கடவுளுக்கும் மனித அறிவுக்கும் என்ன தொடர்பு? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்கின்றேன். 23,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இதுவரை பல்வேறு தளங்களில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே மிகச்சிறந்த, அல்லது பொருள் பொதிந்த, அல்லது தமிழ் மெய்யியலை உள்வாங்கிய, அல்லது நான் விரும்பிய கேள்வி என்று பாராட்டுவேன். ஆம்! கடவுள் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல் மட்டுமே. இதற்கான பொருத்தமான நேரடி மொழிபெயர்ப்பை உலகின் எந்த மொழிகளிலும் தேடக் கிடைக்காது. ஆக கடவுள் குறித்து தெளிவடைய தமிழில் மட்டுமே தேட வேண்டும். கடவுள் என்பது பேரறிவு. மனிதனின் அறிவை- ஆறாம் அறிவு என்று கொண்டால். கடவுளின் அறிவை- ஏழாம் அறிவு என்று போற்றிக் கொள்ள முடியும். ஆக கடவுள் என்பது அறிவியக்கம் மட்டுமே. அது பொருளோ, அஃறிணை உயிரியோ ஆண்பாலோ பெண்பாலோ அன்று. மற்ற மற்ற மதங்கள் சுட்டுகிற அவர்களின் தெய்வங்களை- இறை என்றோ கடவுள் என்றோ பொருத்த முடியாது. இறை என்ற தலைப்பிலும், கடவுள் என்ற தலைப்பிலும் தமிழ் முன்னோர் சுட்டுகிற செய்தி முற்றிலும் வேறானது. மற்ற மற்ற மதங்கள் சுட்டுகிற அவர்களின் தெய்வங்கள் குறித்து அந்தந்த மதங்கள் சொல்லுகிற செய்தி வேறானது. இந்தக் கட்டுரையில் கடவுள் குறித்தே விளக்க முயல்வதால் தெய்வம் குறித்தும், இறை குறித்தும் இந்தக் கட்டுரையில் விளக்கப் போவதில்லை. கடவுள் என்றால் கடந்தும் உள்ளும் இருப்பது என்றே பொருள். கடவுள் ஆண்பாலோ பெண்பாலோ அல்ல. எல்லாவற்றுக்குள்ளும் வெளியிலும் இருக்கிற வெளியின் மூன்று நிலைகளையே கடவுள் என்கிறது தமிழ். அந்த மூன்று நிலைகள்: 1.தான் தோன்றி இயக்கம் இல்லாத, எல்லையில்லாத, நிலம் நீர் தீ காற்று நீங்கள் நான் என்று எல்லாவற்றுக்குள்ளும் வெளியிலும் இருக்கிற வெளி. 2.அந்த வெளியில் குறிப்பிட்ட எண்ணிக்கை உடைய, தான்தோன்றி இயக்கம் உடைய, நிலம் நீர் தீ காற்று நீங்கள் நான் என்று எல்லோராலும் இயக்கம் பெற்ற இரண்டாவது நிலை விண்வெளி. 3.தனக்கு இயக்கம் வழங்கிய அனைத்தையும் இயக்க எதிரியக்க முனைப்பான விசும்பு என்பனவாகும். விசும்புதல் என்றால் குழந்தைகள் அழும்போது அடக்க முடியாமல் எழுகிற அந்த விசும்புதலைக் கொண்டதுதான் விசும்பு. நியூட்டனின் மூன்றாவது விதி நிகழக் காரணம் இந்த விசும்புதான். எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை என்பதுதானே அந்த விதி. அந்த விதியை முன்னெடுப்பதுதான் இந்த விசும்பு. ஆகவே கடவுள் என்பதை வேறு எவற்றோடும் பொருத்த முடியாது. கடவுள் என்பது கணினியில் உள்ள வண்தட்டு போன்றது. அது இல்லாத ஒன்றாக, எல்லை இல்லாத ஒன்றாக இருந்து, தான்தோன்றி இயக்கம் உடைய நிலம், நீர், தீ, காற்று