01,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சான்றோர்த்தளம் அமைப்பு நூலாசிரியர்கள், திறனாய்வாளர்கள், கட்டுரையாளர்கள், மொழி மற்றும் இயல்அறிவு சார்ந்த ஆய்வு மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் ஆய்வரங்கம் முன்னெடுக்கும் நோக்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த ஆய்வரங்கம், அழைப்பில் தெரிவிக்கப் பட்டிருந்த பொருள்நிரல் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை மிகச்சரியாக பதினோரு மணிக்கு கூகுள் பெருக்கம் (சூம்) செயலியில் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. ஆய்வரங்க நிகழ்ச்சியை மன்னர் மன்னன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து தொடங்கி வைத்தார்கள். முதலாவதாக இயக்குநர் தமிழியலன் அவர்கள் இணையத் தமிழ் என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து முனைவர் க.மாதவன் அவர்கள் தமிழர் அறப்பண்பாட்டில் பவுத்தம் என்ற தலைப்பிலும், திரு ம.க.வெங்கட்ராமன் கேத்தரின் மேயோ அவர்கள் ஏற்பும் மறுப்பும் என்ற தலைப்பிலும், முனைவர் பெ.வெற்றிநிலவன் அவர்கள் நவீன நாடகங்களின் அண்மைப் போக்குகள் என்ற தலைப்பிலும், முனைவர். விழிகள் சி.இராசக்குமார் அவர்கள் தாலாட்டுப் பாடல்களின் இன்றைய நிலை என்ற தலைப்பிலும் சிறப்பான ஆய்வுரைகளை வழங்கினர். கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு ஆர்வலர்களின் கலந்துரையாடலுடன் ஆய்வரங்ம் நன்றியுரையுடன் சிறப்பாக முனனெடுக்கப் பட்டது.