உடலுழைப்பு குறைந்து, நிருவாகப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு, உடல் சூடேறி தொடக்க காலத்தில் ஏற்பட்ட நோய்தாம் பித்தம் அதிகரித்தல். அந்த காலத்தில் பித்தம் அதிகரித்தல், பீதியளிக்கும் நோயாக இருந்தது போல. ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற சொலவடை உருவாகி ஒவ்வொருவரும் எதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் உணவில் என்று மருந்து சொல்லத் தொடங்கினார்கள். 21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: மொழியுணர்வு, முன்னேற்ற வழிமுறை, மருத்துவ ஆலோசனை மூன்றும் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் ஊள்ளார்ந்து இருக்கின்ற உணர்வுகள். சிறிய தூண்டல் ஏற்பட்டாலே சிறப்பாக வெளிப்படத் தொடங்கும். ஏனென்றால் பழந்தமிழகத்தில் அறிஞர் சான்றோர், புலவர் என்ற அறிவுத்தளத்தில் இயங்கிய அனைவரும், மொழியியல், முன்னேற்றக்கலை, மருத்துவம் மூன்றிலும் ஒருசேர சிறந்து விளங்கினார்கள். தமிழகத்தில் இன்றைய தேவையாக இருப்பது, ‘எதைத்தின்றால் கொரோனா தடுக்கலாம்’ என்கிற புதிய சொலவடையாகும். செல்பேசியைத் தடவினால் ஆயிரம் ஆயிரம் ஆலோசனைகள் இதைத் தின்றால் கொரோனா தடுக்கலாம் என்று சொல்லப்பட்டு வருகின்றன. ‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்பதுதாம் தமிழர்களுக்கு தொடக்க காலத்தில் இருந்தே பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிற மருத்துவ முறையாகும். தமிழர்தம் ஒவ்வொரு உணவு தயாரிப்பு முறையிலும் அது துலங்குவதைப் பார்க்க முடியும். எடுத்துக்காட்டாக, உருளைக் கிழங்கு அதிகம் சாப்பிட்டால் வாயுப்பிடிப்பு உண்டாகும் என்பதால் அந்த உணவில் அதிகம் வாயுப்பிடிப்புக்கு மருந்து உணவான பூண்டு அதிகம் சேர்க்கப்பட்டு சமைக்கப்படும். சரி கொரோனாவுக்குத் தடுப்பாக நம் தமிழர்கள் சொல்லும், உணவுப் பொருளான ஏலக்காய் மருந்துக்கு வருவோம். 5000 ஆண்டுகளாக கபம் தீர்க்கும் மருத்துவப் பொருளாக தமிழகத்திலும், தங்கத்தை ஈட்டித்தரும் வணிகப் பொருளாக உலகமெங்கும் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு மூலிகை உணவுதாம் ஏலக்காய். இது ஒரு வாசனை பொருள் மட்டும் அல்லாமல் நம் உடலுக்கு நன்மைகளை அளிக்க கூடிய ஒரு உணவு பொருளாகவும் அமைகிறது. சித்த மருத்துவத்தில் அதிக முதன்மைத்துவம் வாய்ந்தது இந்த ஏலக்காய். இந்த சின்ன அளவிலான ஏலக்காயில் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், புரதம், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம் மற்றும் வைட்டமின் ஏ,பி,சி மூன்றும் உள்ளன. இப்படி சத்துக்கள் மிகுந்த ஏலக்காயை வாயில் போட்டு மென்று வர ஏராளமான நோய்கள் குணமாகும். (!) பசி எடுக்காமல் இருப்பவர்கள், உணவு சரியாக செரிமானம் ஆகாதவர்கள் தினமும் ஏலக்காயை வாயில் போட்டு மென்று வர உடலின் செரிமான இயக்கம் அதிகரிக்கும். செரிமான உறுப்பை வலுவடைய செய்து, செரிமான நீரை சுரக்க செய்யும். இதன் மூலம் நன்றாக பசி எடுக்கும். வயிறு வலி, வயிறு உப்புசம் இருப்பவர்கள் அன்றாடம் ஒரு ஏலக்காயை மென்று வந்தால் இந்த சிக்கல்கள் குணமாகும். (!) அதிக மார்பு சளி காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் அதிக இருமலினால் அவதிப்படுபவர்கள் ஏலக்காயை தினமும் மென்று வர நெஞ்சில் உள்ள சளி கரைந்து வெளியேறும். மற்றும் சளியை உருவாக்கும் பாக்டீரியா, நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு. (!) செரிமான உறுப்புகளில் ஏதேனும் கோளாறு இருந்தால் வாயில் துர்நாற்றம் ஏற்படும். எனவே இந்த சிக்கல்கள் உள்ளவர்கள் அன்றாடம் ஒரு ஏலக்காயை சாப்பிட்டு வர துர்நாற்றத்தை போக்கி, நல்ல மணத்தை கொடுக்கும். (!) நமக்கு அடிக்கடி நோய்கள் உருவாகுவதற்கு முதன்மைக் காரணம் நம் உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்கள் தான். அப்படிப்பட்ட நச்சுக்களை வெளியேற்றும் தன்மை இந்த ஏலக்காயில் உள்ளது. எனவே அன்றாடம் ஏலக்காய் எடுத்து வந்தால் நச்சுக்கள் வெளியேறுவதோடு உடல் புத்துணர்ச்சி பெரும். (!) வாய்ப்புண், பற்சொத்தை, பல் வலி, ஈறுகளில் வீக்கம் போன்ற சிக்கல் உள்ளவர்கள் அன்றாடம் ஒரு ஏலக்காயை உமிழ்நீருடன் சேர்த்து மென்று வர வேண்டும். (!) வாகனங்களில் பயணம் செய்யும் போது மற்றும் வெயிலில் செல்லும் போது ஒரு சிலருக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும். இதற்கு ஏலக்காய் ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. (!) மூச்சுக் சிக்கல் (ஆஸ்துமா) நோயாளிகள் அன்றாடம் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரும்போது மூச்சு விடுதலில் இருக்கும் சிரமம் படிப்படியாக குறையும். சுவாசம் சீராகி சுவாசம் தொடர்பான சிக்கல்கள் தீரும். நோய்க்கு இடங்கொடேல் என்பது பாரதியின் புதிய ஆத்திச்சூடி. கொரோனாவிற்கு இடங்கொடேல் என்பது தற்போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஆத்திச்சூடி. (!) வெளியில் செல்லாமல் இருப்பது, கட்டாயத் தேவைகளுக்கு வெளியில் செல்லும் போது பாதுகாப்பு பொருட்களை கருவிகளை தவறாமல் பயன்படுத்துவது, வெளியில் சென்று வந்ததும் முழுமையாக தூய்மைப்படுத்திக் கொள்வது, அடிக்கடி கையைத் தூய்மைப்படுத்துவது போல அன்றாடம் ஒரு ஏலக்காயை மென்று தின்பது என்கிற நடவடிக்கையையும் செய்யலாம் என்கின்றனர் அனுபவ ஆலோசனை மருத்துவமாகத் தமிழர்கள்.