடையாளமாக முன்னெடுக்க கடுமையாக முயன்று வருகிறது. ஹிந்துத்துவாவை இந்தியாவின் மதஅடையாளமாக்கும் நோக்கத்திற்கு பல்வேறு துணை சட்ட வரைவுகளை அரங்கேற்றி வருகிறது. 

முதல் எனப்படுவது இடமும் காலமும் என்றனர் நம் தமிழ்முன்னோர். அதையே தான் ‘முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே’ என்று தொல்காப்பியரும் தெரிவித்திருப்பார். 

இடம் அடிப்படையில் தமிழர்கள் ஓரை என்ற பகுப்பு முறையைப் பின்பற்றினார்கள். நாம் வாழும் புவி, ஞாயிறுகோளைச் சுற்றிவரும் பாதையை பனிரெண்டு பிரிவுகளாக பிரித்து அவற்றுக்கு பனிரெண்டு தமிழ் மாதங்களின் பெயர்களைச் சூட்டினார்கள். அந்த வகையான இடம் அடிப்படை கொண்ட  சித்திரை ஒன்று தமிழ்ப் புத்தாண்டு, ஆடி பதினெட்டு நீர்ப்பெருக்குத் திருவிழா, தை முதல்நாள் பொங்கல் திருவிழா ஆகிய இந்த விழாக்களை, நாட்களை யொட்டி முன்னெடுத்தார்கள். 

காலம் அடிப்படையில் தமிழர்கள் நாள்மீன் என்ற பகுப்பு முறையைப் பின்பற்றினார்கள். புவி சுற்றிவரும் பாதையில் காணப்படுகிற நாள்மீன் கூட்டங்களை அதற்கு அடையாளமாக பயன்படுத்தினார்கள். அதற்கு தமிழர் கண்ட நாள்மீன் கூட்டங்கள் 27 ஆகும்.  இடம் அடிப்படையில் நாட்களை யொட்டி மேற்கண்ட மூன்று விழாக்களை கொண்டாடிய தமிழர்கள்- காலம் அடிப்படையிலான நாள்மீனை யொட்டி கொணர்ந்த ஒரு விழாதான் கார்த்திகை குளிர் மாதத்தில், அடுப்பு (பரணி) நாள்மீனில் கொண்டாடும் விளக்கேற்றுத் திருவிழாவாகும்.  

அறிவூட்டம் மிக்க இந்தச் செய்திகள், பார்ப்பனியர் வருகைக்குப் பின் கட்டுக்கதைகளுக்கும், கற்பனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு அந்த புனைத்திறன்கள் அடிப்படையிலேயே இன்று விளக்கேற்றுத் திருவிழா இன்றுவரை பரப்பிட முயலப்பட்டு வருகிறது. 

தமிழர்கள் தொடர்ந்து விளக்கேற்றுத் திருவிழா கொண்டாடி வருகிறார்கள். ஆனால், தமிழ்முன்னோர்களின் அறிவூட்டம் மிக்க செய்திகளை மீள்உருவாக்கம் செய்ய முனையாமலும், பார்ப்பனியர்கள் வலிந்து இணையம் வரை திணித்துவரும் அந்த கட்டுக்கதைகளுக்கும், கற்பனைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட அந்த புனைத்திறன்கள் அடிப்படையிலும் முனையாமலும், மரபு அடிப்படையாக தமிழர்கள் தொடர்ந்து விளக்கேற்றுத் திருவிழா கொண்டாடி வருகிறார்கள்.    

நேற்று தமிழகம் முழுவதும், மாலைப் பொழுதில், அனைத்து வீடுகளிலும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு, கார்த்திகை குளிர் மாதத்தில், அடுப்பு (பரணி) நாள்மீனில் கொண்டாடும் விளக்கேற்றுத் திருவிழா சிறப்பாக முன்னெடுக்கப் பட்டது.

இப்படித் தமிழகம், பண்பாட்டு கலாச்சாரத்தின் எந்த நடவடிக்கைகளையும்- தமிழ்முன்னோர்களின் அறிவூட்டம் மிக்க செய்திகளை மீள்உருவாக்கம் செய்ய முனையாமலும், பார்ப்பனியர்கள் வலிந்து, இணையம் வரை திணித்துவரும் அந்த கட்டுக்கதைகளுக்கும், கற்பனைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட அந்த புனைத்திறன்கள் அடிப்படையிலும் முனையாமலும், மரபு அடிப்படையாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். 

பெரியார் காலத்திலிருந்து திராவிடர் கழகம்,  தமிழ்முன்னோர்களின் அறிவூட்டம் மிக்க செய்திகளை மீள்உருவாக்கம் செய்ய முனைப்பு காட்டாமல், பார்ப்பனியர்கள் வலிந்து திணித்துவரும் அவர்களின் தொல்கதை சார்ந்த கட்டுக்கதைகளும், கற்பனைகளுமான அந்தப் புனைத்திறன்களை கேள்விக்குள்ளாக்குவதையே தங்கள் மேலான பணியாக செயலாற்றி வந்து இருகிறார்கள். அன்றைய காலக்கட்டத்தில் அது பல சாத்தியங்களை தமிழர்களுக்கு சாதகமாக்கியது வரலாறுதான். 

 அதே வகையில் கறுப்பர் கூட்டம் முன்னெடுத்த, கந்தர் சஷ்டி கவசத்தில் ஆபாசம் என்கிற செய்தியைத் திசை திருப்பி, அந்த ஆபசமே தமிழர் மரபு என்பதைப் போல நிறுவும் வகைக்கு பாஜக கறுப்பர் கூட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், திராவிடர் கழகம் கைபிசைந்து நிற்பதற்கும் காரணமாக இருக்கிறது- பெரியார் அடிப்படையில் வந்த கட்சியான அதிமுக- இன்றைக்கு பாஜக தமிழகத்தில் காலுன்ற தோள் கொடுத்துவருவதால்.

சமூக அடிப்படையாக, நடைமுறையில் இருக்கிற மரபு அடிப்படையாக பாஜக ஹிந்துத்துவாவை இந்தியாவின் மதஅடையாளமாக முன்னெடுக்க கடுமையாக முயன்று வரும் இந்த நிலையில், மரபுகளைப் பின்பற்றுவதில் நமக்கு மிகஅதிக  கவனம் தேவை. நாம் பின்பற்றும் மரபுகள் தமிழர் அறிவூட்டம் சார்ந்ததாக இல்லாமல், பார்ப்பனியர்கள் வலிந்து இணையம் வரை திணித்துவரும் அந்த கட்டுக்கதைகளுக்கும், கற்பனைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட அந்த புனைத்திறன்கள் அடிப்படையிலானதாக அமைந்து விடக் கூடாது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.