ஆகிய நாற்திரங்களால் இயக்கம் பெற்று அவைகளை இயக்கிக் கொண்டிருக்கிறது. உண்மையில் தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருள் ஆகும். உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம் என்று தமிழ் முன்னோர் முன்னெடுத்தனர். அந்த மந்திரம் குறித்து எழுதுவது தனிக் கட்டுரைக்கான தலைப்பாகும். ஐந்து அகவை வரையிலுமான குழந்தைகள், இந்த மந்திர ஆற்றல் மூலமாகத்தான் தன் ஐந்து அகவைக்குள் தன் தாய்மொழியை முழுமையாகக் கற்றுக் கொள்கிறது. தன் தாய்மொழியை தான் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதான மென்பொருளை வடிவமைத்து அதை தனக்கான தலையெழுத்தாக விசும்பில் எழுதிவிட்டு சாதிக்கிறது. ஆனால் ஐந்து அகவைக்கு முன்பாகவே, குழந்தைகளின் விருப்பம் இல்லாமலேயே, பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை அந்தக் குழந்தையின் மீதாகத் திணிக்கும் முகமாக மழலையர்ப் பள்ளிகளில் அந்தக் குழந்தைகளைக் கையளிக்கின்றார்கள். நீங்கள் உங்கள் தலையெழுத்தை யாரோ எழுதுவதாக நம்புவதைப் போல அந்தக்குழந்தையும் தன்னுடைய தலையெழுத்தை பெற்றோர், ஆசிரியர், சுற்றம், நட்பு, உங்களால் அடையாளம் காட்டப்படுகிற தெய்வம் என்று யார்யாரோ தம்முடைய தலையெழுத்தை எழுதுகின்றனர் என்ற முடிவுக்கு வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து, எதிர்பார்ப்புகளை நிறைத்துக் கொண்டு, வாழ்க்கையைத் தொலைத்து விட்டு பிழைப்பு நடத்தத் தொடங்கி விடுகிறது. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்கிற தமிழர் மந்திரச் செய்தியை மறந்து விட்டு, தனக்கான நன்மையைப் பிறர் தரவில்லையே என்றும், மற்றவர்கள் தீமையையே தருகிறார்கள் என்றும் புலம்பி அந்தப் புலம்பலையே தன்னுடைய தலையெழுத்தாக வடிவமைக்கத் தொடங்கி அதையே திரும்பப் பெறுகின்றன. இதை மாற்றியமைத்து நமது குழந்தைகளின் தலையெழுத்தை அவர்களே எழுதிக் கொள்ளும் முகமாகவே நம்மை முன்னெடுக்க, தமிழ் முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற மந்திரம் குறித்து நாம் அறிந்து கொள்ள முயன்றால் அது தனித் தலைப்பாகும். ஆக கடவுள் என்பது ஆண்பாலோ பெண்பாலே அல்ல. கடவுள் நம்மை படைத்தான ஒன்றும் அல்ல. கடவுள் வெளி, விண்வெளி, விசும்பு என்ற மூன்று நிலைகளைக் கொண்டது. நம்பிக்கைக்கு உரியதல்ல கடவுள். அறிந்து பயன்படுத்திக் கொள்வதற்கானது கடவுள். கடவுள் எல்லை இல்லாதது. கடவுள் தான்தோன்றி இயக்கம் உடையது அல்ல. கடவுள் நம்மிலிருந்து இயக்கம் பெற்று நம்மை இயக்குகிறது. முதல் எனப்படுவது இடமும் காலமும் என்று தமிழர் அடையாளப் படுத்துவதில் இடம் என்பது கடவுள். நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திர ஆற்றல்கள் தான்தோன்றி இயக்கதால் காலம் காட்டுகின்றன.